தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தகைசான்ற தலைவர் !
சுவாமி வேதாச்சலம் என்னும் மறைமலை அடிகள் ( 1886 – 1950 )
15-07-1986 அன்று நாகப்பட்டினத்தில் பிறந்தார். தமிழ், சமற்கிருதம்,
ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் ஐயம்
திரிபறக் கற்று, புலமை பெற்ற மிகச் சிறந்த ஆய்வாளர்.
1935 –ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில்,
தமிழ் அறிஞர்களைக் கூட்டி, பல்வேறு இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளை ஆய்வு
செய்து திருவள்ளுவர் பிறந்தது கி.மு 31
–ஆம் ஆண்டு என்பதை உலகுக்கு அறிவித்தவர் இவரே !
இவர் நிறைய நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். பட்டினப்பாலை
ஆராய்ச்சியுரை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, தமிழர் மதம், திருவாசக விரிவுரை, பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும், யோகநித்திரை அல்லது அறிதுயில், மரணத்தின் பின் மனிதர் நிலை, தொலைவிலுணர்தல்,
மக்கள் நூறாண்டு வாழ்க்கை, பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் போன்ற பல்வேறு நூல்கள் இவரது
புலமையைப் பறைசாற்றுவன !
இவர் எழுதிய தமிழர் மதம் என்னும் நூல் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக
பதிப்பிக்கப்பெற்றது. பதிப்பகத்தாரின்
முன்னுரையில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அப்படியே இங்கு தரப்படுகின்றன !
”பெயரளவில் இந்நூல் ”தமிழர் மதம்” எனக் காணப்படினும், இது தமிழர் வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு, தமிழின் வரலாறு, தமிழ் நூல்களின் வரலாறு, தமிழ்ப்
பெருமக்கள் பனிமலை தொட்டு இனிய குமரிக் கோடு வரை வாழ்ந்து வந்த தொன்மைச் சிறப்பு
வரலாறு, இடையே ஆரியர் வந்து புகுந்து கலந்து
சீர்கேடு எய்திய சிறுமை முறைகள், மதம் என்னும் சொல்லாய்வு, ஒளி வழிபாட்டின் அடையாளமாகப் பகலவன் வழிபாடு தோன்றியமை, தீ வழிபாட்டின் அடையாளமாகச் சிவலிங்க வழிபாடு தோன்றியமை, திருக்கோயில்கள் தோன்றிய வரன்முறைகள், தமிழ் மந்திரங்களைக் கொண்டே திருமணச் சடங்குகள் நிகழ்ந்தமை, சைவம் வைணவம் என இரு பிரிவுகளின் தோற்றம், ஆரியர் கொண்டு வந்து புகுத்திய பொய் புனை நிறைந்த புராணக் கதைப்
புரட்டுகளால் எல்லையின்றி விரிந்த சிறு தெய்வ வழிபாடுகள், வடமொழிச் சடங்குகளைப் புறந்தள்ள வேண்டிய அகத்தியம், வடமொழி வாயிலான வழிபாட்டை மாற்ற வேண்டிய தேவை, ஆகியவை பற்றி எல்லாம் இந்நூலில் விரிவாக அடிகளார்
எடுத்துரைத்துள்ளார்..”
தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து, பிற மொழிக் கலப்பின்றித் தமிழில் பேசவும் முடியும்; எழுதவும் முடியும் என்று மெய்ப்பித்த பேரறிஞர் மறைமலை அடிகள்.
வடமொழியில் உள்ள நான்கு வேதங்களையும் கற்று, ஆய்வு செய்தவர். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர். 1938 –
ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
முன்னின்று நடத்தியவர். சென்னை
பல்லவபுரத்தில் (பல்லாவரம்) வாழ்ந்து வந்த அடிகளார் தமது 64 – ஆவது அகவையில் (15-09-1950)
அன்று
இவ்வுலக வாழ்வை நீத்தார் !
இவரது நினைவைப் போற்றும் வகையில் திரு.கருணாநிதி ஆட்சியில் இருந்த
போது சென்னை – செங்கை இடையே “மறைமலை நகர்” என்னும் நகரியத்தை தமிழக அரசு
உருவாக்கியது !
ஆர்வமும், வாய்ப்பும் மிக்க தமிழன்பர்கள்
அடிகளாரின் நூல்களை வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்களாக !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை.
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் மாலை”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2052, விடை (வைகாசி)
29]
{12-06-2022}
--------------------------------------------------------------------------------------
மறைமலையடிகள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக