வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

சனி, 11 ஜூன், 2022

மாலை (13) பணி ஓய்வும் அரசியல் நுழைவும் !

அரசியலில் சேரத் தடை விதிக்க வேண்டும் !

 -----------------------------------------------------------------------------------


நவம்பர் 28, 2018 தினமலர் செய்தித் தாளில் வெளிவந்துள்ள ஒரு செய்தியின்படி, ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அபராஜிதா சாரங்கி என்ற பெண்மணி ஒரு கட்சியின் தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்திருக்கிறார். இந்தப் பெண்மணி யார் தெரியுமா ? நடுவணரசுப் பணியிலிருந்து கடந்த செப்டம்பர் 15 ஆம் நாள் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி (I.A.S) அதிகாரி !

 

தமிழ் நாட்டிலும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ( I.A.S ) ஓய்வு பெற்ற திரு. மலைச்சாமி, இந்தியக் காவல் பணியிலிருந்து ( I.P.S ) ஓய்வு பெற்ற திரு நட்ராஜ், திருமதி திலகவதி, இந்தியத் தலைமை நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் இராமசாமி, மருத்துவப் பலகலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணை வேந்தர் திரு. இராஜன் ஆகியோர் தமிழ் நாட்டுக் கட்சி ஒன்றில் இணைந்த வரலாறு உண்டு !

 

அரசு அலுவல் என்பது மக்களுக்குச் சேவை செய்ய வழங்கப் பெற்றுள்ள ஒரு நல்வாய்ப்பு. அரசு அலுவலராகப் பணியேற்று இருப்பவர் துலாக் கோல் போல் நடுநிலை தவறாமல் செயலாற்ற வேண்டும். ஒருதலைச் சார்பு இல்லாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, நீதிமன்றப் பணி, பல்கலைக் கழகத் தலைமைப் பணி ஆகியவை பொறுப்புள்ள பதவிகள் அல்லவா ?

 

இப்பதவிகளை அலங்கரித்த பெருமக்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அரசியல் கட்சியில் சேர்வதும், அக்கட்சியின் சார்பாகத் தேர்தலில் நின்று பதவிகள் பெறுவதும் அவர்களது பேராசையின் வெளிப்பாடு அல்லவா ?

 

இத்தகைய பேராசைக்காரர்கள், அவர்கள் ஏற்றிருந்த பதவிப் பொறுப்புகளில் நடுநிலை தவறாமல் பணியாற்றியதாக எப்படி நம்பமுடியும்? பணி ஓய்வுக்குப்பின் அவர்கள் எந்தக் கட்சியில் இணைகிறார்களோ, அந்தக் கட்சிக்குச் சாதகமாகத்தானே அவர்கள் ஏற்றிருந்த அரசுப் பணிகளில் செயலாற்றி இருக்க முடியும் !

 

அரசுப் பணியை ஒரு குறிப்பிட்ட கட்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும், இத்தகைய ஆளிநருக்கு, பதவி ஓய்வுக்குப் பின் தேர்தலில் நின்று சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்திற்குச் செல்ல அக்கட்சி வாய்ப்பளிப்பதும் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான தவறான செயல் அல்லவா ?

 

பணி ஓய்வுக்குப் பின் அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறும் இத்தகைய பேராசைக்காரர்களை மோசடிக்காரர்கள் என்று சொன்னால் அது தவறா ? இந்த மோசடிக் காரர்களைத் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் அரசியல் தலைவர்களின் செயல் அறவழி தவறிய செயல் அல்லவா ?

 

அரசுப் பணி ஏற்றிருந்த காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யத் தவறிய இத்தகைய ஆளிநர்களை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கக் கூடாது !. பணி ஓய்வு பெற்ற பின் ஆயுட்காலம் வரை எந்தக் கட்சியிலும் சேரக் கூடாது என்று பணியாளர் சட்டத்தைத் திருத்த வேண்டும் !

 

அரசியல் சார்பற்ற சமூகச் செயற்பாட்டு இயக்கங்கள் இக்கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும் ! இதுவே இவ்வியக்கங்கள் மக்களுக்குச் செய்யும் நற்பணியாகும் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 28]

{11-06-2022}

-----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக