வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மாலை (44) தமிழுக்கு மாறத் தயங்குவதேன் ?


நாம் தமிழர்கள் தானே ? தமிழுக்கு முதன்மை இடம் தருவது நமது கடமை அல்லவா ? உங்கள் முகநூல் கணக்கினைத் தமிழுக்கு மாற்றுங்கள் என்று பரப்புரை செய்து வருகிறோம். எப்படி மாறிக்கொள்வது என்பது பற்றிய விளக்கக் குறிப்பையும் தந்து வருகிறோம். அப்புறம் இன்னும் ஏன் தயக்கம்  என்று கேட்டால், கிடைக்கும் மறுமொழி என்ன தெரியுமா ?

 

எனக்குப் பிறமொழி நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள். என் முகநூல் கணக்கின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் தான் அவர்கள் என் முகநூலைப் பார்க்க முடியும்என்பது தான் இந்த நண்பர்கள் தரும் விளக்கம் !

 

இத்தகைய நண்பர்கள் ஒரு கருத்தைச் சிந்தித்துப் பார்க்கவில்லை என்றே கருதுகிறேன் !

 

உங்கள் முகநூல் கணக்கு .K.R.RAMASAMI என்னும் பெயரில் இருக்கிறது. உங்களுக்கு தெலுங்கு நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. உங்கள் தெலுங்கு நண்பர்களின் வசதிக்காக  நீங்கள் உங்கள் முகநூலில்  தெலுங்கிலா பதிவுகள் செய்கிறீர்கள் ? தமிழில் தானே பதிவுகள் செய்கிறீர்கள். அப்புறம் K.R.RAMASAMY என்னும் பெயர் மட்டும் ஆங்கிலத்தில் இருந்து என்ன பயன் ? அந்தப் பெயரைகு.இரா.இராமசாமிஎன்று தமிழில் மாற்றுவதால் தெலுங்கு நண்பர்களுக்கு என்ன இடையூறு ஏற்படப் போகிறது ?

 

நீங்கள் மும்பையில் பணிபுரிகிறீர்கள். உங்களுக்கு மராட்டிய நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் வசதிக்காக உங்கள் முகநூலில் மராட்டிய மொழியிலா பதிவுகள் செய்கிறீர்கள் ? தமிழில் தானே எல்லாப் பதிவுகளும் இருக்கின்றன ! அப்புறம் முகநூல் கணக்கின் பெயர் மட்டும் M.S.GOVINDASAMY என்று ஆங்கிலத்தில் இருப்பதால் என்ன பயன் ? இந்தப் பெயரை மு.சா.கோவிந்தசாமி என்று தமிழில் மாற்றிவிட்டு, முகநூலின் முகப்புப் படமாக உங்கள் நிழற்படத்தை வையுங்கள். உங்கள் நிழற்படத்தை அடையாளம் கண்டு உங்கள் மராட்டிய நண்பர்கள், உங்கள் முகநூலில் படம் பார்த்துக் களிக்கட்டும் !

 

பிறமொழி நண்பர்களுக்காக என் முகநூல் பெயரை K.R.SEKAR என்று ஆங்கிலத்தில் வைத்திருக்கிறேன் என்று இனி பொருந்தா வாதம் செய்யாதீர்கள். நீங்கள் எந்த மாநிலத்தில்  அல்லது எந்த நாட்டில் வாழ்ந்தாலும் உங்கள் அன்னையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் அல்லவா ? அது போல் உங்கள் அன்னை மொழியையும் விட்டுக் கொடுக்கக் கூடாது !

 

தமிழன் என்பது நீங்கள் சார்ந்துள்ள இனம். அந்தத்தமிழன்என்னும் அடையாளத்தை உங்களுக்குத் தருவதுதமிழ்”. உங்களை இந்த உலகத்திற்கு அடையாளப் படுத்திக் காட்டும்தமிழ்என்னும் உயர்ந்த தெய்வத்தை உதறிவிட்டு, “ஆங்கிலம்என்னும் அடுத்த நாட்டு அடையாளத்தைச் சுமக்கலாமா ? அது உங்களுக்கு இழுக்கல்லவா ?

 

தாயைப் புறக்கணிப்பவன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது ! அதுபோல் தாய்மொழியைப் புறக்கணிப்பவனும் முன்னேற முடியாது ! அறியாமை என்னும் இருளில் வீழ்ந்து கிடக்காமல், அறிவு என்னும் விளக்கு இருக்கும் பக்கம் வாருங்கள் ! உங்களுக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்புக் கூற தமிழ்க் குமுகாயம் காத்திருக்கிறது !

 

இருபத்து நான்கு  மணி நேரத்திற்குள் உங்கள் முகநூல் கணக்கினைத் தமிழுக்கு மாற்றிவிட்டுநான் தமிழண்டாஎன்று மார் தட்டிக் கூவுங்கள் ! அதுவே நீங்கள்தமிழன்என்பதற்கான அடையாளம் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, கன்னி (புரட்டாசி)11]

{28-09-2022}

-------------------------------------------------------------------------------------------------------






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக