வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

செவ்வாய், 28 ஜூன், 2022

மாலை (26) வந்து ! வந்து ! வந்து ! ஊடகத்தில் தமிழ்க் கொலை !

திக்கித் திணறும் தொலைக் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் !

 

ஆய கலைகள்  அறுபத்து  நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை.....என்று நாமகளைப் போற்றிப் பாடுகிறார் கம்பர்.  கலைகளின் எண்ணிக்கை மொத்தம் அறுபத்து நான்கு என்பது தமிழ்ர்களின் பகுப்பீடு !  பேச்சுக் கலையும் அவற்றுள் ஒன்று !

 

பேச்சுக் கலை என்பது ஓரிரு மாதங்களில் கற்றுக் கொள்ளக் கூடிதன்று ! பள்ளிப் பருவத்தில் இருந்தே இதற்கான பயிற்சித் தொடங்க வேண்டும்.  பேச்சுக்கலையின் அடிப்படை, தமிழ் இலக்கணத்தை அறிவதிலிருந்து தொடங்குகிறது !

 

எழுத்துகளின் வகை, அவற்றின் பிறப்பிடம், அவை ஒவ்வொன்றும் ஒலிக்கும் மாத்திரை அளவு ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொள்ளும் மனிதனே பிற்காலத்தில் பேச்சுக் கலையில் சிறந்து விளங்கமுடியும் !

 

இக்காலக் கல்வித் திட்டம் தமிழில் உரையாற்றும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் இல்லை. இதற்குக் காரணங்கள்  இரண்டு !  (01) தமிழ்ப் பயிற்று மொழிப் பள்ளிக் கூடங்கள் எண்ணிக்கை அருகிவருகிறது; ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருகி வருகிறது.  (02) தமிழ் வழிக் கல்விக் கூடங்களில் தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் தமிழுணர்வும் இல்லை;  தமிழறிவும்  நிறைவாக இல்லை !

 

ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் அனைத்துப் பாடங்களுமே ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன;  தமிழுக்கு இங்கு இடமே இல்லை ! ஆனால் இங்கு படிக்கும்  பிள்ளைகள் அனைவருமே தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தமிழ்ப் பிள்ளைகள் !

 

இந்தப் பிள்ளைகளுக்குத் தமிழைச் சொல்லிக் கொடுப்பது யார் ?  யாருமே இல்லை ! பெற்றோரும், உற்றார் உறவினரும், அண்டை அயலாரும் பேசுகின்ற உரையாடலை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்து வரும் இந்தப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துகளின் வகைகளும் தெரியாது, அவ்வெழுத்துகளின் பிறப்பிடமும் தெரியாது, அந்த எழுத்துகள் ஒலிக்கும் மாத்திரை அளவும் தெரியாது ! தமிழில் எழுதவும் தெரியாது !

 

இப்படி ஒரு தலைமுறை உருவாகி வந்து விட்டது; இன்னும் சில தலைமுறைகள் அடுத்தடுத்து உருவாகப் போகின்றன.  இத்தகைய நிலை எதை நோக்கித் தமிழர்களை இட்டுச் செல்கிறது தெரியுமா  ?  நாடோடிக் கூட்டத்தினரைப் போல, பேச்சு மொழியாக  மட்டுமே தமிழ் இருக்கும்;  தமிழர்களின் எழுத்தில் தமிழ் இருக்காது; அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து அட்டாணிக்கால் போட்டுக் குந்தி கொண்டு தமிழர் இல்லங்களை ஆட்சி செய்யும் !

 

கல்வியாளர்கள் கல்வி அமைச்சர்களாக இல்லாத நாட்டில் கல்வி என்பது விற்பனைச் சரக்காகத் தான் இருக்குமே தவிர,  பிள்ளைகளின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்கும் ஊடகமாக இருக்காது !  அறிவூட்டம் பெறுதல்  என்னும் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய நம் கல்வித் திட்டம் பணத்தைத் தேடிப் பல்லக்கில் ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது !

 

தமிழர் என்னும் குடிப்பிறந்த  எவருமே தமிழில் பேசி, தமிழில் எழுதி, தமிழில் சிந்தித்து தம் வாழ்வைக் கொண்டுசெலுத்தினால் தான் தமிழ் வளரும்; வாழும் !  தமிழ்க் குடியில் பிறந்த  இளைஞர்கள் தமிழைத்  துறந்து,  ஆங்கில வழியில் படித்து, ஆங்கில வழியில் எழுதி, ஆங்கில வழியில் சிந்தித்து வந்தால், ஆங்கிலம் வளரும்; வாழும்; தமிழ் தளரும்; தாழும் ! அப்புறம் நமக்குத் தமிழர் என்னும் அடையாளம் எதற்கு ? தமிழ்ப் பண்பாடு எதற்கு ? தமிழ்நாடு என்று ஒரு நாடு தான் எதற்கு ?

 

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அந்த இனத்திற்குரிய மொழியை அழிக்க வேண்டும் என்றான் ஒரு  அறிஞன் ! இன்று தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது !

 

தமிழர் என்னும் இனத்தை அழிப்பதற்கு முன்னோட்டமாகத் தமிழ் வழிப் பள்ளிகளை எல்லாம் மூடிவிட்டு ஆங்கில வழிப் பள்ளிகளை ஆயிரக் கணக்கில்  திறந்து கல்வியையே வணிகமாயமாக்கி வரும்  தமிழக அரசும், அதன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும்  அரசியல் ஆளிநரும்  தமது தவறை உணரவில்லையானால், அடுத்த நூற்றாண்டில் தமிழ் என்ற ஒரு மொழியே இருக்காது; தமிழர் என்னும் ஒரு இனமும் இருக்காது !

 

ஆங்கில வழிக் கல்விப் பள்ளியில் படித்துவிட்டு, தனது வயிற்றுப் பாட்டுக்காகத் தொலைக்காட்சிச் செய்தி ஊடகங்களில் பணியாற்றிவரும்  தமிழ் இளைஞர்களின்  நாவில் தமிழ் எவ்வாறு தாண்டவமாடுகிறது பாருங்கள் !

 

நாடாலு மன்ற  கூட்டத் தொடர் வந்து வருகிர 14-ஆம் தேதி வந்து கூட்டப்பட இருக்கிரது. இதற்கான  ஏர்பாடுகள் வந்து வேகமாக  நடைபெற்றுக் கொண்டு  இருக்கிறது. குடியரசுத் தலைவர் வந்து இதர்கான அரிவிப்புகலை வந்து வெலியிட்டு இருக்கிறார்.  கூட்டத் தொடர் வந்து நடைபெற இருப்பதை முன்னிட்டு பிரதமர் வந்து மற்ற அமைச்சர்கலை வந்து அலைத்து ஆலோசனை செய்ய இருக்கிறார் !

 

நாடாலுமன்ற சபாநாயகர்  வந்து  அதிகாரிகலை வந்து அலைத்து தக்க ஏற்பாடுகலை வந்து  செய்யுமாரு அருவுறுத்தி இருக்கிறார்.  நாடாலுமன்ற விவகார அமைச்சர் வந்து எதிர்கட்சி தலைவர்களுடன் வந்து  கூட்டத்தை  சுமுகமாக வந்து நடத்துவது பற்றி  பேச இருக்கிறார். நாடாலுமன்றக் கட்டிடத்தை சுற்ரிலும் வந்து தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் வந்து செய்யப்பட இருக்கின்ரது.  முகில் தொலைக்காட்சிக்காக  ஒலிபதிவாலருடன் கூமுட்டைத் தமிழன்

 

மீண்டும் தளைப்புச் செய்திகள். நாமக்கல்லில் கோளி முட்டை விளை வீள்ச்சி அடைந்து விட்டது. தொட்டியத்தில் வாளைப்பளம்  வாங்குவார் இள்ளாமல் குவிந்து கிடக்கிறது. வியாளக் கிளமை தமிழ்நாடெங்கும் மளை பெய்ய வாய்ப்பு. இத்துடன் தளைப்புச் செய்திகள் நிரைவடைகின்றது

 

ஆங்கில வழிக் கல்வி நமக்கு அளித்திருக்கும் அவலம் தான் தமிழைத் தமிழாகப் பேசத் தெரியாத, தமிழில் எழுதத் தெரியாத இளைஞர்கள் கூட்டம் ! வல்லின மெல்லின இடையினம் தெரியாத  ஒரு தலைமுறை ! கர கர வேறுபாடு தெரியாத  எதிர்காலத் தமிழ்மன்னர்கள் !  நிமிடத்திற்கு ஏழு முறையாவது வந்து” “வந்து” ”வந்துசொல்லி நம் செவிகளில் காய்ச்சிய ஈயத்தை ஊற்றிக் கொண்டிருக்கும் கரிகால் வளவர்கள்”. அன்புடன் கேட்டுக் கொல்கிறேன்என்று  தமிழையும் கொன்று, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நம்மையும் கொல்கிற  தமிலர்கள்வால்க ! வலர்க !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 14]

{28-06-2022}

---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக