வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

சனி, 22 ஜூன், 2024

மாலை (56)பழமொழிக் கதைகள் - பனியால் குளம் நிறைதல் இல் !

 

பழமொழி நானூறு (பாடல்.236) பனியால் குளம் நிறைதல் இல் !


தஞ்சை மாவட்டம் உரத்தநாடு அருகிலுள்ள பாப்பாநாடு என்னும் ஊரைச் சேர்ந்தவன், திருமாவளவன்.  ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் விடாமுயற்சியால் இளங்கலைப் பட்டப்படிப்பு வரைப் படித்து, ஊராரிடம் நல்லபிள்ளை என்று பெயரெடுத்திருந்தான் ! இளம் அகவையிலேயே தந்தையை இழந்துவிட்ட அவன், தாயாரின் அரவணைப்பில் நல்லொழுக்கமுள்ள பிள்ளையாக வளர்ந்து, நேர்மையின் மறுவடிவாக வாழ்ந்து வந்தான் !

 

வேளாண் நிலம் ஏதுமில்லாத விளிம்பு நிலைக் குடும்பம். தாயார் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்துவந்தார்.. தாயும் மகனும் பனை ஓலை வேய்ந்த கூரைவீட்டில் உனக்கு நான், எனக்கு நீ என்று ஒருவர்க்கொருவர் துணையாக வாழ்ந்து வந்தனர். தாயார் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு பக்கத்திலேயே மகனுக்குச் சிறு கடை ஒன்று வைத்துக் கொடுத்திருந்தார் !

 

இயற்கையாகவே தமிழில் ஈடுபாடு கொண்டிருந்த திருமாவளவன், பிறருடன் உரையாடுகையில் பிறமொழிச் சொற்கள் கலவாமல் பேசுவதில் வல்லமை பெற்றவனாகத் திகழ்ந்தான். அவனிடமிருந்த தமிழார்வம் காரணமாக பாப்பாநாடு ஆ.மதிவாணன், கா.தெற்கூர் தமிழ்த்தென்றல் போன்ற தமிழன்பர்களின் நல்லாதரவைப் பெற்றிருந்தான் !

 

ஒருநாள் அவன் கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கலைக் கல்லூரி முதல்வரைச் சந்திக்கச் சென்றிருந்த போது, அவனது ஓலைக் கூரை வேய்ந்த கடையில் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து போய்விட்டது. கடையில் வைத்திருந்த பொருள்களெல்லாம் தீக்கிரையாகி திருமாவளவனை பெரும் இழப்புக்கு ஆளாக்கிவிட்டது !

 

மாலையில் வீடு திரும்பிய திருமாவளவனும் அவன் தாயாரும் சாம்பலாகிக் கிடந்த கடையைப் பார்த்துக் கலங்கிப் போய்விட்டனர். அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தை தடுமாறிக்கொண்டிருந்த போது, தமிழன்பர் ஆ.மதிவாணன் செய்தி கேள்விப் பட்டு அங்கு வந்து சேர்ந்தார். பட்டுக்கோட்டை சென்றுவிட்டு உரத்தநாடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ்த் தென்றலும், பேருந்திலிருந்து இறங்கி திருமாவளவனைக் காணச் சென்றார் !

 

அருகிலிருந்த ஆலமரத்தடி மேடையில், ஊர்மக்களெல்லாம் ஒன்று கூடி தமிழன்பர் மதிவாணன், தமிழ்த்தென்றல் இருவருடனும் கலந்துரையாடி திருமாவளவனுக்கு எந்தவகையில் உதவி செய்யலாம் என்று ஒருவர்க்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். பாப்பாநாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் உருபா 100 வீதம் பணவுதவி செய்தால் கடைக்கான சிறு கட்டடத்தை எழுப்பி அதில் மீண்டும் கடையை வைத்து, தன் பிழைப்புக்கான ஆதாரத்தை திருமாவளவன் கட்டியெழுப்பிக்கொள்ள முடியும் என்று திரு மதிவாணன் தன் கருத்தைச் சொன்னார் !

 

கூட்டத்தில் கலந்துகொண்ட காவி வேட்டிக்காரர் ஒருவர், வீட்டுக்கு வீடு நன்கொடை கேட்பது தவறான எடுத்துக்காட்டு ஆகிவிடும், அதை நான் ஏற்கமாட்டேன் என்று உரத்துச் சொன்னார். அவரது கருத்து கலகத்திற்கு வித்திட்டது. அதன் விளைவாக இருவேறு கருத்துகள் நிலவியதால் பத்துப் பேரைத் தவிர ஏனையோர் கலைந்து சென்றனர் !

 

பத்துப் பேரில் ஒருவர், நாம் ஆளுக்கு 500 உருபா பணவுதவி செய்யலாம் என்று கூறினார். அவரது கூற்றைக் கேட்ட திரு. மதிவாணன் இதுவே நமது முடிவென்றால் உருபா 5000 திரளும். இதை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்யமுடியும். மழை பெய்தால் தான் குளம் நிரம்பும்; பனி பெய்வதால் குளம் நிரம்பிவிடாது. உருபா 500 என்பது பனித்துளி போன்றது. நமது மூதாதையான புலவர் முன்றுரை அரையனார் தனது நூலான பழமொழி நானூற்றில் சொல்வதைக் கேளுங்கள் !

 

-----------------------------------------------------------------------

பழமொழி நானூறு (பாடல்.236)

-----------------------------------------------------------------------

இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்

முனியார் செயினும் மொழியால் முடியா

துனியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப !

பனியால் குளம் நிறைதல் இல் !

-----------------------------------------------------------------------

 

நம்மில் யாரேனும் ஒருவர் துன்புறுவாராயின் அவர் துன்பத்தைப் போக்க நாம் முழுமுயற்சியுடன் முயல வேண்டும். அவரது மன வருத்தமும் துன்பமும் நீங்க அவருக்கு ஆறுதல் மொழிகள் மட்டும் போதாது, போதுமான அளவுக்கு உதவிகளையும் கட்டாயம் செய்ய வேண்டும். பொழியும் பனியால் குளம் நிரம்பிவிடுமா ? நிரம்பாதல்லவா? அதுபோலத்தான் நண்பரின் துயர் துடைத்திடும் முயற்சி வெறும் பனித்துளிகளாக மட்டும் இல்லாமல் அடர்ந்த மழைத் துளிகளாகவும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான அன்பு !

 

நான், என் சார்பில் உருபா ஐந்தாயிரம் நன்கொடையாகவும், இன்னொரு ஐந்தாயிரம் கடனாகவும் தருகிறேன். இயன்றபோது கடனைத் திருப்பித்தரட்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

 

அங்கு அமர்ந்திருந்த எஞ்சிய ஒன்பது பேரும் திரு.மதிவாணன் அவர்களின் கருத்தினை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டனர் ! அப்புறம் என்ன ? மறுநாள் உருபா நூறாயிரம் (ஒரு இலட்சம்) திருமாவளவன் கைகளில் தவழ்ந்தது. ஒரு ஏணாளுக்குள் (வாரத்திற்குள்) கடை மீண்டும் முளைத்தது; அதை திரு. தமிழ்த் தென்றல் அவர்கள் தலைமையில் திரு.மதிவாணன் அவர்களே திறந்துவைத்து வாழ்த்துரையும் வழங்கினார் !

 

”பனியால் குளம் நிறைதல் இல்” என்னும் முன்றுரை அரையனாரின் சொற்களுக்குத் தான் எத்துணை வலிமை !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்,

[திருவள்ளுவராண்டு: 2055 ஆடவை, 08]

{22-06-2024}

------------------------------------------------------------------------------------------


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக