வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

மாலை (41) முகநூலில் விடுக்கப் பெறும் நட்புக் கோரிக்கைகள் !

 

முகநூலில் புதிய நண்பர் ஒருவர் எனக்கு நட்புக் கோரிக்கை விடுத்திருந்தார் !


அவரைப் பற்றி அறிந்து கொண்ட பின்பு தானே அவரது கோரிக்கையை ஏற்பதா மறுப்பதா என்பதை நான் முடிவு செய்ய இயலும் !

 

அவரது முகநூல் பக்கத்தைத் திறந்து பார்த்தால், அவரைப் பற்றிய செய்திகள் தெரியுமல்லவா ? திறந்து பார்க்கிறேன் ! அறிமுகச் செய்திகள் அடங்கிய பகுதி பூட்டப் பட்டு (PROFILE LOCKED) இருக்கிறது. ABOUT என்பதைத் தொடுகிறேன். அப்பாடா ! திறந்து கொண்டது !

 

அவரைப் பற்றிய முகாமையான செய்தி ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அவர் ஆண்மகனாம் ! MALE என்னும் குறிப்பிலிருந்து தெரிந்து கொண்டேன் ! பெயரைப் பார்த்தாலே அவர் ஆணா பெண்ணா என்பது தெரிந்து விடப்போகிறது ! அப்புறம் எதற்கு MALE என்னும் குறிப்பு !

 

பிற விளத்தங்கள் (விவரங்கள்) எதுவுமே தெரியவில்லை ! அவர் ஊர் எது ? பிறந்த நாள் எது ? அகவை என்ன ? படிப்பு என்ன ? பணி என்ன ? மணமானவரா ? எதையும் வெளிப்படுத்த அவர் அணியமாக இல்லை ! ஆனால் என் நட்பு அவருக்கு வேண்டும் !

 

அவரைப் பற்றிய விளத்தங்கள் (விவரங்கள்) எல்லாம் படைத்துறைச் செய்திகளைப் போல ( இராணுவ இரகசியங்கள் போலும் ! ) மிகவும் கமுக்கமானவை ! ஆனால் அவர் ஆண்மகன் என்பது மட்டும் கமுக்கச் செய்தி அன்று ! பிறருக்குத் தெரிவதில் அவருக்கு இடையூறு ஏதுமில்லை !

 

ஆகா என்ன தன்முனைப்புச் சிந்தனை ! உலகிலேயே இவர் தான் பெரிய அறிவாளி ! பணப்பேழையைப் பூட்டி வைப்பது போலத் தன்னைப் பற்றிய செய்திகள் வெளியே கசிந்து விடாமல் பூட்டி வைக்கும் இந்த பெருந்தகையாளருக்கு என் நட்பு வேண்டுமாம் !

 

தன்னைப் பற்றிய செய்திகளைப் பூட்டி வைத்துக் கொள்ளும் இந்தப் பெரிய மனிதர் அவர் வீட்டில் எதை எதை எல்லாம் பூட்டி வைத்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பார்க்கக் கூடச் மனம் கூசுகிறது !

 

முகநூலில் கணக்கு வைத்திருப்போர், தம்மைப் பற்றிய செய்திகளை வெளிப்படையாகத் தெரிவித்தால் தான், அவருடன் நட்பு வட்டத்தில் இணைய, யாரும் முன்வருவார்கள் ! இது ஏன் அவர்கள் சிந்தையில் உறைப்பதில்லை ! விளத்தங்களைப் பூட்டி வைத்துக் கொள்வோருக்கு நண்பர்கள் தான் எதற்கு ?

 

எதைப் பூட்டி வைத்துக் கொள்வது, எதைப் பூட்ட வேண்டியதில்லை என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த மேதைகளுக்கு நட்பு வட்டம் எதற்கு ? முகநூற் கணக்கு எதற்கு ? முகமில்லாத இத்தகைய மூஞ்சூறுகள் முகநூல் தோட்டத்தில் நிரம்பவே உலவுகின்றன !

 

இன்னொரு வகை முகநூல் கணக்காளர்கள் இருக்கின்றனர். எங்க வீட்டுக் காரரும் கச்சேரிக்குப் போகிறார்என்பது போல, சிலர் கணக்குத் தொடங்கித் தன் அரிப்பைத் தீர்த்துக் கொள்வார்கள். அறிமுகப் படத்தை (PROFIE PHOTO) ஏழு முறையாவது மாற்றுவார்கள். அப்புறம் கும்பகர்ணனுக்குத் தம்பியாகிப் போவார்கள் !

 

நாம் முகநூலைப் புரட்டிக் கொண்டே வரும்போது சில பெயர்கள் நம் கண்களில் பட்டுத் தொலைக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு நம்முடன் பழகிய நண்பராக இருப்பார். அவர்கள் பெயரையும் படத்தையும் பார்க்கும் போது நம் மனதிற்குள் ஒரு இன்ப மின்னல் பளிச்சென்று தோன்றி மறையும். நட்புக் கோரிக்கை விடுப்போம். ஆவலுடன் காத்திருப்போம் !

 

அவரிடமிருந்து மறுமொழியே வராது ! காத்திருந்து காத்திருந்து நம் கண்களெல்லாம் பூத்துப்போகும். அப்புறம் தான் நம் சித்தையில் உறைக்கும், நாம் நட்புக் கோரிக்கை விடுத்தது கும்பகர்ணத் தம்பிக்கு என்று ! அவரும் MALE என்னும் குறிப்பை மட்டும் விட்டுவிட்டு ஏழெட்டு ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருப்பார் ! எழினி (MOBIE) எண்ணையும் பூட்டி வைத்திருப்பார் யாரும் தொந்தரவு செய்யக் கூடாதாம் !

 

முகநூல் தோட்டத்தில் தேடிப்பார்த்தால், நிரம்பவும் கும்பகர்ணத் தம்பிகள் தென்படுவார்கள் ! இவர்களுக்கெல்லாம் முகநூற் கணக்கு எதற்கு ? மற்றவர்களின் எரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்கா ?

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி), 10]

{26-08-2022}

---------------------------------------------------------------------------------



 



 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக