வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

புதன், 22 அக்டோபர், 2025

மாலை (65) எங்கும் குப்பை ! எதிலும் குப்பை ! எல்லா மனிதர்கள் மனத்திலும் குப்பை !

 

எங்கும் குப்பை ! எதிலும் குப்பை ! எல்லா மனிதர்கள் மனத்திலும் குப்பை ! 

----------------------------------------------------------------------------------------

“தீவாளி” என்று நம் மக்கள் நாவில் புழங்கி வந்த சொல் “தீபாவளி” என்று திருத்தம் பெற்று இப்பொழுது சில ஆர்வலர்கள் இடையே “ஓளித் திருநாள்” என்று உலவிக் கொண்டிருக்கிறது !

 

ஒளியாவது ? இருளாவது ? “நரகாசுரனைக் கண்ணபிரான் கொன்ற நாள்” என்னும் தொன்மக் கதைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அறிவார்ந்த சிந்தனைக்கு இடம் கொடுங்கள். “ஒளித் திருநாள்” ஏன் கொண்டாட வேண்டுமா ? என்று உரத்துக் கேட்கிறார் ஒருசிந்தனைச் செல்வர் ! 

 

29 இலட்சத்து 50 ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்றிக் கங்கை ஆற்றின் கரையில்  வரிசையாக வைக்கச் சொன்னார்  நாட்டை ஆளும் தலைமகன் ! இதுவல்லவோ “பக்தி” ? இதுவல்லவோ “ஆன்மிகம்”? பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடி ஆற்று நீருக்கு ஒளிவிளக்குகளைக் காட்டி வழிபடச் சொன்னது இன்னொரு அமைப்பு – வடபுலத்து  மக்களும் அவ்வாறே செய்து மகிழ்ந்தனர் !

 

எந்த மக்கள் ஆற்று நீரில் குப்பைகளைக் கொட்டி, ஆலைக் கழிவுகளை நாள்தோறும் ஆறுகளில்  கலந்து, இறந்த மனிதர்களின் ஆவி துறக்கம் புகும் பொருட்டு, பாதி எரிந்த பிணங்களை ஆற்றில் இழுத்து விட்டு, தூய்மையான ஆற்று நீரை வரைமுறையில்லாமல்   மாசு படுத்துகிறார்களோ அவர்கள் தான் “மாசுபட்ட” ஆற்றுக்கு ஒளிவிளக்குகளைக் காட்டி வழிபடுகிறார்கள் !

 

ஆம் ! நாகரிகமாக உடையணிந்து மகிழும் இந்தியர்கள், தம் அறிவை யாரிடமாவது அடகு வைத்துவிட்டு, நாகரிமற்ற செயல்களில் மகிழ்ச்சியோடு ஈடுபடுகிறார்கள் - ஒளித்திருநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் !

 

இந்த ஆண்டு, இந்திய நாட்டு மக்கள் உருபா ஏழாயிரம் கோடி மதிப்புள்ள வெடிகளை வெடித்து, தெருவெல்லாம் குப்பைக் காடாக்கி இன்பக் கண்ணீரில் திளைத்து மகிழ்ந்து கொண்டு  இருக்கின்றனர் ! ஊரெங்கும் புகை மண்டலமாக்கி, அவற்றை நுரையீரல்களில் நிரப்பிக்கொண்டு  மகிழ்ச்சியுடன் “ஒளித் திருநாளைக் கொண்டாடித் தீர்த்துவிட்டனர் !

 

தெருவெங்கும் தேங்கிக் கிடக்கும் “வெடித்தாள்  குப்பைகளைத் திரட்டி இன்னொரு இடத்தில் அவற்றைக் கொட்டி அங்கு “குப்பை மலைகளை” உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள் !

 

அறிவு மழுங்கிய  பெரிய மனிதர்களின் தவறான வழிகாட்டல்களால் இந்தியா விரைவாக முன்னேறுகிறது தூய்மையில்லாத “வல்லரசு” என்னும் இலக்கு நோக்கி !

 

எங்கும் குப்பை ! எதிலும் கழிவுகள் ! எல்லா ஆறுகளிலும் மாசு நிறைந்த “புனித நீர்” ! குப்பை மனம் படைத்த மக்கள் வாழும் நாடாகிவிட்டது இந்தியா !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம் முகநூல்,

[திருவள்ளுவராண்டு:2056, துலை (ஐப்பசி) 05]

{22-10-2025}

----------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக