வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

இல்லத்தில் எழில் பேணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இல்லத்தில் எழில் பேணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூன், 2022

மாலை (18) இல்லத்தில் எழில் பேணல்!

அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் !

 ----------------------------------------------------------------------------------

ஒவ்வொரு மனிதனும் அழகாகத் தோற்றமளிக்கவே விரும்புகிறான். தன்னைக் காண்பவர்களின் கருத்தைத் தன்பால் ஈர்க்க வேண்டும் என்னும் ஆவலே இதற்குக் காரணம். மனிதன் என்ற சொல் இங்கு ஆடவர், மகளிர் என இருபாலரையுமே குறிக்கும் !

 

உச்சி முதல் பாதம் வரை தன் அழகு, சுடர் விட்டு  மிளிர, மனிதன் எடுத்துக் கொள்ளும் அக்கறைக்கு அளவே இல்லை ! முடியலங்காரம், உடையலங்காரம், அணியலங்காரம், என ஒவ்வொன்றுக்கும் செலவிடும் நேரம் மிகுதி ஆகிக்கொண்டே போகிறது !

 

இத்தகைய அழகுணர்ச்சி தவறன்று ! கட்டாயம் தேவை தான் ! ஏனெனில், அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் ! அவனது வாழ்க்கை சுவையற்றுப் போகும். உப்புச் சுவை சேராத உணவுப் பண்டமாக தாழ்வுற்றுப் போகும் !

 

அழகுணர்ச்சி, அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறதா, என்றால், “ஆம்” என்று தான் சொல்லமுடியும் ! ஆனால், அதன் அளவு தான் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது !

 

ஒரு நாள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஈராண்டுகளுக்கு முன்பு கட்டப் பெற்ற கற்காரைக் கூரை (CONCRETE MOLDING ROOF) வீடு. முன்றிலைக் (PORTICO) கடந்ததும் எதிர்ப்படும் வேலைப்பாடு அமைந்த நிலைவாயில் ! உள்ளே அகலறை (DRAWING HALL). வலப்புறம் சாளரம் (WINDOW)  அருகில் 4’ X 4’ மிசைப் பலகை (TABLE). அதன் எதிரில் அன்னக் கழுத்து அமரிருக்கை (CHAIR)  ! அறையின் இடப்புறம் நீண்ட இணையணை (SOFA) !

 

இணையணையை அடுத்து நான்கு ஞெகிழி (PLASTIC) நாற்காலிகள் ! தலைவாயிலுக்கு நேர் எதிரில் காட்சி மாடம் (SHOW CASE) ! அதையடுத்து மரத் தளியில் (WOODEN STAND) தொலைக்காட்சிப் பேழை !  மற்றும் இன்னொரன்ன பொருள்கள் !

 

நான் சென்ற நேரத்தில் நண்பர் வீட்டிலில்லை ! அவர் மனைவி தான் என்னை வரவேற்றார் ! ஆனால் நான் அமர்வதற்கு இருக்கை எதுவும் வெட்புலமாக (VACANT) இல்லை !  அன்னக் கழுத்து அமர் இருக்கையில் (SWAN NECK TYPE CHAIR) குழந்தைகளின் புத்தகப் பைகள் இடம் பிடித்திருந்தன ! இணையணையில்  பழைய செய்தித் தாள் கட்டுகள் சிலவும், அழுக்குத் துணிகள் பொதியும், பழைய கோரைப் பாய் ஒன்றும் காணப்பட்டன !

 

ஞெகிழி நாற்காலிகளில், அட்டைப் பெட்டிகள் சில இடம் பிடித்திருந்தன ! அவற்றுள் ஒன்றை வெட்புலமாக்கி என்னை அமரச் செய்தார் நண்பரின் மனைவி ! சில நிமிடங்களில் நண்பர், கையில் காய்கறிக் கூடையுடன் வந்தார். ”வாருங்கள் அன்பரசு !   நலமாக இருக்கிறீர்களா ?” என்று உசாவியவர் “இதோ வந்து விடுகிறேன்” எனச் சொல்லிக் காய்கறிக் கூடையுடன் உள்ளே சென்றார் !

 

கிடைத்த ஓரிரு நிமிடங்களில் அகலறையை நோட்டமிட்டேன் ! மிசைப் பலகையில் மூடியின்றித் திறந்த நிலையில் ஒரு மைத் தூவல் (INK PEN) ! அருகில் ‘அயோடக்சு’ (IODEX BOTTLE)  குப்பி ஒன்று  கவிழ்ந்த நிலையில்  ! ஐந்தாறு தலைவலி மாத்திரைகள் பொதிக்கப் பெற்ற அட்டை (STRIP) !. நாள்காட்டியில் (DAILY SHEET) கிழித்த அன்றைய நாளுக்கான தாள் ! சுருட்டிய நிலையில் ஒரு கைக்குட்டை ! குளம்பி (COFFEE)  அருந்திய கழுவாத கோப்பை !

 

நான்கைந்து சில்லறைக் காசுகள் ! மின்கட்டண அட்டை  ! கொட்டிக் கிடக்கும் ஒரு கைப்பிடி  பயின் வளையங்கள் ((RUBBER BANDS) ! எழினிக்கு (MOBILE) மின்னேற்றம் செய்யும் சூலி (CHARGER)  !  சிறிய பீங்கான் தட்டு ஒன்றில் கொஞ்சம்  கதம்ப நொறுவை (MIXTURE) ! ஊர்தி ஓட்டுகையில் அணியும் தலைச் சீரா (HELMET) ! இன்னும் சிற்சில பொருள்கள் !

 

சுவரெங்கும் கரிக்கோடுகள் (PENCIL LINES), ஊதாக்கோடுகள் (MARKER LINES)  ! குழந்தைகளின் கைவண்ணம் போலும் ! அரத்தம் (BLOOD) குடித்த கொசுக்கள் நசுக்கப் பெற்ற  சிவப்புத் தடங்களும்  சுவரில் இடம் பிடித்திருந்தன ! அழுக்குப் படிந்த பந்துகள் சுவரில் மோதிப் பதித்த, கலங்கலான வரிகள் இக்கால ஓவியங்களாய்க் (MODERN ART) காட்சியளித்தன ! குழந்தைகளின்  காலணிகள் திசைக்கு ஒன்றாகத் திரும்பிக் கிடந்தன !

 

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நகரம் போல் அந்த வீட்டின் அகலறை (DRAWING HALL) காட்சியளித்தது ! அகலறையே (DRAWING HALL) இப்படி இருந்தால், அடுக்களை (KITCHEN), துயிலறை (BED ROOM), குளியலறை (BATH ROOM) பூசை அறை (POOJA ROOM) போன்றவை எத்துணை அழகாகக் காட்சியளிக்கும் என்று மனதிற்குள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருக்கையில், நண்பர் உள்ளிருந்து வந்தார் ! ஒரு நாற்காலி சுமந்து கொண்டிருந்த அட்டைப் பெட்டிகளைக் கீழே இறக்கி வைத்து விட்டு, அதில் அமர்ந்தார் !

 

சில நிமிட உரையாடல்களுக்குப் பின், அவர் தந்த குளம்பியை (COFFEE) மனக் குமட்டலுடன் சிறிது ஒப்புக்கு அருந்திவிட்டு, என் இல்லம் வந்து சேர்ந்தேன் ! துப்புரவும் ஒழுங்கும் இல்லாத வீட்டில், குளம்பியின் ஒவ்வொரு துளியும் கற்றாழைச் சாறாக மனதிற்குள்  கசந்தது !

 

நண்பர் மிடுக்கானவர் ! அழகாகத் தலைவாரி, உடையுடுத்தி, சில கூடுதல் ஒப்பனைகளையும் செய்து கொண்டு காண்போரைக் கவரும் வனப்புக் கொண்டவர் ! தன் தோற்றத்தைப் பொறுத்தவரை அழகுணர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தும் இயல்பு வாய்ந்தவர் ! அவரது இல்லமா இப்படி ?

 

நேர்த்தியாக உடை உடுத்தி உலா வரும் ஒருவர், குப்பைக் கிடங்கிற்குள் குடி இருப்பதைப் போல் அன்றோ நண்பரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன ! தனது தோற்றத்தை எழிலாக வெளிப்படுத்த விரும்பும் அவர், தனது இல்லத்தைத் எழில் மிகுந்த மாளிகையாகப் பேணுவதில் ஏன் அக்கறை செலுத்துவதில்லை ?

 

குப்பைக் கிடங்குகள் நாய்கள்  உறங்கும் இடமன்றோ ? நண்பர் தன்னை நாயின் நிலைக்குத் தாழ்த்திக் கொள்வது, அவரது அறியாமையாலா ? அக்கறை இன்மையாலா ? அல்லது அவரது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடா ?

 

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 06]

{20-06-2022}

---------------------------------------------------------------------------------