வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

செவ்வாய், 7 ஜூன், 2022

மாலை (10) தேள் கொட்டினால் என்ன செய்வீர்கள் !

செய்ந்நன்றி பற்றித் தேளுக்கு என்ன தெரியும் ?

----------------------------------------------------------------------------------- 


மாஞ்சோலை என்னும் சிற்றூரில் நீர் நிறைந்த ஒரு பெரிய ஏரி. அதன் உயர்ந்த கரைகளில் நெடிது வளர்ந்த ஆல மரங்கள். ஆல மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் காவி உடுத்திய ஒரு முனிவர் !

 

ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த அவருக்கு, நீர் வேட்கையினால் நா வறண்டது. நீர் அருந்தலாம் என்று எண்ணிக் ஏரியை நோக்கிச் சென்றார். நீர் அருகில் அமர்ந்து இரு கைகளாலும்  நீரை எடுத்த அவர், இரண்டடி தொலைவில்  ஒரு தேள் தத்தளிப்பதைக் கண்டார் !

 

நீரில் விழுந்து உயிருக்குப் போராடும் தேளினைக் கண்டவுடன் முனிவரின் நெஞ்சில் ஈரம் கசிந்தது. எழுந்து போய்த் தேளினைத் தமது கரங்களால் எடுத்துக் கரையில் விட்டார் !

 

செய்ந்நன்றி பற்றித் தேளுக்கு என்ன தெரியும் ? கரையில் விடப்பட்ட தேள் முனிவரின் விரலில் கொட்டிவிட்டது. அதே நேரம், குளத்திலிருந்து எழுந்து வந்த பெரிய அலை ஒன்று தேளினை மீண்டும் தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது !

 

முனிவர் நெஞ்சில் ஊறிய ஈரம் இன்னும் காயவில்லை. அவர் தண்ணீரில் இறங்கி, தன் கரங்களால் தேளினை மீண்டும் எடுத்து, கரையில் சற்றுப் பாதுகாப்பான இடத்தில் விட்டார். தேள் இம்முறையும் அவரைக் கொட்டிவிட்டது !

 

இந்தக் காட்சிகளை எல்லாம் ஆல மர நிழலில் படுத்திருந்த இன்னொரு மனிதன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நீர் அருகில் நின்று கொண்டிருந்த முனிவரை நோக்கி வந்து, “முனிவரே ! தேள் கொட்டும் என்று உமக்குத் தெரியாதா? அதைப் போய் காப்பாற்ற முயல்கிறீரே ! என்று ஏளனமாகக் கேட்டான் !

 

தெரியுமப்பா !தேளின் குணம் கொட்டுவது; அதற்கு நல்லவர், தீயவர் என்பதெல்லாம் தெரியாது;  ஆனால் மனிதனின் குணம் என்ன ? இன்னலுக்கு ஆட்பட்டுப் போராடும் உயிரைக் காப்பாற்றுவது அல்லவா ?”

 

உயிருக்குப் போராடும் ஒரு உயிரைக் காப்பாற்றாமல் விட்டு விட்டால் நான் மனிதப் பிறவி எடுத்தற்கு பொருளின்றிப் போய்விடும் அப்பனே !என்று சொல்லிவிட்டுக் குளக்கரையில் இருந்த ஒரு மூலிகையை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் தேய்த்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார் முனிவர் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு:2053, விடை (வைகாசி) 24]

{07-06-2022]

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக