பலருக்கும் இதுபற்றித் தவறான புரிதலே உள்ளது !
மருதவனம் ! பெயருக்கு ஏற்றாற்போல் ஒருகாலத்தில் மருதமரங்கள் நிறைந்து வனமாகக் காட்சியளித்த ஊர். இப்போது எங்காவது ஒரு சில மரங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மரத்தின் பெயரும் கூட உருமாறிவிட்டது. கருமருது, பிள்ளை மருது என்று சொன்னால் தான் மக்களுக்குப் புரிகிறது !
மீனவன் நல்லூர் – மாங்குடி சாலையிலிருந்து கீழ்புறமாக
சற்று உள்ளடங்கி இருக்கும் ஊர் மருதவனம்.
திருவாரூர் மாவட்டத்தில் பசுமை போர்த்திய வயல்கள் நிறைந்த சிற்றூர்களில் இதுவும்
ஒன்று. மருதவனத்தில் உப்பரிகையுடன் (BALCONY) அமைந்த தெற்குப் பார்த்த மச்சு வீடு. வீட்டு வாசலில் நான்கு வேப்ப மரங்கள். மேழத்
திங்களின் (சித்திரை) வெப்ப வீச்சினைத் தணித்து, இவை குளிர்ந்த நிழலைத் தந்துகொண்டிருந்தன !
பிரம்பு பின்னிய இருக்கையுடன் மடக்குக் கை வைத்த அந்தக் காலத்துச்
சாய்வு நாற்காலியில் (EASY CHAIR) ஓய்வாகப் படுத்திருந்தார் பண்ணையார்
நல்லதம்பி. பெயர்தான் நல்லதம்பியே தவிர உண்மையில் அவர் செல்வச் செருக்கு (ஆணவம்)
மிக்க கெட்டதம்பி. எளியவர்களை ஏளனமாகப்
பார்க்கும் இரக்கமில்லாத்தம்பி. அகன்ற
குறுங்காலி (STOOL) மீது இரண்டு கால்களையும் வைத்து
நீட்டியபடி, வேப்பமரக் காற்றில் மிதந்து வந்த
மெல்லிய நறுமணத்தை உள்வாங்கி இயற்கையின் இனிமையை மனதிற்குள் சுவைத்த படி
நல்லதம்பி கண்களை மூடி இளைப்பாறிக்
கொண்டிருந்தார் !
வீட்டின் மேற்புறமாக, சற்றுத் தள்ளி, நீண்டு உயர்ந்த வைக்கோல் போர்
மருதவனத்தின் செழுமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. வைக்கோல் போர் முன்
கட்டப்பெற்றிருந்த ஈரிணை (TWO PAIR) வண்டி மாடுகளின்
கழுத்திலிருந்த சதங்கைகள் மெல்லிய இசையை எழுப்பிக் கொண்டிருந்தன. தோட்டத்து
மாமரத்திலிருந்து சில குயில்கள் தம் இணையைக் கூவிக் கூவிக் குழைந்து அழைத்துக் கொண்டிருந்தன !
முற்றத்து முன்வாயிலைத் திறந்துகொண்டு தெற்குத் தெரு முருகவேல் அடக்க ஒடுக்கமாக உள்ளே
வந்தார். நல்லதம்பி மெல்லக் கண் விழித்து அவரைப் பார்த்தார். “ஐயா ! கும்பிடுகிறேனுங்க !“
“யாரப்பா அது ?” “நான்தாங்க தெற்குத் தெரு முருகவேல்” ”வா ! வா ! முருகவேல் ! என்னப்பா இந்தப் பக்கம் ?” ”சும்மாதாங்க ! ஐயா உடம்புக்கு முடியாம இருந்தீங்கண்ணு கண்ணுச்சாமி
சொன்னானுங்க ! அதுதான் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன் !”
“சும்மா, காய்ச்சல் தான். வேறொன்றுமில்லை !
சரியாகிவிட்டது. சற்றுக் களைப்பாக இருக்கிறது. உடம்பெல்லாம் ஒரே வலி. அதுதான்
வேப்பங்காற்று வாங்கி கொண்டு படுத்திருக்கிறேன்.”
முருகவேல், பண்ணையாரின் பக்கத்தில் வந்து நின்று, சாய்வு நாற்காலியின் மடக்குக் கைகளின் மீது கிடத்தியிருந்த அவரது கைகளை மெல்லப் பிடித்து விட்டார். காய்ச்சலால் ஏற்பட்டிருந்த உடம்பு வலிக்கு முருகவேலின் ’உடம்புப் பிடிப்பு’ (MASSAGE) மிகவும் இனிதாகத் தோன்றியது. முருகவேல் பண்ணையாரின் இரண்டு கைகளையும் மாறி மாறி மெல்லப் பிடித்துவிட்டார். ”உன் பையன் என்னப்பா செய்கிறான் ?” பண்ணையார் கேட்டார்.
இரு கைகளையும் மென்மையாக அமுக்கி, அழுத்தி, பிடித்துவிட்ட முருகவேல், அடுத்து
குறுங்காலி மேல் நீட்டி இருந்த பண்ணையாரின் வலப் பக்கக் காலைப் பிடித்துவிடத் தொடங்கினார்.
பிடித்துவிட்டுக் கொண்டே, “ஐயா, அவன் துவாக்குடி அரசினர் பல்தொழில் பயிலகத்தில் (POLYTECHNIC
COLLEGE) மின்னியல் இரண்டாமாண்டு படித்துக்
கொண்டிருக்கிறான்.” என்று சொன்னார் !
பண்ணையாரின் வலக் காலை மென்மையாக அமுக்கிப் பிடித்து விட்ட முருகவேல், அடுத்து அவரது இடக் காலையும் பிடித்துவிடத் தொடங்கினார். “முருகவேல் ! வீட்டுக்குப் போகும் போது வண்டி மாடுகளுக்கு பருத்திக்
கொட்டையும் கடலைப் பிண்ணாக்கும் தவிட்டுடன் கலந்து தீனி வைத்துவிட்டுச் செல்.
பண்னையாள் கருப்பையன் இன்று வெளியூரில் இருப்பதால் வரவில்லை; அவன்தான் வழக்கமாகத் தீனி வைப்பான்”
“சரி ஐயா ! அப்படியே செய்கிறேன் !” என்றபடி, குறுங்காலி மீது நீட்டியிருந்த
பண்ணையாரின் கால்களை மெல்ல மெல்ல நீவிப்
பிடித்து விடுவதைத் தொடர்ந்தார்.. அறுபது அகவையைக் கடந்துவிட்ட பண்ணையாருக்கு,
முருகவேலின் மென்மையான உடம்புப் பிடிப்பு (MASSAGE)
மிகுந்த இன்னலமாய்த் (சுகமாக) தோன்றியது !
கை,கால்களை மாறி மாறி பிடித்துவிடுவதைத்
தொடர்ந்த முருகவேலுக்கு தான் வந்த நோக்கத்தைச் சொல்ல அச்சமாக இருந்தது. பண்ணையார்,
சினமேற்பட்டுத் தன்னைத் திட்டினால் என்ன
செய்வது என்று பயந்தார். ”முருகவேல் ! என்னப்பா ! உன் பெண் என்ன செய்கிறாள் ?” இந்தக் கேள்வி முருகவேலுக்குத் தான் வந்த நோக்கத்தை மெல்ல
எடுத்துரைக்க வாய்ப்பாக இருந்தது. ”வீட்டில்தாங்க இருக்கிறாள். அவளுக்குத் திருமணம் கூடி
வந்திருக்கிறது. மாப்பிள்ளை கோவையில்
வேலையில் இருக்கிறார் !”
“சரி ! பணம் ஏதாவது வேண்டுமா முருகவேல் ?” “ஆமாங்க ஐயா !” “சரி ! ஒரு ஐந்தாயிரம் போதுமா ?”
“உங்க விருப்பமுங்க ! எல்லாவற்றுக்கும் பணம்
திரட்டிவிட்டேன். மாப்பிள்ளைக்கு பத்து கிராமில் மோதிரம் போட வேண்டும். அதற்குத்
தாங்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறேன்”
“அப்படியா ?” சரி உள்ளே அம்மாவிடம் போய் நான்
சொன்னேன் என்று சொல்லி ஒரு முப்பதாயிரம் உருபா வங்கிக் கொள். இதில் பத்தாயிரம் உன்
பெண்ணுக்கு என் சீராக வைத்துக் கொள். மீதம் இருபதாயிரமும் உன்னால் முடிந்த போது
திருப்பித்தா !”
வண்டி மாடுகளுக்குத் தீனி வைத்துவிட்டு, முப்பதாயிரம் உருபா பணத்துடன்
முருகவேல் மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றார். எப்படி நடந்தது இந்த மாயம் ? செல்வச் செருக்கில் ஏழைகளை
இளக்காரமாகப் பார்க்கும் பண்ணையார் நல்லதம்பியின் மனம் இளகியது எப்படி ?
காய்ச்சலால் உடம்பில் ஏற்பட்ட வலி, முருகவேலில் கால், கை பிடிப்பில் (MASSAGE) பண்ணையாருக்கு மறைந்து போயிற்று. அவர் மனம் உடல்வலியின்
பீடிப்பிலிருந்து மீண்டு, இனிமையான துய்ப்பை (சுகமான அனுபவத்தை)
உணர்ந்தது. மனதின் இனிய துய்ப்பு, அவரது கடினமான மனதை இளக்கி, முருகவேலின் பால் அன்பு பாராட்டச் செய்தது. முருகவேலின்
எதிர்பார்ப்புத் தடங்கலின்றி நிறைவேறியது !
முருகவேலின் ”கால், கை” பிடிப்புதான் (MASSAGE) இதை நிறைவேற்றித் தந்திருக்கிறது. ஆம் ! “கால், கை” பிடிப்புக்குத் தான் எத்துணை ஆற்றல் ! இந்தக் “கால், கை” பிடிப்புத் தான் “கால்கை” பிடிப்பாகி. “கால்க்கை” பிடிப்பாக உருவெடுத்து, பின்பு “காக்கை” பிடிப்பாக மாறி, இறுதியில் “காக்கா” பிடித்தலாக மக்களிடையே உலா வருகிறது ! “காக்கா” பிடித்தல் என்னும் சொலவடை தோன்றிய
வரலாறு இப்போது உங்களுக்குப் புரிகிறதா ?
ஏதாவது செயலை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நீங்கள் யாரையாவது ”காக்கா” பிடித்திருக்கிறீர்களா ? ”ஆம்’ என்றால் அந்தக் கதையை எங்களுக்கும்
சொல்லுங்களேன் ! “இல்லையா ?” அப்படியென்றால் இந்த உலக வாழ்க்கை உங்களுக்குக் கடினமாக இருக்குமே !
எப்படிக் காலந் தள்ளுகிறீர்கள் ?
என் கட்டுரைகளுக்கு ”விழைவு” (LIKE) அல்லது ”கருத்துரை” (COMMENTS) அல்லது பகிர்வு
(SHARE) பெறும் பொருட்டு நானும் உங்களைக் “காக்கா” பிடிக்க வேண்டும் போலும் ! என்னே
உலகமிது !
--------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் மாலை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, கடகம் (ஆடி) 17]
{02-08-2022}
--------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக