வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

புதன், 22 அக்டோபர், 2025

மாலை (65) எங்கும் குப்பை ! எதிலும் குப்பை ! எல்லா மனிதர்கள் மனத்திலும் குப்பை !

 

எங்கும் குப்பை ! எதிலும் குப்பை ! எல்லா மனிதர்கள் மனத்திலும் குப்பை ! 

----------------------------------------------------------------------------------------

“தீவாளி” என்று நம் மக்கள் நாவில் புழங்கி வந்த சொல் “தீபாவளி” என்று திருத்தம் பெற்று இப்பொழுது சில ஆர்வலர்கள் இடையே “ஓளித் திருநாள்” என்று உலவிக் கொண்டிருக்கிறது !

 

ஒளியாவது ? இருளாவது ? “நரகாசுரனைக் கண்ணபிரான் கொன்ற நாள்” என்னும் தொன்மக் கதைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அறிவார்ந்த சிந்தனைக்கு இடம் கொடுங்கள். “ஒளித் திருநாள்” ஏன் கொண்டாட வேண்டுமா ? என்று உரத்துக் கேட்கிறார் ஒருசிந்தனைச் செல்வர் ! 

 

29 இலட்சத்து 50 ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்றிக் கங்கை ஆற்றின் கரையில்  வரிசையாக வைக்கச் சொன்னார்  நாட்டை ஆளும் தலைமகன் ! இதுவல்லவோ “பக்தி” ? இதுவல்லவோ “ஆன்மிகம்”? பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடி ஆற்று நீருக்கு ஒளிவிளக்குகளைக் காட்டி வழிபடச் சொன்னது இன்னொரு அமைப்பு – வடபுலத்து  மக்களும் அவ்வாறே செய்து மகிழ்ந்தனர் !

 

எந்த மக்கள் ஆற்று நீரில் குப்பைகளைக் கொட்டி, ஆலைக் கழிவுகளை நாள்தோறும் ஆறுகளில்  கலந்து, இறந்த மனிதர்களின் ஆவி துறக்கம் புகும் பொருட்டு, பாதி எரிந்த பிணங்களை ஆற்றில் இழுத்து விட்டு, தூய்மையான ஆற்று நீரை வரைமுறையில்லாமல்   மாசு படுத்துகிறார்களோ அவர்கள் தான் “மாசுபட்ட” ஆற்றுக்கு ஒளிவிளக்குகளைக் காட்டி வழிபடுகிறார்கள் !

 

ஆம் ! நாகரிகமாக உடையணிந்து மகிழும் இந்தியர்கள், தம் அறிவை யாரிடமாவது அடகு வைத்துவிட்டு, நாகரிமற்ற செயல்களில் மகிழ்ச்சியோடு ஈடுபடுகிறார்கள் - ஒளித்திருநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் !

 

இந்த ஆண்டு, இந்திய நாட்டு மக்கள் உருபா ஏழாயிரம் கோடி மதிப்புள்ள வெடிகளை வெடித்து, தெருவெல்லாம் குப்பைக் காடாக்கி இன்பக் கண்ணீரில் திளைத்து மகிழ்ந்து கொண்டு  இருக்கின்றனர் ! ஊரெங்கும் புகை மண்டலமாக்கி, அவற்றை நுரையீரல்களில் நிரப்பிக்கொண்டு  மகிழ்ச்சியுடன் “ஒளித் திருநாளைக் கொண்டாடித் தீர்த்துவிட்டனர் !

 

தெருவெங்கும் தேங்கிக் கிடக்கும் “வெடித்தாள்  குப்பைகளைத் திரட்டி இன்னொரு இடத்தில் அவற்றைக் கொட்டி அங்கு “குப்பை மலைகளை” உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள் !

 

அறிவு மழுங்கிய  பெரிய மனிதர்களின் தவறான வழிகாட்டல்களால் இந்தியா விரைவாக முன்னேறுகிறது தூய்மையில்லாத “வல்லரசு” என்னும் இலக்கு நோக்கி !

 

எங்கும் குப்பை ! எதிலும் கழிவுகள் ! எல்லா ஆறுகளிலும் மாசு நிறைந்த “புனித நீர்” ! குப்பை மனம் படைத்த மக்கள் வாழும் நாடாகிவிட்டது இந்தியா !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம் முகநூல்,

[திருவள்ளுவராண்டு:2056, துலை (ஐப்பசி) 05]

{22-10-2025}

----------------------------------------------------------------------------------------

 

வியாழன், 2 அக்டோபர், 2025

மாலை (64) தெருக்களில் நாய்த் தொல்லை - தீர்வு என்ன ?

 

தெருக்களில் நாய்த் தொல்லை !

 

தெரு நாய்க் கடியால் இன்னலுறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடிக்கும் நாய்களில் எவை வெறிநாய்கள் , எவை வெறி பிடிக்காத நாய்கள் என்று நம்மால் பகுத்தறிய முடியாது !

 

நாய்க்கடியால் ஏற்படும் மனித இறப்பு எண்ணிக்கை ஒன்றாக இருந்தாலும் சரி, ஒன்றுக்கு மேற்பட்டவையாக இருந்தாலும் சரி, இறப்பு இறப்புதான். இறப்புக்குப் பின் எந்த உயிரையும்  யாராலும் மீட்க முடியாது !

 

இந்த நிலையில் தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல், துரத்தல், கடித்தல், கடித்துக் குதறல் ஆகிய நேர்வுகளுக்குச் சரியான  தீர்வு என்ன என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. நயன்மை மன்ற (JUDICIAL COURTS) நீதியரசர்கள் ஆய்வு செய்தும் சரியான தீர்வைச்  சொல்ல முடியவில்லை !

 

ஒவ்வொரு அமைப்பினரும் ஆளுக்கு ஒரு தீர்வைச் சொல்கிறார்கள்; எதுவுமே சரியில்லை. தெரு நாய்களுக்குக் காப்பகம் அமைத்து அங்கு அவற்றைப் பாதுகாத்து வாருங்கள் என்கிறது நயன்மை மன்றம் !

 

தங்குவதற்கு வீடில்லாமல் தெருவோர நடைபாதைகளில் துயிலும் கோடிக் கணக்கான மக்கள் வாழும் நம் நாட்டில் தெருநாய்களுக்குக் காப்பகம் அமைத்து அங்கு அவற்றைப் பேணி வாருங்கள் என்பது நகைப்புக்குரியதாக நீதியரசர்களுக்குத் தோன்றவில்லையா ?

 

தெருநாய்களுக்குக்  காப்பகம் அமைத்து அங்கு அவற்றைப் பாதுகாப்பது என்றால், ஒவ்வொரு ஊரிலும் போதுமான இட வசதி தேவை. கூண்டுகளுடன் கூடிய கட்டட வசதி, நாள்தோறும் உணவு அளிக்கும் வசதி, துப்புரவு செய்யும் வசதி, இவை போன்று இன்னும் எவ்வளவோ வதிகள் தேவை. துப்புரவுப் பணியாளர் அமர்த்தம், கால் நடை மருத்துவர் அமர்த்தம், காப்பகக் கண்காணிப்பு அலுவலர் அமர்த்தம் போன்றவை தவிர்க்கமுடியாதவை !

 

விலங்குகள் நல அமைப்பினர் இதற்கான செலவுத் தொகையை ஏற்க முன் வந்தால், பொருத்தமாக இருக்கும். ஆனால் அவர்கள் இதற்காகப் பைசா தரமாட்டார்கள். கூக்குரல் போடுவார்கள்; அல்லது முறை மன்றங்களுக்கு (COURTS)  சென்று தடையாணை வாங்குவார்கள். இவர்ர்களுக்கு வேறொன்றும் தெரியாது !  நாய்க்கடிக்கு ஆளானால் தான் இவர்களுக்கு மனித உயிர்களின் மேல் அக்கறை வரும் !

 

விலங்குகள்  நல அமைப்பினர் அறிவுக்கு ஒவ்வாத  ஒரு துலாக் கோல் வைத்திருக்கிறார்கள். அதன் ஒரு தட்டில் ஒரு நாயையும், இன்னொரு தட்டில் ஒரு மனிதனையும்  வைத்துப் பார்க்கையில்  நாயிருக்கும் தட்டு தாழ்ந்தும் மனிதன் இருக்கும் தட்டு உயர்ந்தும் இருந்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

 

இதற்கு மாறாக இருந்தால் முறைமை (நீதி) கேட்டு நயன்மை மன்றம் செல்கிறார்கள். நயன்மை மன்றமும் மற்ற பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் வழக்கை ஆய்வு செய்கிறது; தீர்ப்புச் சொல்கிறது ! இதுதான் மக்களாட்சிக் கோட்பாட்டின் உள்ளார்ந்த இலக்கு போலும் !

 

இந்தியாவில் அன்றாடம் ஆயிரக் கணக்கான மாடுகள் கொல்லப் படுகின்றன - அவற்றின் இறைச்சியை மனிதன் உண்பதற்காக ! நூறாயிரக் கணக்கில் ஆடுகள் கழுத்தறுத்துச் சாகடிக்கப்பட்டு – கடைதெருக்களில் கம்பிக் கொக்கிகளில் தொங்கவிடப்படுகின்றன – மனிதனின் உணவுக்காக !

 

கோடிக்கணக்கில் கோழிகள் கழுத்துத் திருகப்பட்டு, வெந்நீரில் அமிழ்த்தப்பட்டுச் சாகடிக்கப்படுகின்றன – மனிதன் உண்பதற்காக !

மனிதனின் உணவுக்காக என்று சொல்லி அன்றாடம் வேட்டையாடப்படும் பறவைகளும், பன்றிகளும், மீன்களும் கணக்கிலடங்கா ! 

 

இவையெல்லாம் விலங்குகள் நல ஆர்வலர்களின் கண்களுக்குத் தெரியவில்லை போலும் ! இறைச்சிக் கடையில், தோலுரித்துத் தொங்கவிடப் பட்டிருக்கும்  தன் தாயைப் பார்த்து, பக்கத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும்  குட்டி ஆடு “ம்ம்ம்ம்ம்மே ! ம்ம்ம்ம்ம்மே!”  என்று அடித்தொண்டையில் அச்சத்தினால் கதறுவதை  இந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பார்த்தது  இல்லையோ ?

 

சீனா, கொரியா போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உணவாகக் கொள்ளப்படுகிறது. அங்கெல்லாம் விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பு இல்லையோ ?

 

தெரு நாய்களில் 95 % எண்ணிக்கை உணவு கிடைக்காமல் எதையாவது தின்று உயிர் வாழ வேண்டிய அவல நிலையில் உள்ளன; உணவுக்காகத்  தவித்து அலைகின்றன. எதிர்ப்பட்டவர்களை அவை கடித்துக் குதறுகின்றன என்றால் அதற்குக் காரணம் பசி ! பசியன்றி வேறன்று ! 50% நாய்கள் நோயினால் தாக்குண்டு துன்பப்படுகின்றன !

 

இந்த அவல நிலையில் அவற்றின்மீது கருணையுள்ளோர், வலியில்லமல் அவற்றைச் சாகடிக்க முன்வர வேண்டும்.  உணவுக்காக விலங்குகளைக் கொல்லும் பண்பாடுடைய  நம் நாட்டில் தெரு நாய்களைப் பிடித்துக் கருணைக் கொலை செய்வதில் தவறே இல்லை!

 

தெருவில் விளையாடும்  குழந்தைகளும், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும், பணிக்குச் செல்லும் பாவையர்களும், அங்காடித் தெருவுக்குச் செல்லும் ஆடவர்களும் சாலையில்  மாலை வேளையில் மெல்ல நடைபயிலும் முதியவர்களும் தெருநாய்க்கடிக்கு ஆளாகாமல் அச்சமின்றி இயங்க வேண்டுமென்றால் தெருவில் திரியும் நாய்களைப் பிடித்து நச்சுப் புகையூட்டி வலியின்றிக் கொல்ல வேண்டும். இது தான் இப்போதைய ஒரே தீர்வு !

 

விலங்குகள் நல ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டு ஆரவாரக் கூச்சலிடும் அதிமேதாவிகள் அனைவருமே புலால் உண்ணாத “புத்தரின்” பிறங்கடைகளா ? கொசுவைக் கூட அடிக்காத ‘கொல்லா” நோன்பாளர்களா ? அவர்களை ஒரு பொருட்டாகக் கருதி,அரசோ, முறைமன்றங்களோ  தெரு நாய்கள் பற்றி முடிவெடுக்கத் தயங்கினால் நம்மைப் போன்ற முட்டாள்கள் உலகத்தில் வேறெவரும் இருக்க முடியாது. இல்லை என்பது கல்மேல் எழுத்தாக நிலைபெற்றுவிடும் !

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு:2056, கன்னி (புரட்டாசி)07]

{23-09-2025}

-----------------------------------------------------------------------------