வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

சனி, 30 ஜூலை, 2022

மாலை (29) ஐந்திறம் - புத்தாண்டுத் தொடக்கம் தையா ? சித்திரையா ?

சித்திரையில்  புத்தாண்டு பிறப்பதில்லை  !

 

தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தான் தொடங்க வேண்டுமா ? “தையில் தொடங்கக் கூடாதா ? இதைப் பற்றி நாம் சற்று ஆய்வு செய்வோமே !

 

கணக்கீட்டு வசதிக்காக, பூமிக் கோளமானது குத்துக் கோடுகள் (LATITUDE) மற்றும் கிடைக் கோடுகளாக (LONGITUDE) நிலஅறிவியல் அறிஞர்களால் பகுக்கப்பட்டுள்ளது. கிடைக் கோடான 0 (சுழி) பாகை என்பது, இந்திய வரை படத்தைப் பொறுத்த வரையில்  இலங்கைக்குத் தெற்கே  கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இதற்கு நில நடுக்கோடு (EQUATOR) என்று பெயர் !

 

இலங்கையின் உள்ள கொழும்பு நகர், நில நடுக்கோட்டுக்கு வடக்கில் (கவனிக்கவும் வடக்கில், தெற்கில் அல்ல ) ஏறத்தாழ 7 பாகை அளவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி 8 பாகை வடக்கில் உள்ளது. சென்னை 13 பாகை வடக்கில் உள்ளது. கல்கத்தா 22-1/2பாகை வடக்கில் உள்ளது. இந்தியாவின் வடகோடியில் உள்ள ஸ்ரீநகர் 34 பாகை வடக்கில் உள்ளது !

 

மகர ரேகை (CAPRICORN), என்பது நில நடுக்கோட்டுக்கு 23-1/2 பாகை தெற்கே (அதாவது 3,313 கி.மீ தெற்கே) கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கடக ரேகை என்பது (CANCER) நில நடுக்கோட்டுக்கு 23-1/2 பாகை வடக்கே, அதாவது கல்கத்தாவுக்கு சற்று வடக்கில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது !

 

செப்டம்பர் 22-ல் நில நடுக்கோட்டுக்கு நேர் மேலே உச்சி வானத்தில் இருக்கும் சூரியன் சிறிது சிறிதாக  தெற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 22-ல் 23-1/2 பாகை தெற்கில் உள்ள மகர ரேகையை அடைகிறது. நாம் வாழும் இடம் சென்னை என வைத்துக் கொள்வோம். டிசம்பர் 22 அன்று சென்னையிலிருக்கும் நமது உச்சந்தலைக்கு நேர் மேலே உள்ள வானத்திலிருந்து  தெற்கில் ஏறத்தாழ 6150 கி.மீ தள்ளி சூரியன் இருப்பதால், நாம் இந்தக் காலப்பகுதியில் மிகுதியான குளிரை உணர்கிறோம். சூரியன் அருகில் இருந்தால் வெப்பம் மிகும்; தொலைவில் செல்லச் செல்ல வெப்பம் குறைந்து குளிர் மிகும்  என்பதை நினவிற் கொள்ளுங்கள் !

----------------------------------------------------------------------------------

சூரியன் இருக்கும் இடம், [பாகை அளவில்]

----------------------------------------------------------------------------------

செப்டம்பர் 22..... = புரட்டாசி 6-ஆம் தேதி. [ 0 பாகை]

டிசம்பர் 22..............= மார்கழி 7-ஆம் தேதி....[23-1/2* தெ]

மார்ச்சு 21...............= பங்குனி 8-ஆம் தேதி.....[ 0 பாகை]

ஜூன் 21..................= ஆனி 7-ஆம் தேதி.............[23-1/2* வ]

---------------------------------------------------------------------------------

[ 0 பாகை = நில நடுக்கோடு என்று பொருள்]

---------------------------------------------------------------------------------

மகர ரேகையை  அடையும் சூரியன் பின்பு டிசம்பர் 22-ல் வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. வடக்கு நோக்கிய இந்த நகர்வுக்கு உத்தராயணம்என்று பெயர். வான் அறிவியலின் (ASTRONOMY) படி உத்தராயணம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ல் அதாவது, மார்கழி 7 (அ) 8-ல் தொடங்குகிறது. ஆனால் பஞ்சாங்கத்தின் படி தை முதல் நாளில் தான் உத்தராயணம் தொடங்குகிறது !

 

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச்சு 21 –ல் (பங்குனி 7 (அ) 8) நில நடுக்கோட்டை அடைகிறது. நில நடுக்கோட்டிலிருந்து சூரியன் வடக்கு நோக்கி நகரும் (உத்தராயணம்) இந்த நாளைத் தானே (அதாவது, பங்குனி 7 (அ) 8) புத்தாண்டாக அறிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், சோதிடக் கலையின் அடிப்படையில், மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சூரியன் நகரும் நாளான சித்திரை ஒன்றாம் தேதியை ஆண்டுப் பிறப்பாகவும் உத்தராயணத் தொடக்கமாகவும்  அறிவித்திருப்பது முரண்பாடானது அல்லவா ?

 

இதிலிருந்து ஒன்று உங்களுக்கு விளங்கி இருக்கும்.  அதாவது, சித்திரை மாதம் முதல் தேதியன்று இப்போது கொண்டாடப்படும் தமிழ் (?) வருடப்பிறப்பு அறிவியல் அடிப்படையில் சரியன்று ! சோதிட அடிப்படையில் மட்டுமே சரி ! சோதிடம் என்பது அறிவியல் அளவுகோலின்படி மெய்ப்பிக்கப்பட்டது அல்லவே ?

 

வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குத் தை மாதம் என்பது அறுவடை மாதம். உழைத்துப் பாடுபட்டதற்கு ஊதியத்தைக் காணும் மாதம். தனது உழைப்பினால் விளைந்த நெல்லைக் குத்தி அரிசியாக்கி, சர்க்கரைப் பொங்கல் செய்து வேளாண்மைக்கு உதவி செய்த சூரியனுக்கு விழா எடுக்கும் நாள். இந்த நல்ல நாளே வேளாண் மக்களுக்குத் திருநாள். இந்த நல்ல நாளில் திருவள்ளுவர் ஆண்டும் தொடங்குவதால், தை முதல் நாளே தமிழர்களுக்குப் புத்தாண்டு நன்னாள் !

 

எதிர்வரும் (15-01-2023) தை முதல் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு நன்னாள். திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் இந்நாளே ! தமிழர்கள் அனைவரும் இந்த நன்னாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாளாகவும், திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு நாளாகவும், பொங்கல் திருநாளாகவும் கொண்டாடி மகிழ்வோம் ! புத்தாண்டு வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம் !

---------------------------------------------------------------------------------

 பின் குறிப்பு:-

----------------------

அறிவியலின்படி பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால், சோதிடக் கலையின் படி சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது. படிப்பவர்களுக்கு எளிதில் புரிவதற்காக, இந்தப் பதிவில், சூரியன் நில  நடுக் கோட்டிலிருந்து வடக்கும் தெற்குமாக நகர்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கருத்திற் கொள்க !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 14]

{30-07-2022}

----------------------------------------------------------------------------------


 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக