வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

செவ்வாய், 28 ஜூன், 2022

மாலை (24) குடமுழுக்கில் தமிழ், முறை மன்றத் தீர்ப்பு !

 

தஞ்சைப் பெரிய கோயில் - குடமுழுக்கு - தீர்ப்பு !

 

தஞ்சைப் பெரிய கோயில் திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்னும் வழக்குத் தொடர்பாக, மாநில  முறை மன்ற மதுரைக் கிளை  (உயர் நீதி மன்றம்) அளித்துள்ள தீர்ப்பு, தமிழர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகக் கருத வேண்டும் !

 

கோயில்களும், அங்குள்ள தெய்வங்களும், முற்றிலும் தங்களுக்கே உரிமையானவை என்பது போலச் சொந்தம் கொண்டாடிவரும் பார்ப்பனர்களுக்கு மாநில முறை மன்றம் முதல் அடியைக் கொடுத்திருக்கிறது.  தமிழக அரசு உறுதி அளித்துள்ளபடி, திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகளைத் தமிழ், சமற்கிருதம் இரண்டிலும் நடத்த வேண்டும் என்று உத்தரவு இட்டிருக்கிறது !

 

சமற்கிருதத்தில் மட்டுமே நிகழ்வுகளை நடத்தி வந்த வழக்கம் மாறி, தமிழ், சமற்கிருதம் இரண்டிலும் நடத்த வேண்டும் என்னும் நிலை உருவாகி இருப்பது, சமற்கிருத முகவர்களுக்குக் கிடைத்த முதல் தோல்வி என்பதில் ஐயமில்லை. அதே போல் முதன் முறையாகத் தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் தமிழ் நுழையப் போகிறது என்னும் வகையில், இது தமிழ் ஆர்வலர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பதிலும் ஐயமில்லை !

 

இதில் தோற்றுப் போன இன்னொரு ஆளுமை எது தெரியுமா ? அது தான் தமிழக அரசு ! இந்திய மக்கள் கட்சி ( பாரதிய சனதா கட்சி ) விரும்பியபடி, திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகளைச் சமற்கிருதத்தில் நடத்தி அவர்களிடம் நல்லபெயரும் வாங்க முடியவில்லை; தமிழக மக்களின் விருப்பப்படி, தமிழில் நடத்தி, மக்கள் மன்றத்தின் அன்பையும் பெற முடியவில்லை !

 

இரண்டு ஆடுகளிடம் ஊட்டிய குட்டிஎன்று ஒரு சொலவடை உண்டு. அதுபோல் இந்திய மக்கள் கட்சி ( பாரதிய சனதாக் கட்சி ), தமிழக மக்கள் ஆகிய  இரண்டு பக்கத்தினரின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல், இருவரது உதைகாலையும் (ஆதரவு) இழந்திருக்கிறது தமிழக அரசு !

 

பார்ப்பனர்கள் இத்துடன் அமைதியாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. முகனை முறை மன்றத்திற்குச் (உச்சநீதி மன்றம்)  சென்று தடையாணை கோரக் கூடும். தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் விழிப்பாக இருக்க வேண்டிய வேளையிது. முன்கணிப்பு விண்ணப்பம் (CAVEAT PETITION) ஒன்றை முகனை முறை மன்றத்தில் (உச்ச நீதி மன்றம்) அளித்து வைப்பது நல்லது !

 

இந்த வழக்குத் தொடர்பாக இரு கருத்துகளை இங்கு அலசி ஆய்வு செய்யலாம் என்று கருதுகிறேன். இத்தகைய ஆய்வு தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும் !

 

தமிழ் நாட்டுக்குள், தமிழர்களால் கட்டப்பெற்ற கோயில்களைச் சமற்கிருத மொழியாளர்களும் அவர்களது முகவர்களான பார்ப்பனர்களும் தங்களுடைய சொந்த உடமைகளாகக் கருதுகின்றனர். கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிகொண்டது போல்என்று ஊர்ப் புறங்களில் ஒரு சொலவடை உண்டு. தமிழ் மக்களின் பணத்தில், தமிழ்த் தொழிலாளர்களின்  உழைப்பில், தமிழ் விற்பன்னர்களின் கலையில் உருவான தமிழ் நாட்டுக் கோயில்களை எல்லாம்  பார்ப்பனர்கள், ஆகமம் ஐதீகம் மந்திரம் என்று புரியாத புன்மொழிகளைக் கூறித் தமிழர்களிடமிருந்து வலிந்து பற்றிக் கொண்டு, தங்கள் பிழைப்பை மிக மேன்மையாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் !

 

சரி ! போகட்டும் ! அவர்களும் மனிதர்கள் தானே என்று இரக்கம் காட்டினால், நம்மைக் கருவறைக்குள் வராதே, என்று கட்டுப்பாடு விதிக்கின்றனர். கருவறைக்குள் நாம் சென்றால், இறைவனுக்கு ஏற்காதா ? அல்லது நாம் தீண்டத் தகாத  தெறுக்கால் (தேள்) பூச்சிகளா ? நமக்குத் தெரிந்த தமிழில், பூசனை (அர்ச்சனை) செய்தாலும், சரி போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால், நமக்குப் புரியாத சமற்கிருதத்தில் தான் மந்திரம் சொல்வேன் என்று அடம் பிடித்து அழிவழக்கு செய்வது என்ன ஞாயம் ?

 

கதலி (வாழை) வைப்பவன் ஒருவன், கனி தின்பவன் இன்னொருவனா ? இல்லம் கட்டுபவன் ஒருவன், அங்கே இமை மூடிப் பஞ்சணையில் துயில்கொள்பவன் இன்னொருவனா ? ஆமா (பசு) வாங்குபவன் ஒருவன்; அதன் அமுதை (பாலை)த் துய்ப்பவன் இன்னொருவனா ? தமிழன் காசுகளை உண்டு  உயிர்வாழ்ந்து, தமிழ் மக்களின் கண்களான  தமிழை இகழ்ந்து, வடமொழிக்கு வாழ்த்துப் பாடும் பார்ப்பனர்களுக்கு நம் கோயில்களில் யார் தந்தது இந்தத் தனியுரிமை?

 

இந்த ஏமாற்றுக்காரர்களை இனம் கண்டு கொண்டு விட்டது எங்கள் தமிழினம் ! சிலரை ஏமாற்றிச் சில காலம் வாழலாம் ! ஆனால் பலரையும் ஏமாற்றிப் பல காலம் வாழமுடியாது ! இது உலகியல் உண்மை !

 

பார்ப்பனர்களின் பாடசாலையாகத் திகழும் பாரதிய சனதாக் கட்சிக்கு  எல்லா வகையிலும் இணங்கிப் போகும் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள்,  தங்களுக்கு வாழ்வு தந்த தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் எதிராகக் கொலைக் குற்றத்திற்கும் மேலான கொடுஞ் செயலைப் புரிந்திருக்கிறார்கள் ! தமிழின் உரிமையைக் காலடியில் போட்டு நசுக்கிவிட்டு, திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகளில் சமற்கிருதத்தையும் இணைத்துக் கொண்ட கொடுமையை என்னவென்று சொல்வது ? சுரணையுள்ள எந்தத் தமிழனாலும் இதை ஏற்றுக் கொள்ளவே இயலாது !.

 

எனது நாடு தமிழ் நாடு ! என் தாய்மொழி தமிழ் ! என் தாய் பேசிய மொழி தமிழ் மொழி ! என் தந்தை எனக்குக் கற்றுத் தந்த மொழி தமிழ் மொழி ! என் ஆசிரியர் எனக்கு முதன் முதல் சொல்லித் தந்த மொழி தமிழ் மொழி ! என் அரசின் ஆட்சி மொழி தமிழ் மொழி ! என் மக்கள் அன்றாடம் பேசும் மொழி தமிழ் மொழி !

 

என் மக்கள் வழிபடும் கோயில்கள் இருக்குமிடம் தமிழகம் !;  என் மக்களின் கோரிக்கை, தமிழ் வழியில் குடமுழுக்கு ! என் தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன்என்று மாநில முறை மன்றத்தில் துணிவுடன் சொல்லத் தவறிய அந்த நொடியிலேயே, ஆட்சித் தலைமையும், அமைச்சர் பெருமக்களும் மக்கள் பார்வையில்  புறமுதுகிட்ட போர் வீரர்களாகத் தான்  காட்சி தருகிறார்கள் !

 

மக்களிடம் தோற்றுத் தலைகுனிந்து நிற்கிறது அரசு ! ஆட்சி மொழியாக அறிவிக்கப் பெற்ற தமிழ் மொழிக்கு அரணாக இருக்க வேண்டிய அரசு, மாநில முறை மன்றத்தில் சமற்கிருதத்திற்கு ஆலவட்டம் வட்டம் வீசிய ஆர்வம் கரைக்கமுடியாத களங்கமாக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது !

 

பதவி ஆசை, கண்களை மறைக்கிறது ! ஆட்சியில் அழகு முத்திரை பதிக்க வேண்டிய அரசியல் ஆளிநர்கள், மாநில உரிமைகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக விட்டுக் கொடுத்துவிட்டு, மண்ணின் மொழியான மணித் தமிழின் உரிமைகளையும்  விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் !

 

எப்போது விழிக்கப் போகிறது தமிழினம் ?

 

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 14]

{28-06-2022}

 --------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக