தமிழ் மாலை

வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

வியாழன், 21 செப்டம்பர், 2023

மாலை (55) போட்டித் தேர்வும் தமிழ்ப் பாடமும் !

 போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடம்


கட்டாயமாக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு !


இந்த அறிவிப்பில் உள்ளடங்கியுள்ள நோக்கங்களை முகநூல் நண்பர்களில் எத்தனை பேர் அறிவார்கள் என்பதை நானறியேன். இந்த அறிவிப்பை ஆழ்ந்து ஆராய்ந்தால் மட்டுமே அதனுடைய தாக்கத்தை முழுமையாக உணர முடியும் !

 

தமிழ்நாட்டில் அரசுப் பணி, அரசுச் சார்புப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பினை பல முகமைகள் நடத்தி வருகின்றன. அவை: (01) தமிழ்நாடு தேர்வாணைக் கழகம் (02) தமிழ்நாடு காவலர் தேர்வு வாரியம் (03) தமிழ்நாடு கூட்டுறவு ஆட்சேர்ப்பு ஆணையம் (04) தமிழ்நாடு மின் வாரியம் (05) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (06) தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (07) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (08) இவை போன்று இன்னும் பல !

 

தமது துறை சார்ந்த பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கையில், மேற்காணும் முகாமைகள், ஏதோவொரு தேர்வை நடத்தி, பிற மாநில ஆளிநரைக் கூடப் பணியமர்த்தும் அவலம் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்து வந்தன. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத வடமாநிலத்தவர்கூட தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவிப் பொறியாளராகத் தேர்வு செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்தது !

 

தமிழ் தெரியாதவர்களைப் பணியில் அமர்த்திவிட்டு, ஈராண்டுகளுக்குள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட ஞாயமற்ற போக்கு நிகழ்ந்தேறியது !

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழக அரசின் அறிவிப்பு. கல்வித் தகுதியில் தமிழை இணைத்தால் கருங்காலிக் கூட்டம் நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்றுவந்ததைக் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கண்டோம் !

 

இதற்கு மிக நேர்த்தியாக விடை காண்கிறது தமிழக அரசின் இப்போதைய அறிவிப்பு. தமிழ்நாட்டில் அரசின் ஆட்சிமொழி தமிழ் என்பதால், தமிழ் தெரிந்தவர்களைப் பணியில் அமர்த்துதல் என்பதை எந்த நீதி மன்றமும் தடுக்க முடியாது !

 

பள்ளியிறுதி வகுப்பு வரைத் தமிழில் படித்திருக்க வேண்டும் என்று ஆணையிட்டால், ஆங்கில வழிக் கல்வியளிக்கும் பள்ளிகளின் கூட்டமைப்பு நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற முயலும்.

 

அதனால், கல்வித் தகுதியுடன் தமிழை இணைக்காமல் ”போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் கட்டாயம்” என்பதை அறிமுகப்படுத்தினால் அதை எதிர்க்க முடியாது. ஏனெனில், ஆங்கிலவழிப் பள்ளியில் படித்தவர்கள் / படிப்பவர்கள் தனியாகத் தமிழை படித்து, போட்டித் தேர்வில் பங்கேற்க முடியுமல்லவா ?

 

புற்றீசல் போலப் பெருகிவரும் ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள், இனி தமிழைப் புறக்கணிக்க முடியாது. தமிழையும் ஒரு பாடமாகக் கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும். தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்ல வேண்டுமெனில் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்னும் நிலையில், பெற்றோர்கள், ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளில் தம் பிள்ளைகளைச் சேர்க்க இனித் தயங்குவார்கள் !

 

காலப் போக்கில் தமிழ்நாட்டில் பதின்மப் பள்ளிகள் காணாமற் போகும் என்று எதிர்பார்க்கலாம் !

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”தமிழ் மாலை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு 2054,கன்னி (புரட்டாசி) 04]

{21-09-2023

-----------------------------------------------------------------------------------

 

All r