ஒரு மொழியின்
வளம் அஃது எத்தனை நூறாயிரம் (இலட்சம்) சொற்களைப் பெற்றிருக்கிறது என்பதைப்
பொறுத்து மதிப்பிடப் படுகிறது. அத்தனைச் சொற்களுக்கும் வேர்ச்சொல் என்று ஒன்று
இருக்க வேண்டும் !
இவ்வாறு பல நூறாயிரக் கணக்கில் சொற்கள் இருப்பதால்தான் தமிழ் வளமான மொழி என்று அறிஞர்களால் போற்றப்பெறுகிறது !
தமிழ் அகரமுதலியில் வேர்ச்சொல் இல்லாத ஒரு சொல் காணப்படுமேயானால் அது தமிழல்லாத பிறமொழிச் சொல்லாகத்தான் இருக்க முடியும் என்பதை நாம் உணரவேண்டும் !
எடுத்துக்காட்டாக வளைதற் கருத்தை உணர்த்தும் ”குல்” என்னும் வேரிலிருந்து பிறந்தது “குனி” என்னும் சொல். குல் > குன் > குனி = குனிதல் = உடல் முன்னோக்கி வளைதல். ஆனால் நம்மில் பலரும் பயன்படுத்திவரும் “ரகசியம்” என்னும் சொல்லுக்கு வேர்ச் சொல் என்ன என்பதை எவரும் சொல்ல முடியாது. ஏனெனில் இச்சொல் தமிழ்ச் சொல்லே அன்று !
தமிழில் வேர்ச் சொல்லினின்று பிறந்த பொருள் பொதிந்த சொற்கள் நூறாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றுள் பலவும் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. ஆனால் காலப் போக்கில் அத்தகைய சொற்களில் பலவும் வழக்கிறந்து போய்விட்டன. பல ஆயிரம் சொற்கள் வழக்கிலிருந்து மறைந்துகொண்டு வருகின்றன !
வழக்கொழிந்து போன சொற்களுக்கு எடுத்துக் காட்டுகள் பல சொல்ல முடியும். சிலவற்றை மட்டும் இங்குப் பட்டியலிட்டிருக்கிறேன் – அவ்வவற்றிற்குரிய பொருளுடன் !
(01) அடிபுதை அரணம் = SHOE.(பெரும்பாண்.69)
(02) அயிலகம் (MESS) = புறநானூறு.399.
(03) அல்லங்காடி (Evening Bazaar)=மதுரைக்காஞ்சி.544.
(04) அற்சிரம்
(முன்பனிக் காலம்)=குறுந்தொகை.82.
(05) ஆர்வலர்
(இரசிகர்)=புறநானூறு.12.
(06) இருள்மதி
(அமாவாசை) = பரிபாடல்.11:37,
(07) ஈனில் (MATERNITY HOME)
= குறுந்தொகை.85:3,.
(08) உள்ளீடு (INPUT) = பரிபாடல்.2.12
(09) எண்மதி (அஷ்டமி)
= பரிபாடல்.11:37.
(10) கடகம் (BRACELET) = புறநானூறு.150:21,.
(11) கரி (WITNESS) = சிலப்பதிகாரம்.புகா.இந்.131,
(12) கலிங்கம் (PANTS) = புறநானூறு.383
(13) தமியன் (INDIVIDUAL) : அகநானூறு. 78:11,
(14) நாளங்காடி (DAY-BAZAAR) = மதுரைக்காஞ்சி.430,
(15) புட்டில் (BOTTLE) = திருமுரு.191.,கலித்தொகை.80:8,
(16) புனைமுடி (WIG)= பரிபாடல்.13:2)
(17) மணிக்கலன் (BOTTLE) = பரிபாடல்.10:19.
(19) மூதாளர் (SENIOR CITIZEN)
= புறநானூறு.243. முல்.54
(20) விழுத்தண்டு = WALKING STICK பெரும்பாண்.170,
இந்தச் சொற்களில் ஏறத்தாழ எல்லாச் சொற்களுமே வழக்கொழிந்து போய்விட்டன. இலக்கியங்களில் பயின்று வரும் இச்சொற்களை நாம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தத் தொடங்கினால் அவை புழக்கத்திற்கு வந்து உயிர்ப்பைப் பெறும். ஆனால் நாம் அதில் அக்கறை காட்டாமல் பல சொற்களை இழந்து விட்டோம் !
வழக்கொழிந்து போயிருக்கும் சொற்களுக்குப் புதிய பொருளைப் பொருத்தி அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் !
எடுத்துக்காட்டுக்கு ஒரு சில !
”கலிங்கம்” என்னும் சொல்லுக்குப் போர்வை என்று பொருள். கலிங்கம் என்னும் சொல்லை நாம் பயன்படுத்துவதே இல்லை. இச்சொல்லுக்கு நாம் புதிய பொருளைப் பொருத்த வேண்டும். ஆங்கிலத்தில் PANT என்னும் சொல்லைத் தமிழில் “முழுக்காற்சட்டை” என்று தமிழாக்கம் செய்கிறோம். இதை மாற்றி ஏன் “கலிங்கம்” என்று சொல்லக் கூடாது ? FULL PANT = கலிங்கம்; HALF PANT = அரைக்கலிங்கம்; ¾ PANT = முக்காற் கலிங்கம்; TROUSER = அரைக்கலிங்கம்.!
புதிய பொருளைப் பொருத்திச் சொல்வதன் மூலம் PANT என்பதை “முழுகாற்சட்டை” என்று நீட்டி முழக்காமல் “கலிங்கம்” என்று சுருக்கமாகச் சொல்லலாம் ! தமிழனென்று சொல்லிக்கொண்டு நாணமில்லாமல் “PANT” என்னும் ஆங்கிலச் சொல்லை விடாப்பிடியாகப் பயன்படுத்தி வரும் துன்பநிலைக்கும் தீர்வுகாணலாம் !
”இடும்பை” என்னும் சொல்லுக்குத் துன்பம் என்பது பொருள். கணினியை இயக்கிக் கொண்டிருக்கையில் அஃது இயங்காமல் நிலைக்குத்தி நின்றுவிடுகிறது .கணினி நூர்ந்து போகவும் (OFF)இல்லை, திரைக்காட்சி இயங்கவும் இல்லை. உடனே இதைச் சீராக்க TROUBLE SHOOTING என்னும் செயற்பட்டியை (MENU) இயக்கித் தீர்வைத் தேடுகிறோம் !
TROUBLE SHOOTING என்னும் சொல்லுக்கு எனக்குத் தெரிந்து யாரும் சரியான தமிழ்ச் சொல்லை உருவாக்கித் தரவில்லை. நாம் அதை “இடும்பைத் தீர்வு” என்னும் புதிய சொல்லால் சுட்டலாம் !
ஊர்ப்புறங்களில் நெல் சேமித்து வைப்பதற்கு நாரினால் செய்யப்பெற்ற தொம்பை என்னும் பெரிய கூடு அல்லது மரத்தினால் செய்யப் பெற்ற பத்தாயம் என்னும் களஞ்சியம் பயன் படுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து தேவைப்படுகையில், தேவையான அளவுக்கு .நெல்லைச் சொரிந்து வெளியில் எடுப்பதற்குச் “சொரிவாய்” என்னும் திறந்து மூடும் சிறு துளைவழி இருக்கும். இந்தச் ”சொரிவாய்” என்னும் சொல் கிட்டத்தட்ட வழக்கிழந்து போய்விட்டது !
தொம்பையிலிருந்து நெல்லைச் சொரிந்து வெளியேற்றும் செயல் புரியும் “சொரிவாய்” என்னும் சொல்லை குடிநீர்க்குழாயிலிருந்து நீரினைச் சொரியும் (வெளியில் எடுக்கவும், வேண்டாத போது அடைக்கவும் பயன்படும்) ”குழாய்த் திருகு” (TAP) என்னும் சொல்லுக்கு மாற்றாக நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது ?
இவ்வாறு வழக்கிழந்து போன தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து, பயன்படுத்தத் தொடங்கினால், தமிழில் சொல்வளமும் பெருகும், தேவையின்றி ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தும் அவல நிலையும் நம்மைவிட்டு நீங்கும். இதற்குத் தேவை, தமிழில்தான் பேசுவேன், தமிழில் தான் எழுதுவேன் என்னும் மனவுறுதியே !
நம்மிடம் இப்போது இல்லாதிருப்பது இந்த மனவுறுதியே ! மனவுறுதி இன்மையால், நாம் தமிழை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்; தமிழுடன் பெருமளவுக்கு ஆங்கிலத்தைக் கலந்து பேசி நமது தனித் தன்மையை இழந்து “தமிழன்” என்று தலைநிமிர்ந்து சொல்லிக் கொள்ளும் தகுதியையும் இழந்து கொண்டிருக்கிறோம் !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmaill.com)
”தமிழ் மாலை” வலைப்பூ
[திருவள்ளுவராண்டு: 2055, கடகம் (ஆடி) 26]
{11-08-2024}
-------------------------------------------------------------------------------------------