பழமொழி நானூறு (151) நாய் பெற்ற தெங்கம் பழம் !!
வண்டியில் சென்ற ஒருவரின் பையிலிருந்து தவறி விழுந்த முழுத் தேங்காய் ஒன்று தெருவில் ஓரமாகக் கிடந்தது ! அந்தப் பக்கமாக வந்த நாய் அதைக் கவ்விக் கொண்டு குப்பைத் தொட்டி அருகில் சென்று படுத்துக் கொண்டது !
தேங்காய்ப் பருப்பின் சுவை அறிந்த அந்நாய், ஓட்டுக்குள் இருக்கும் பருப்பைத் தின்ன வழி தெரியாது விழித்துக் கொண்டிருந்தது! நாயையும் தேங்காயையும் பார்த்த சிலர், தேங்காயை எடுக்க முயன்றனர் !
அவர்கள் முயற்சியைத் தன் உறுமல் மூலம் அந்த நாய் தகர்த்தெறிந்தது. வேறு சிலர் ஒரு குச்சியை எடுத்து நாயை விரட்டிவிட்டுத் தேங்காயை எடுக்கத் துணிந்தனர். நாய் அவர்களை தேங்காயை எடுக்கவிடாமல், மீண்டும் மீண்டும் உறுமியது !
நாயும் தேங்காயைத் தின்ன முடியவில்லை; தேங்காயை எடுக்க வந்தவர்களையும் அது அண்ட விடவில்லை ! இந்த நாயைப் போல் தான் உலகத்திலும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் !
காரணமே சொல்ல முடியாத வகையில், சிலரிடம் பணம் குவிந்து விடுகிறது. அந்தச் செல்வத்தைத் துய்க்க (அனுபவிக்க) மனமில்லாமல் கருமியாக அவர்கள் விளங்குகிறார்கள் !
தானும் அந்தச் செல்வத்தைத் துய்ப்பதில்லை; வறுமையில் வாடுபவர்களுக்கும் அந்தச் செல்வத்தைக் கொடுத்து உதவுவதில்லை ! தேங்காயைத் தானும் தின்னாமல், அதை எடுக்கத் துணிந்தவர்களுக்கும் கொடுக்க மனல்லாமல் குப்பைத் தொட்டியருகில் காவல் காக்கும் நாயைப் போன்ற இழிந்த கருமிகளும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள் !
இந்தக் கருத்தை ஒரு பாடல் மூலம் விளக்குகிறார் பண்டைப் புலவர் முன்றுறை அரையனார் !
-----------------------------------------------------------------------
பழமொழி நானூறு பாடல்: (151)
-------------------------------------------------------------------------
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப ! – அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்.
-----------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------
வழங்கலும் = வறியோர்க்குக் கொடுத்து உதவுதலும் ; துய்த்தலும் =
செல்வத்தைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்ளுதலும் ; தேற்றா =
அறிவிலார்; முழங்கு
முரசுடைச் செல்வம் = வெற்றி முரசு கொட்டும் மான்னர்களுக்கு இணையான பெருஞ் செல்வம்; தழங்கு = முழங்கு; வேய்= மூங்கில்; முத்து உதிரும் =
அரிசியை உதிர்க்கும்; வெற்ப = மலைகளுக்கு உரியவனே ! ; தெங்கம் பழம் =
தேங்காய்.
------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------------------------------------------------------------
அருவிகளில் வீழும் நீரினால் எழும் முழக்கமும், முற்றிய மூங்கில்களில் விளையும் அரிசியும் (முத்துக்கள்) நிறைந்த மலைவளம் மிக்க குறிஞ்சி நிலத் தலைவனே ! உனக்கு ஒன்று சொல்கிறேன் ! கேள் !
வெற்றி முரசு கொட்டும் மாமன்னர்களுக்கு இணையாகச் செல்வம் வைத்திருக்கும் சில மனிதர்கள், அந்தச் செல்வத்தைத் தாமும் துய்க்காமல், வறியவர்களுக்கும் கொடுத்து உதவாமல் கருமிக் குணம் கொண்டர்வளாக இருக்கிறார்கள் !
இது எப்படி இருக்கிறதென்றால், தானும் தின்னமுடியாமல், தின்பவர்களையும் எடுக்கவிடாமல் தேங்காயை நாய் காவல் காப்பது போன்றல்லவோ உளது !
”நாய் பெற்ற தெங்கம் பழம்” என்னும் பழமொழியை வைத்து முன்றுறை அரையனார் படைத்திருக்கும் இப்பாடல், உலகத்தாரைப் பார்த்து, “உங்களிடமுள்ள மிகுதியான செல்வத்தை, இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள், அது தான் மனிதப் பிறவி எடுத்ததற்கான பயன்” என்று தெள்ளத் தெளிவாக எடுத்து உரைக்கிறது !
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”தமிழ்மாலை” வலைப்பூ
[திருவள்ளுவராண்டு: 2055,ஆடவை (ஆனி)
08]
{22-06-2024}
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக