வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

நால்வகை விரகுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நால்வகை விரகுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஜூன், 2022

மாலை (11) நால்வகை விரகுகள் (விரகு = தந்திரம்) !

இன்மொழி, புகழ்மொழி, தருமொழி, ஒறுப்பு !

 ----------------------------------------------------------------------------------


‘விறகு என்றால் தெரியும்; அது என்ன விரகு ? ”ஏதாவது ஒரு உபாயத்தைக் கையாண்டு  சிக்கலிலிருந்து மீண்டு வா “ என்கிறோமே, அந்த உபாயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தான்  தான் ”விரகு” !

 

சரி ! அது என்ன நால்வகை விரகுகள் ? அவைதான், சாம, பேத, தான, தண்டம் என்பவை. தமிழில் “இன்மொழி”, புகழ்மொழி”, “தருமொழி”, ஒறுப்பு !

 

“நீ நல்ல குழந்தை ஆயிற்றே ; அழகான குழந்தை ஆயிற்றே; அம்மா சொல்லைத் தட்டாத குழந்தை ஆயிற்றே; இங்கே வா ! இப்படி உட்கார்; ஒரு பாட்டுப் பாடு !” எனக் கூறிக் குழந்தையின் குறும்பை அடக்குவது ஒரு முறை. இதையே “சாமம்” என்பர். இதைத் தமிழில் “இன்மொழி” எனக் கூறலாம்!

 

“நீ நல்ல பெண்மணி; அடுத்த வீட்டுப் பெண் இருக்கிறாளே, அவள் கெட்ட பெண்; நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்; பக்கத்து வீட்டுப் பாவை இருக்கிறாளே அவள் அசடு. நீ அறிவுடையவள்; அவள் முழு மூடம்; என் கண்ணல்ல; இங்கே வா ! அமைதியாக இரு; அம்மா வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டிரு.” என்று அடுத்தவரோடு ஒப்பிட்டு, வேறுபடுத்தி, அடக்குவதும் ஒரு முறை – இதனைப் “பேதம்” என்பர். இதை “புகழ்மொழி” எனக் கூறலாம் !

 

“என் கண்ணல்லவா நீ; என் கற்பகம் அல்லவா நீ; இங்கே வா;  உனக்குப் பால் தருகிறேன்; பழம் தருகறேன். நீ அமைதியாக இருந்தால் கொத்துச் சரமாய் முத்து மாலை வாங்கித் தருவேன்; கோவிலுக்குக் கூட்டிச் செல்வேன்; குளத்துக்கு அழைத்துச் செல்வேன், என்ற முறையில் இன்னது தருவேன்; சொன்ன படி நடந்தால் எனக் கூறி அடக்குவதும் ஒரு முறை. இதைத் “தானம்” என்பர். இதை “தருமொழி” என்று கூறலாம் !

 

சாம, பேத, தானம் என்ற மூன்று முறைகளிலும் மக்களுக்கு ஒழுக்க முறைகளை – கட்டுப்பாட்டு உணர்வை -  கடமைகளை எடுத்து உரைப்பது  அறநெறி; எடுத்துரைப்பது ஒன்றே இதன்முழுமையான மெய்ப்பொருள் – அதாவது தத்துவம் !

 

இப்போது புரிகிறதா, “சாம, பேத, தான, தண்டம்” என்றால் என்ன என்று ? உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எந்தவிதமான விரகு முறையைக் கையாளுகிறீர்கள்; இனியும் கையாளப் போகிறீர்கள். சொல்லுங்களேன் பின்னீடு வாயிலாக !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 25]

{08-06-2022}

----------------------------------------------------------------------------------