சில நேர்வுகளில் கலப்பு என்பது சுவையானது என்பதில் ஐயமில்லை. பாலுடன் தேன் கலந்தால் இனிப்புச் சுவை கூடுகிறது. கன்னலுடன் (பாயசம்) முந்திரி கலந்தால் கன்னலின் சுவை தூக்கலாகவே தெரிகிறது. காரத்துளியுடன் (காரப்பூந்தி) வறுத்த நிலக்கடலையும் கறிவேப்பிலையும் கலக்கும் போது அந்தக் காரத்தின் சுவையே தனி தான் !
ஆனால் பாலுடன் உப்புக் கலந்தால் என்னவாகும் ? பாலை அருந்த முடியாத அளவுக்கு அது கெட்டுப் போகிறது ! சக்கரையுடன் மணல் கலந்தால் அதை உணவில் சேர்க்க முடியுமா ? நமது வீட்டுக் கூடத்திற்குள் பக்கத்துத் தெரு பக்கிரியை அழைத்து வந்து பாய் விரித்துப் படுக்க வைத்தால் அந்தக் கலப்பு நமது வீட்டாருக்கு இனிக்கவா செய்யும் ? பைத்தியக்காரன் என்றல்லவோ நம் வீட்டார் நமக்குப் பட்டம் சூட்டிச் சினத்துடன் பார்ப்பார்கள் !
ஆகையால் எல்லா நேர்வுகளிலும் கலப்பு நன்மை தருவதில்லை. மொழிக் கலப்பும் அப்படித்தான் ! தமிழ்நாட்டில், ஒரு இல்லத்து உறுப்பினர்கள் துயிலெழுந்தது முதல் இரவு துயிலறைக்குச் செல்லும் வரை நிகழும் உரையாடல்களை உற்றுப் பாருங்கள் ! எத்துணை ஏத்துணை ஆங்கிலச் சொற்கள் ! தமிழுடன் கலந்த “தமிங்கில” உரையாடல் !
“குட் மாணிங் டாடி !
குட் மாணிங் மம்மி” குயிலிசையாய்க் காற்றில் தவழ்ந்துவர வேண்டிய “வணக்கம் அப்பா “ “வணக்கம் அம்மா”
என்னும் தேன் தமிழ்ச் சொற்கள் எங்கே போயின ? ”சரி, பிரியா ! சீக்கிரம் போய் “பிரஷ்” பண்ணிட்டு வா “
பூஸ்ட் கலந்து வைக்கிறேன்” அம்மாவின் அன்பு மொழியில் தான் எத்தனைக் கலப்படம் !
தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து “தமிங்கிலமாக்கும்” தமிழ்க்குடி மக்களின் செயலைப் பாராட்டுவதா ? அல்லது பழிப்பதா ?
பிரியாவின் தந்தை அலுவலகம் செல்லும் போது தனது கலிங்கத்தை
(PANT) அணிந்த பின் மேற்சட்டை பொருத்தமாக இல்லை என்று சொல்லி, பக்கத்து வீட்டுக்காரனின் மேற்சட்டையை இரவல் வாங்கி அணிந்து செல்ல அவர் மனம் ஒப்புக்கொள்ளுமா ? அந்தக் கலப்பு அவருக்கு மதிப்பைத்தான் தருமா ?
பிரியாவின் தாய், தனது காலணியில் ஒன்றையும் பக்கத்து வீட்டுப் பாமாவின் காலணியில் ஒன்றையுமாக இணை சேர்த்து அணிந்துகொண்டு கடைத்தெருவுக்குச் செல்வாரா ?
”பாத்ரூம்ல யார் இருக்காங்க “? எதற்கு இந்த ஆங்கிலக் கலப்பு ? இத்தகைய மொழிக் கலப்பைப் பற்றி எந்தத் தமிழனாவது என்றைக்காவது சிந்தித்திருக்கிறானா ?
“ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்களை நாம் ஒதுக்க வேண்டியதில்லை; அச்சொற்கள் தமிழின் மொழி வளத்தைப் பெருக்கித் தமிழுக்கு வலிமை சேர்க்கும்” என்று சொல்லும் அறிவுக்கொழுந்துகளும் தமிழ் நாட்டில் இருக்கவே செய்கின்றன. அவர்கள் சொல்வது சரியென்றால் அவர்கள் வீட்டு ஆட்டுக்குட்டியின் கறியுடன் அடவியில் வாழும் குரங்குக் குட்டியின் கறியைச் சேர்த்துச் சமைத்து உண்பார்களா ? அவர்கள் வீட்டுப் பெண்ணுக்கு ஆப்பிரிக்க மாப்பிள்ளையை இணை சேர்த்தால் அழகாக இருக்கும் என்று அவர்கள் திருமணத்திற்கு இசைவு தெரிவிப்பார்களா ?
தாம் அணியும் சட்டை தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், தாம் பேசும் மொழியும் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை ?
தமிழுடன் ஆங்கிலம் கலந்தால் தமிழ் தன் தூய்மையை இழந்துவிடுகிறது என்பது அவர்களுக்கு ஏன் புரிவதில்லை ?
நம் வீட்டு அடுக்களை நம் அன்னைக்கு மட்டுமே - அவளுக்குப் பின் நம்
மனைவிக்கு மட்டுமே - உரிமை உடையது; அதில் அயலூர்ப் பெண்ணுக்கு இடம் தருபவன் அறிவார்ந்த மனிதன் ஆவானா ? நம் வீட்டுத் துயிலறையில் நம் மனைவி மட்டுமே அமரமுடியும்; அங்கு அயலான் வீட்டுப் பெண்ணுக்கு என்ன வேலை ?
நமது நாக்கு, நமது தாய்மொழியான தமிழைப் பெற்றெடுக்கும் கருவறை; அங்கு அயல்மொழியான ஆங்கிலம்
பிறந்து வளர்ந்து வாழ்ந்து நம் தமிழையே அழிக்கத் துணிகையில் அதற்கு இடந்தருதல் நமது முட்டாள்தனமல்லவா ? அயல் மாநிலமானாலும் சரி, அயல் நாடானாலும் சரி, அந்த மண்ணுக்குரிய மொழி அம்மண்ணின் மைந்தர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரிமை படைத்த மொழி. அம்மொழி நம் வீட்டுக் கூடத்திற்குள் வந்து அட்டாணிக்கால் போட்டு அமர்ந்து கொண்டு நமது தாய் மொழியான தமிழைச் சிதைக்க நாம் ஒருபோதும் இடந்தரலாகாது !
ஆங்கிலேயர்களின் நாட்டிற்குச் சென்று அவர்களிடம் நாம் தமிழில் பேச முயல்வது பித்துக் கொளித்தனம் ! ஆனால், நாம் நம்மவர்களிடமே – தமிழ் தெரிந்த நம்மவர்களிடமே - வெட்கமில்லாமல் அயல் மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறோம்
- ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறோம். இதுவும் ஒருவகையான பித்துக்கொளித்தனம் அல்லவா ?
தமிழ் நாட்டிற்குள் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதும், ஆங்கிலம் கலந்து பேசுவதும், தமிழின் உரிமையை நாம் விட்டுக்கொடுப்பதற்குச் சமம்அல்லவா ? சுரணையுள்ள தமிழன் இத்தவறைச் செய்யலாமா ?
உரிமையை விட்டுக்கொடுப்பவன் அவன் எத்துணைப் படித்தவனாக
இருந்தாலும் முட்டாளே ! மொழியுணர்வு இல்லாத முட்டாளாகத் தமிழன் இன்னும் இருக்கத்தான் வேண்டுமா ? “தமிங்கிலம்” நமக்குத் தேவையில்லை; ஆங்கிலம் நம் வீட்டு அடுக்களைக்குள் ஆட்சி செலுத்தவும் தேவையில்லை !
சுரணையுள்ள தமிழனாக இனி வாழ்வோம்; உரிமைகளை விட்டுக்கொடுத்து உயிர் வாழ்தலும் ஒரு வாழ்க்கையா ?
ஆங்கிலம் கலவாமல் பேசுவோம் ! தமிழனாக வாழ்வோம் ! ஆங்கிலேயனின் குருதி நம் உடலில் ஓடுகிறது என்னும் பழிச்சொல்லுக்கு இடந்தராமல் வாழ்வோம் !
இன்றே உறுதி எடுத்துக்கொள்வோம் ! தமிழும் ஆங்கிலமும் கலந்த கலவையான “தமிங்கிலம்” என் நாவில் இனித் தவழாது என்று உறுதி எடுத்துக் கொள்வோம் !. உறுதி எடுத்துக் கொள்ள மனமில்லையேல் “நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு” என்று நம் முன்னவன் பாரதி சொல்லிச் சென்றது நம்மைப் பார்த்துத்தான் என்று நாளை இந்த உலகம் நம்மை ஏசும் !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“தமிழ் மாலை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2055, கடகம் (ஆடி) 16]
{01-08-2024}
----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக