வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

மாலை (42) பெரியார் பேசுகிறார் !

இது, தன்னைப் பற்றி பெரியாரே எழுதிய தன்னிலை விளக்கம் ! படித்துப் பாருங்கள் நண்பர்களே !

 

ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...


"என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லா தவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம்" !

 

"எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்" !

 

"தேவை என்றுபட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள், என் வழியும் அதுதான்" !

 

"உங்கள் ஜாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன். அம்மா யார், உன் அப்பா யார், உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார், அவர்கள் பின்னணி என்னஎன்றெல்லாம் விசாரணை நடத்துகிறது. அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. அப்படிப்பட்ட மோசமான ஜாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக் கூடாது என்பேன்" !

 

"உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால்; வேறு மதங்களை நம்புபவர் களையோ ஒரு மதத்தையும் நம்பாதவர் களையோ பழிக்கும் என்றால்; அப்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் வரும் புண்ணியமோ பலனோ எனக்கு வேண்டாம் என்று அடித்துச் சொல்வேன்" !

 

"மற்றபடி எனக்கும் கடவுளுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கல் சண்டையோ பூர்வ ஜென்மத்துப் பகையோ இல்லை" !

 

"என் நாட்டில் சிலருக்கு மட்டும்தான் சுதந்திரம் உண்டு, வேறு சிலருக்கு இல்லை என்றால்; சிலரே இந்தியர்கள் வேறு சிலர் அந்நியர்கள் என்றால்";


"ஏழைகள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்றால்; பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்றால்; ஒருவரால் அச்சமின்றி எழுதவோ பேசவோ முடியாது என்றால்; இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தேச துரோகம் என்றால்"


"நான் என்ன செய்தாலும் நீ என் பக்கம் தான் நின்றாக வேண்டும் என்று என் நாடு என்னிடம் எதிர்பார்க்கும் என்றால்; அப்படியொரு நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லை என்பேன்" !

 

"என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத் துகிறதா? பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறதா? பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவு களைத் திறந்துவிடுகிறதா? வேறு பாடின்றி எல்லோரையும் அணைத்துக் கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன்.இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன்" !

 

"கோயிலில் சிலர் நுழையலாம், வேறு சிலர் நுழையக்கூடாது என்று சொன்னால், அப்படி ஓர் இடம் எனக்குத் தேவையில்லை என்று என் வழியில் போய்விடுவேன்" !

 

"கடவுளோ காந்தியோ நேருவோ அல்லது வேறொரு மகானோ,யாராக இருந்தாலும் ஒருவர் செய்வது தப்பு என்று என் மனது க்குப் பட்டால் தப்பு என்றே அடித்துச் சொல்வேன்" !


"மனிதர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குத்தனமான கருத்து என்று தெரிந்துவிட்டால் அது எவர் வாயில் இருந்து வந்திருந்தாலும் அதை வலுவாக எதிர்ப்பேன்" !

 

"ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும்,   எந்தஇசையும், எந்தவழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கை முறையும் எனக்கு வேண்டாம்" !

 

"எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறாயே, உனக்கு என்ன தான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள்" !

 

"ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் ஒன்று விடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்" !

 

"எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன்" !

 

"எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்" !


"இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால் .....? பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனை யாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட வில்லை" !

 

"வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்து விட்டேன்" !

 

"இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லா மல் எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்ஒவ்வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் - தெரியும். தெரிந்தேதான் வந்தேன்" !

 

"நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை , எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன்" !

 

"ஒருவர் காதிலும் விழா விட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்" !

 

"நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்ன தான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்" !

 

"வலிக்குமே என்று அஞ்சிக்கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடு கிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைசிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள்" !

 

"உங்கள் ஒவ்வொரு வரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்து வருகிறேன்" !

 

"நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக் காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன் ! கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித் தொட்டிகளில் எல்லாம் நடப்பேன்" !

 

"எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள்" !

 

------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு :2053, மடங்கல் (ஆவணி) 10]

{26-08-2022}

-----------------------------------------------------------------------------------

பெரியார் ஈ.வெ.இரா.



மாலை (41) முகநூலில் விடுக்கப் பெறும் நட்புக் கோரிக்கைகள் !

 

முகநூலில் புதிய நண்பர் ஒருவர் எனக்கு நட்புக் கோரிக்கை விடுத்திருந்தார் !


அவரைப் பற்றி அறிந்து கொண்ட பின்பு தானே அவரது கோரிக்கையை ஏற்பதா மறுப்பதா என்பதை நான் முடிவு செய்ய இயலும் !

 

அவரது முகநூல் பக்கத்தைத் திறந்து பார்த்தால், அவரைப் பற்றிய செய்திகள் தெரியுமல்லவா ? திறந்து பார்க்கிறேன் ! அறிமுகச் செய்திகள் அடங்கிய பகுதி பூட்டப் பட்டு (PROFILE LOCKED) இருக்கிறது. ABOUT என்பதைத் தொடுகிறேன். அப்பாடா ! திறந்து கொண்டது !

 

அவரைப் பற்றிய முகாமையான செய்தி ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அவர் ஆண்மகனாம் ! MALE என்னும் குறிப்பிலிருந்து தெரிந்து கொண்டேன் ! பெயரைப் பார்த்தாலே அவர் ஆணா பெண்ணா என்பது தெரிந்து விடப்போகிறது ! அப்புறம் எதற்கு MALE என்னும் குறிப்பு !

 

பிற விளத்தங்கள் (விவரங்கள்) எதுவுமே தெரியவில்லை ! அவர் ஊர் எது ? பிறந்த நாள் எது ? அகவை என்ன ? படிப்பு என்ன ? பணி என்ன ? மணமானவரா ? எதையும் வெளிப்படுத்த அவர் அணியமாக இல்லை ! ஆனால் என் நட்பு அவருக்கு வேண்டும் !

 

அவரைப் பற்றிய விளத்தங்கள் (விவரங்கள்) எல்லாம் படைத்துறைச் செய்திகளைப் போல ( இராணுவ இரகசியங்கள் போலும் ! ) மிகவும் கமுக்கமானவை ! ஆனால் அவர் ஆண்மகன் என்பது மட்டும் கமுக்கச் செய்தி அன்று ! பிறருக்குத் தெரிவதில் அவருக்கு இடையூறு ஏதுமில்லை !

 

ஆகா என்ன தன்முனைப்புச் சிந்தனை ! உலகிலேயே இவர் தான் பெரிய அறிவாளி ! பணப்பேழையைப் பூட்டி வைப்பது போலத் தன்னைப் பற்றிய செய்திகள் வெளியே கசிந்து விடாமல் பூட்டி வைக்கும் இந்த பெருந்தகையாளருக்கு என் நட்பு வேண்டுமாம் !

 

தன்னைப் பற்றிய செய்திகளைப் பூட்டி வைத்துக் கொள்ளும் இந்தப் பெரிய மனிதர் அவர் வீட்டில் எதை எதை எல்லாம் பூட்டி வைத்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பார்க்கக் கூடச் மனம் கூசுகிறது !

 

முகநூலில் கணக்கு வைத்திருப்போர், தம்மைப் பற்றிய செய்திகளை வெளிப்படையாகத் தெரிவித்தால் தான், அவருடன் நட்பு வட்டத்தில் இணைய, யாரும் முன்வருவார்கள் ! இது ஏன் அவர்கள் சிந்தையில் உறைப்பதில்லை ! விளத்தங்களைப் பூட்டி வைத்துக் கொள்வோருக்கு நண்பர்கள் தான் எதற்கு ?

 

எதைப் பூட்டி வைத்துக் கொள்வது, எதைப் பூட்ட வேண்டியதில்லை என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த மேதைகளுக்கு நட்பு வட்டம் எதற்கு ? முகநூற் கணக்கு எதற்கு ? முகமில்லாத இத்தகைய மூஞ்சூறுகள் முகநூல் தோட்டத்தில் நிரம்பவே உலவுகின்றன !

 

இன்னொரு வகை முகநூல் கணக்காளர்கள் இருக்கின்றனர். எங்க வீட்டுக் காரரும் கச்சேரிக்குப் போகிறார்என்பது போல, சிலர் கணக்குத் தொடங்கித் தன் அரிப்பைத் தீர்த்துக் கொள்வார்கள். அறிமுகப் படத்தை (PROFIE PHOTO) ஏழு முறையாவது மாற்றுவார்கள். அப்புறம் கும்பகர்ணனுக்குத் தம்பியாகிப் போவார்கள் !

 

நாம் முகநூலைப் புரட்டிக் கொண்டே வரும்போது சில பெயர்கள் நம் கண்களில் பட்டுத் தொலைக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு நம்முடன் பழகிய நண்பராக இருப்பார். அவர்கள் பெயரையும் படத்தையும் பார்க்கும் போது நம் மனதிற்குள் ஒரு இன்ப மின்னல் பளிச்சென்று தோன்றி மறையும். நட்புக் கோரிக்கை விடுப்போம். ஆவலுடன் காத்திருப்போம் !

 

அவரிடமிருந்து மறுமொழியே வராது ! காத்திருந்து காத்திருந்து நம் கண்களெல்லாம் பூத்துப்போகும். அப்புறம் தான் நம் சித்தையில் உறைக்கும், நாம் நட்புக் கோரிக்கை விடுத்தது கும்பகர்ணத் தம்பிக்கு என்று ! அவரும் MALE என்னும் குறிப்பை மட்டும் விட்டுவிட்டு ஏழெட்டு ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருப்பார் ! எழினி (MOBIE) எண்ணையும் பூட்டி வைத்திருப்பார் யாரும் தொந்தரவு செய்யக் கூடாதாம் !

 

முகநூல் தோட்டத்தில் தேடிப்பார்த்தால், நிரம்பவும் கும்பகர்ணத் தம்பிகள் தென்படுவார்கள் ! இவர்களுக்கெல்லாம் முகநூற் கணக்கு எதற்கு ? மற்றவர்களின் எரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்கா ?

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி), 10]

{26-08-2022}

---------------------------------------------------------------------------------



 



 



புதன், 3 ஆகஸ்ட், 2022

மாலை (40) சொல் விளக்கம் - “ஓசி” எந்த மொழிச் சொல் ?

தமிழ்ச் சொல்லே ! ஓசி என்பது தமிழ்ச் சொல்லே !

 

தமிழில் உல் என்னும் வேர்ச் சொல் உள்ளொடுங்கல் என்னும் கருத்தை உணர்த்தும் !


உல் – உல்கு – உல்குதல் = உள் வளைதல்; உள் ஒடுங்குதல். உல் – உல்லி – ஒல்லி = மெலிந்து ஒடுங்கிய உடம்பு !

 

ஒடுங்குதல். உல் - உல்லி - ஒல்லி = மெலிந்து ஒடுங்கிய உடம்பு !

 

உல் - உள் - உள்கு - உக்கு - உக்கம் = ஒடுங்கிய இடுப்பு !

 

உல் - ஒல் - ஒல்கு - ஒற்கம் = தளர்ச்சி, வறுமை, அடக்கம் !

 

உல் - ஒல் - ஒற்கு - ஒஞ்சு - ஒச்சி - ஒசி - ஒசிதல் = நாணுதல். (மனம் உள் ஒடுங்கித் தளர்ந்த நிலை தானே நாணம்). ”அவள் ஒசிந்து ஒசிந்து நடந்து வந்தாள்” என்னும் இல்க்கிய வழக்கை நோக்குக !

 

உல்  - ஒல்  - ஒல்கு - ஒச்சி - ஒசி  - ஓசி = நாணம் நெஞ்சைக் கவ்விட ஒன்றைக் கேட்டுப் பெறுதல். ஒரு பொருளை வேறொருவரிடமிருந்து கிட்ட்த்தட்ட இரந்து பெறுதல் (யாசகம்) போல் கெட்டுப் பெறுவதை “ஓசி” கேட்டுப் பெறுதல் என்கிறோம் !

 

காசு கொடுத்து வாங்காமல் ஒரு பொருளைக் கிட்டத்தட்ட  தானமாகக் கேட்டுப் பெறுவதே “ஓசி” எனப்படும். ஓசி கேட்பவர் நெஞ்சை நிமிர்த்திக் கேட்க முடியாது. தன்னிடம் காசு இல்லாத நிலையில் அல்லது காசு இருந்தும் செலவழிக்க முடியாத  நிலையில் அல்லது செலவு செய்ய மனமில்லாத நிலையில் உணவுப் பொருளையோ அல்லது தனக்குத் தேவைப்படும் வேறெந்தப் பொருளையுமோ கெஞ்சிக் கேட்டுப் பெறுவது என்பது இரத்தலுக்கு (யாசகம் கேட்டல்) சமம் தானே !

 

இச்செயல் அவரது மனத்தை உள்ளொடுங்கச் செய்து, நாணத்தை இயல்பாகவே ஏற்படுத்தும் அல்லவா ? ஓசி = நாணம் நெஞ்சைக் கவ்விட ஒன்றைக் கேட்டுப் பெறுதல் என்று முன்பத்தி ஒன்றில் விளக்கம் தந்திருப்பது இப்போது புரிகிறதல்லவா ?

 

ஓசி என்னும் செயல் இங்கு ஆகுபெயராக்க் கேட்டுப் பெறும் பொருளுக்கு ஆகி வந்துள்ளது. எனவே “ஓசி” என்பது தமிழ்ச் சொல்லே ! அங்கிலச் சொல்லோ அல்லது வேற்று மொழிச் சொல்லோ அன்று !

 

--------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் மாலை” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 18]

{03-08-2022}

---------------------------------------------------------------------------------------

 


 

மாலை (39) சொல் விளக்கம் - நாட்டுப் பெண் ! மாட்டுப் பெண் !

திருத்தமில்லாப் பேச்சு !   பொருளும் மாறிப் போச்சு  !

 

நாட்டுப்பெண், மாட்டுப் பெண் என்ற சொற்களைப் பலரும் கேட்டிருப்பீர்கள். குறிப்பாக பிராமணப் பெண்களிடம்  இச்சொற்கள் அடிக்கடி புழங்கும் !

 

நாட்டுப்பெண், மாட்டுப்பெண் என்றால் என்ன ? உங்களுக்குத் தெரியுமா ?

 

நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில்  நடவு செய்வதற்காக, வயலில் ஒரு சிறு பகுதியில் நாற்று விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் சென்ற பிறகு அந்த நாற்றுகளைப் பறித்து,  பக்குவப் படுத்தப்பட்ட  வேறு வயல்களில் நடுவார்கள் !

 

நாற்றைப் பறித்து எடுத்துச் சென்ற பின்பு அந்த இடம் வெட்புலமாக (VACANT) இருக்கும் அல்லவா ? அந்த இடத்தைப்  பக்குவப் படுத்திவிட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்கும் நாற்றைக் கொண்டு வந்து இங்கு நடுவார்கள். இது தான் வேளாண் பெருமக்கள் பின்பற்றும் நடைமுறை !

   

இங்கு என்ன நிகழ்கிறது ? ஒரு வயலில் வளர்ந்திருக்கும் நாற்றைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் நடுகிறார்கள். அங்கு அது செழித்து வளர்ந்து பலன் தருகிறது. வளர்வது ஓரிடம்; நெல்மணியாம் வித்துக்களை விளைவிப்பது இன்னோரிடம் !

 

நம்வீட்டில் பிறந்து வளரும் நமது பெண்ணும் நாற்றுப் போன்றவள். வளர்வது நம்வீட்டில்; வாழ்வதும் பிள்ளைகளைப் பெற்றுக் குலம் தழைக்கச் செய்வதும்  இன்னொரு வீட்டில். அவள் வளர்வது ஓரிடம்; வாழ்வது  இன்னோரிடம்.  நம் வீட்டு நாற்றினைப் பறித்து இன்னொரு வீட்டில் நடுகிறோம். நாற்று அங்கு தன் வாழ்க்கையைத் தொடர்கிறது !

 

நாற்றுப் பெண்என்ற சொல்லின் பெயர்க் காரணம் புரிகிறதா ? “நாற்றுப் பெண்என்ற சொல் நாட்டுப் பெண்ஆகி பலரது நாவிலும் பொருள் புரியாமலேயே இன்னும் புழங்கி வருவது விந்தையிலும் விந்தை !

 

நாற்றுபோன்ற பெண் நாற்றிஎனப்பட்டாள். நாற்றிஎன்பது திரிந்து நாத்திஆகிவிட்டது. நாற்று அன்னார்என்றால் நாற்று போன்றவள் என்று பொருள். நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = நாத்தனார் நாத்தனார்பெயர்க்காரணம் இப்பொழுது விளங்குகிறதா ?

 

நம்வீட்டில் விளக்கேற்றிய  நமது  பெண் திருமணமாகி இன்னொரு வீட்டுக்கு வாழச் சென்றுவிட்டாள். நம் வீட்டில் விளக்கேற்ற ஒரு மாற்றுப் பெண் வேண்டாவா ? நாற்றாகிச் சென்றுவிட்ட நமது வீட்டுப் பெண்ணுக்கு மாற்றாக வேறொரு ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை நம் வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவருவது தானே முறை !

 

நாற்றுப் பெண் விளக்கேற்றிய வீட்டில், அவளுக்கு மாற்றுப் பெண்ணாக மருமகள் வருகிறாள். இந்த மாற்றுப் பெண்ணைத் தான் பலரும் மாட்டுப் பெண்ஆக்கி விட்டார்கள் !

 

சிலர் பேச்சுத் தமிழை எழுத்திலும் கொண்டு வருகிறார்கள்.  அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இத்தகைய மொழிச் சிதைவை அனுமதித்தால், “நாட்டுப் பெண்”, “மாட்டுப்பெண்போன்ற பொருளற்ற சொற்கள் தமிழில் பல்கிப் பெருகிவிடும். தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்களாக !

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 18]

{03-08-2022}

-------------------------------------------------------------------------------


நாட்டுப்பெண் (நாற்றுப்பெண்)



மாட்டுப்பெண் (மாற்றுப்பெண்)



மாலை (38) சொல் விளக்கம் - “ங”ப் போல் வளை !

பொருள் பொதிந்த உவமை !  பொருள் புரியாதோர்  பேராளம் !

 

ஔவையார் அருளிய ஆத்திச் சூடியில் 15 –ஆவதாக இடம் பெறுவதுப் போல் வளை என்பது. இதற்கு என்ன பொருள் ! தமிழ் நெடுங் கணக்கில்என்ற உயிர்மெய் எழுத்தும் ஒன்று. , ஙா, ஙி, ,ஙீ, ஙு, ஙூ, ஙெ,,ஙே, ஙை, ஙொ, ஙோ,, ஙௌ,, ங் என்னும் 13 எழுத்துகளிருந்தாலும் தமிழ்ச் சொற்களில் பயன்படுபவை  , ங் ஆகிய இரண்டு எழுத்துகள் மட்டுமே !

 

= குறுணியைக் குறிக்கும் குறி; குறுணி என்பது முன்பு வழக்கிலிருந்த  முகத்தல் அளவியில் ஒரு மரக்கால் என்பதைக் குறிக்கும் சொல். ஙகரம் = குறுணியளவு; ஙனம் = இடம், தன்மை, விதம், வகை; இம்மூன்று சொற்களே ஙகரத்தை முதலாகக் கொண்டு அமைந்துள்ளவை. இங்ஙனம், அங்ஙனம், உங்ஙனம் போன்ற சொற்களில்ங்”, ”இரண்டு எழுத்துகளும் சொல்லின் இடையில் வருகின்றன !

 

மேற்கண்ட இரு எழுத்துகளன்றிகர வரிசையில் உள்ள எஞ்சிய 11 எழுத்துகளும் வேறு தமிழ்ச் சொல் எதிலும் வருவதில்லை. வேறு எந்தச் சொல்லிலும் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ ஆகிய 11 எழுத்துகளும் வருவதில்லை. என்றாலும் தமிழ் நெடுங்கணக்கில் (அரிச்சுவடி) ”வரிசையில் 13 எழுத்துகளும் இடம் பெறுகின்றன. எந்தச் சொல்லிலும் பயன்படுத்த இயலாத 11 எழுத்துகளையும் ங என்னும் எழுத்து அரவணைத்து அரிச்சுவடியில் இடம் பெறச் செய்கிறது !

 

பயனற்ற தன் இன எழுத்துகளை கரம் விட்டுக் கொடுக்காது,  தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெறச் செய்துவிடுகிறது. ஒரேயொரு கரத்துக்கு இருக்கும் இன உணர்வு நமக்கு இருக்கிறதா ?  இல்லை ! யார் எப்படிப் போனால் என்ன ? நாமும் நம் பிள்ளைகளும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற தன்னல உணர்வு தமிழனிடத்தில் தலைதூக்கி நிற்கிறது !

 

இவ்வாறு எதிர்காலத்தில் நிகழும் என்று அன்றே ஔவையாருக்குத் தெரிந்திருந்தது போலும் ! அதனால் தான் அன்றே அறிவுரை சொன்னார்ப் போல் வளை என்று ! ”உன் இனத்தாரினால் உனக்குப் பயன் ஏதும் இல்லையென்றாலும் அவர்களை விட்டுக்கொடுக்காதே; அவர்களையும் அரவணைத்துச் செல். அவர்கள் அழிந்தால் நீயும் அழிந்து போவாய்”. இதுதான் ஔவையார் நமக்குச் சொல்லாமற் சொன்ன அறிவுரை !

 

பிறந்த குழந்தை கண் விழித்ததும் இன்றைய தமிழன் அதன் வாயில் புகட்டுவது A for Apple அல்லவா ? ? ”ப் போல் வளை என்பதைப் படிக்காத தமிழன்,  படித்திருந்தாலும், ஆங்கிலத்துக்கு அடிமையாகி மயங்கிக் கிடக்கும் தமிழன், தமிழுணர்வு அற்றுப்போன தமிழன், தன் இனத்தாரை அரவணைத்துச் செல்வது நடக்கக்கூடியா செயலா என்ன ?

 

--------------------------------------------------------------------------------------

 

பண்டைத் தமிழகத்தில் கர வரிசையில் இடம்பெற்றுள்ள 13 எழுத்துகளும் சொற்களில் பய்ன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அதனால் தான் தமிழ் நெடுங்கணக்கில்கரம் இடம் பெற்றிருக்கிறது. காலப் போக்கில், ஔவையார் காலத்திற்கு முன்பே தமிழனின் கருத்தின்மை காரணமாககர வரிசை எழுத்துகள் இடம் பெற்ற சொற்கள், வேறு பல சொற்களைப் போல் அழிந்துபட்டிருக்க வேண்டும். !

 

அன்றாடம் நாம் நமது உரையாடலில் ஆங்கிலத்தை அகற்றினாலே, தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போகும் நிலை வராது ! இற்றைத் தமிழன் இதை உணரவேண்டும் !


-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

{vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்மாலைவலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 18]

{03-08-2022}

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

-------------------------------------------------------------------------------------------------------------