வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

சனி, 1 அக்டோபர், 2022

மாலை (43) பொதுநல வழக்குகளும் நீதிமன்றங்களும் !

 

இருமனிதர்கள் அல்லது அமைப்புகளுக்கு இடையே ஏற்படும் வழக்குகள் இரண்டு வகை. அவை:- (01) உரிமையியல் வழக்கு (02) குற்றவியல் வழக்கு!


இத்தகைய வழக்குகளை சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து தீர்ப்புச் சொல்ல வேண்டியது நீதி மன்றங்களின் கடமை. சட்டமன்றத்தால் அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு இணக்கமாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்து தீர்ப்புச் சொல்ல வேண்டியதும் நீதி மன்றங்களின் கடமை !

 

நீதிமன்றங்களின் கடமை மற்றும் அதிகாரங்கள் வரம்புக்கு உட்பட்டவை. வரம்பற்ற அதிகாரங்கள் எந்த நீதிமன்றத்திற்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் வழங்கப்படவில்லை !

 

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திரு.பகவதி என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது, ஒரு மூதாட்டி அவருக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்பி, பக்கத்து வீட்டுக்காரரால் தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக முறையிட்டிருந்தார் !

 

நீதிமன்ற நடைமுறை, வழக்குத் தொடுப்பவர் செலுத்த வேண்டிய கட்டணம் ஆகிய அனைத்திலிருந்தும் மூதாட்டிக்கு விலக்கு அளித்து அதைப் பொது நல வழக்காக அறிவித்து, அவருக்கு நீதி வழங்கித் தீர்ப்புச் சொன்னார் நீதிபதி பகவதி. . இந்தியாவில் எழுந்த முதல் பொதுநல வழக்கு இது !

 

பொதுநல வழக்குகள் என்பவை மிக மிக அரிதாக நீதிமன்றத்தால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் பொதுநல வழக்குகள், உரிமையியல் சட்டங்கள் அல்லது குற்றவியல் சட்டங்களின் வரம்புகளுக்குள் வருவதில்லை. ஆனால் இக்காலத்தில் உயர்நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு என்னும் பெயரில் கோமாளித்தனமானவழக்குகள் ஆயிரக்கணக்கில் தொடுக்கப் படுகின்றன. உயர்நீதிமன்றம் இத்தகைய பொதுநல வழக்குகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதும், காவல் துறை இயக்குநர், மாவட்ட ஆட்சித் தலைவர், அரசுச் செயலர் ஆகியோரிடம் அறிக்கை கேட்பதும் அரசின் ஆட்சி அதிகாரத்தில் குறுக்கீடு செய்யும் வகையில் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது ! இத்தகைய குறுக்கீடு இரண்டு வகைகளில் தவறாக அமைகிறது ! அவை :-

 

(01) பொதுநல வழக்கு தொடர்பாக நீதிமன்றங்கள் அரசுத் துறைகளிடம் அறிக்கை கேட்டு அடிக்கடிக் குறுக்கீடு செய்வதால், அவை தன் வழக்கமான கடமைப் பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியாமல் பணிச்சுமையால் செயலிழந்து போகின்றன !

(02) நீதி கேட்டுக் காத்திருக்கும் பொதுமக்கள், நீதிக்காகக் கால வரம்பின்றிக் காத்திருக்க வேண்டியிருக்கிறது ! பொதுமக்களது உரிமையியல் / குற்றவியல்  வழக்குகளுக்காக ஒதுக்கப் படவேண்டிய நேரத்தைப் பொதுநல வழக்குகள் வலிந்து பற்றிக் கொள்கின்றன !

 

ஒரு கோயிலில் இருந்த ஒரு மயில் சிலை பல ஆண்டுகளாகக் காணவில்லை; அஃது அங்குள்ள திருக்குளத்து நீருக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பேசப்படுகிறது என்றும் அதை மீட்டுத் தாருங்கள் என்றும் ஒரு கோமாளி பொதுநல வழக்குத் தொடுக்கிறார். நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று அரசுக்கு உத்தரவிடுகிறது. அறநிலையத் துறையினர், ஆட்களை வைத்து அந்தக் குளத்தில் தேடுகிறார்கள், தேடுகிறார்கள், தேடுகிறார்கள், தேடித் தேடிக் களைத்துப் போகிறார்கள் ! இறுதி வரை சிலை கிடைக்கவில்லை !

 

சிலையைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று காவல் துறையை அணுகவேண்டிய அந்தக் கோமாளி, நீதிமன்றத்தை நாடுவதும், அதை நீதிமன்றம் ஏற்று அறநிலையத் துறைக்கு உத்தரவிடுவதும் பொதுநலன் சார்ந்ததாம் ! நீதிமன்றம் தன் எல்லையைக் கடந்து தன்விருப்பாகச் செயல்படுவதாகாவே மக்கள் கருதுகிறார்கள்.  கோமாளிதான் நம் காதில் பூ சுற்றும் வேலையில் ஈடுபடுகிறார் என்றால்  நீதிமன்றமும் அவருக்குத் துணை போகலாமா ? !

 

பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது குடிக்கிறார்கள் என்று இன்னொரு கோமாளி பொதுநல வழக்குப் போடுகிறார். காவல் துறையைத் தானே அவர் அணுக வேண்டும். ஆனால் நீதிமன்றத்தை அணுகுகிறார். காவல் துறையை அணுகுங்கள் என்று சொல்ல வேண்டிய நீதிமன்றம், இதுபற்றி காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுக் கடைகளை எல்லாம் மூடுங்கள் என்று உத்தரவிட நேரிடும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது ! அரசுக்கு எச்சரிக்கை விடும் அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு யார் அளித்தது ?

 

உரிமையியல் / குற்றவியல் வழக்குகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நீதிமன்றம், தன் அதிகார வரம்புக்கு அப்பால்  சென்று மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒரு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. அரசினுடைய ஆட்சி அதிகாரங்களில் ஊடுறுவ முயல்கிறது. இது என்ன வகையான நீதி?

 

நீர்நிலை ஓரங்களில் சிறு சிறு வீடுகளைக் கட்டிக் கொண்டு, குடிசைகளைப் போட்டுக் கொண்டு வாழ்ந்து வரும் ஏழை ஏளிய மக்களை அப்புறப்படுத்துங்கள், அவர்களது வீடுகளை அகற்றுங்கள் என்று வேறு சில பொதுநல வழக்குகளில் அரசுக்கு ஆணையிடுகிறது நீதிமன்றம். சென்னை, திருச்சி, காஞ்சி, வேலூர் என்று பல இடங்களில் ஏழைகளின் வீடுகள் இடித்துத் தள்ளப்படுகின்றன !

 

எந்த ஏழை மக்கள் வாக்களித்து இப்போதைய மாநில அரசினைத் தேர்வு செய்தார்களோ அந்த ஏழை மக்களையே அரசுக்கு எதிராகத் திருப்பிவிடும் செயல் நீதிமன்றத்தின் துணையுடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது ! இதற்கு அடிப்படை பொதுநல வழக்காம் ! இடிக்கப்படும் வீட்டுக்குச் சொந்தக்காரன்ஏழைக் குடிமகன்மழைக்கு ஒதுங்க எங்கே போவான் ? சோறு பொங்க என்ன செய்வான் ? படுத்து உறங்க இடமின்றி என்ன செய்வான் ? அவனைப் பற்றிய சிந்தனையில்பொதுநலம்எங்கே போனது?

 

மாநில ஆட்சியை அகற்ற முயலும் சில ஆதிக்க மனப் பான்மையினர், நீதிமன்றத்தின் துணையோடு, வாக்களித்த ஏழை மக்களை ஆட்சிக்கு எதிராகத் திருப்பிவிடும் சதிச் செயல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் ஏழைகளின் வீடுகளை இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் !

 

சட்டமும் நீதியும் மக்களுக்காகத்தான் என்பதை நீதிமன்றங்கள் புரிந்து கொண்டு தீர்ப்புச் சொன்னால் ஏழைகள் வாழ்வார்கள்; மாறாக மக்கள்ஏழை எளிய அடித்தட்டு மக்கள்சட்டங்களின் நெடிய கரங்களால் குரல்வளை நெறிக்கப்பட்டு செத்தாலும் தாழ்வில்லை, சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்று  தீர்ப்புச் சொன்னால்அந்த நாட்டில் மக்களாட்சிக் கோட்பாடு மடிந்துவிட்டது என்று பொருள் !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கன்னி (புரட்டாசி) 14]

{01-10-2022}

--------------------------------------------------------------------------------------






 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக