வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

சனி, 22 ஜூன், 2024

மாலை (58) பழமொழிக் கதைகள் - புலி முகத்து உண்ணி பறித்து விடல் !

 பழமொழி நானூறு (74) புலி முகத்து உண்ணி பறித்துவிடல் !


கிருட்டினகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள தேன்கனிக் கோட்டை என்னும் ஊர் குன்றுகளும் காடுகளும் நிறைந்துள்ள வனப்பகுதி. மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சியாக இவ்வூர் அமைந்துள்ளது !

 

இவ்வூரைச் சேர்ந்தவன் பாலையா. சிறு சிறு திருட்டுகளை நடத்தி வாழ்க்கை நடத்தி வந்த இவன், அடுத்து வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடலானான். காவல் துறையில் சிக்காமல் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்துவதில் வல்லவனாகத் திகழ்ந்தான்! தனது குற்றச் செயல்களைத் தான் வாழுமூரில் செய்யாமல், தொலைவிலுள்ள காட்டுப் பகுதிகளிலேயே செய்து வந்தான் !

 

திருமணமாகி மனைவியும் இரு குழந்தைகளும் இருந்த நிலையில் வாழ்க்கைச் செலவுக்கு வேறு நல்ல வழிகளைத் தேடிக்கொள்ள அவனுக்கு ஏனோ விருப்பமில்லாமற் போயிற்று !

 

ஒருநாள் தேன்கனிக் கோட்டைக்குத் தெற்கேயுள்ள அஞ்சட்டி வனப்பகுதியில் வழிப் போக்கர்களின் வருகைக்காகக் காத்திருந்தான். அப்போது அவன் எதிர்பாராத வகையில் சிறுத்தையொன்று அவனைத் தாக்கியது !

 

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பாலையா தனது உடல் வலுவையெல்லாம் ஒன்றுதிரட்டி, தன்னிடமிருந்த குத்துவாளினால் சிறுத்தையைச் தாக்கினால். குத்துப்பட்ட சிறுத்தை, வலி தாங்காமல் அவனைவிட்டு விலகி ஓடிப் போயிற்று !

 

சிறுத்தையுடன் போராடி, உடலெல்லாம் காயங்களுடன் தப்பித்த பாலையா, மிகுந்த களைப்பினால் சோர்ந்து விழுந்தான். வெகுநேரம் கழித்து நாலைந்து கல்லூரி மாணவர்கள் அவ்வழியாக வந்தனர். இயற்கைக் காட்சிகளைச் சுவைக்கும் நோக்கில் ஒற்றையடிப் பாதை வழியாக கையில் பதிகையுடன் (Camera) பாலையா இருக்குமிடம் வந்து சேர்ந்தனர் !

 

ஒரு மரத்தடியில், காயங்களுடன் படுத்திருக்கும் பாலையாவைக் கண்டு, அவனுக்கு உதவி செய்யும் நோக்கில் அவனருகில் வந்து, தம்மிடமிருந்த மருத்துவ முதலுதவிப் பொருள்களைக் கொண்டு அவனது காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டுப் போடலானான், மாணவர் குழுத் தலைவன் நாவரசு !

 

அப்போது அம்மாணவர்களில் ஒருவனான நாவலர் நம்பிக்கு, செய்தித் தாள் ஒன்றில் சில மாதம் முன்பு வெளியாகியிருந்த பாலையாவின் நிழற்படமும் அவனைப் பற்றிய செய்திகளும் ஞாபகத்திற்கு வந்தன. அவன் ஒரு வழிப்பறிக் கொள்ளையன் என்பதையும், பணத்திற்காகக் கொலை செய்யக் கூட அஞ்சாதவன் என்பதையும் நாவலர் நம்பி புரிந்துகொண்டான் !

 

நாவலர் நம்பி, பிற மாணவர்களிடம் தானறிந்துள்ள செய்திகளை மெல்லிய குரலில் எடுத்துச் சொல்லி, அவனுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினான்! ஆனால் துன்பத்தில் இருப்பவனுக்கு உதவி செய்வது மனிதக் கடமை என்று அறம் பேசிவிட்டு, பாலையாவுக்கு தான் கொண்டுவந்திருந்த உணவுப் பண்டங்களையும் குடிநீரையும் கொடுத்து அவனது களைப்பு நீங்கச் செய்தான் நாவரசு!

 

உடலில் தெம்பு வந்ததும், மாணவர்களுக்கு நன்றி கூறி அவர்களது உதவியைப் பாராட்டினான் பாலையா. ஆனால் சற்று நேரம் கடந்ததும், அவனுக்குள் ஒளிந்து கிடந்த ”வழிப்பறிக் கொள்ளையுணர்வு” அவனை ஆட்டி வைக்கத் தொடங்கியது. மாணவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கைக் கடகம் போன்றவையும், விலையுயர்ந்த கடிகாரம் போன்றவையும் அவன் அறிவைக் கலங்கச் செய்தன !

 

மாணவர்களை வழிப்பறி வெறியுடன் பார்க்கலானான். அவன் பார்வையில் காணப்பட்ட மாற்றங்களைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். அவ்வளவு தான் ! பாலையா தன்னிடமிருந்த குத்துவாளை எடுத்து, அவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்த உடைமைகளைப் பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டிவிட்டான் !

 

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெகுதொலைவு ஓடிச் சென்ற மாணவர்கள் இரண்டொரு வீடுகள் தென்பட்ட ஊர் வந்து சேர்ந்ததும் அங்கு ஓரிடத்தில் அமர்ந்து இளைபாறிக் கொண்டே பேசலானார்கள் !

 

பாலையாவுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று விழிப்புரை (எச்சரிக்கை) நல்கிய நாவலர் நம்பி மெல்ல நாவரசிடம் பேசலானான். “நாவரசு ! பிறருக்கு உதவி செய்வது மனிதக் கடமைதான் ! ஆனால், மனிதத் தன்மையிலிருந்து விலகி விலங்கின் குணத்தை அடைந்துவிட்ட மனிதர்கள், உருவத்தில் மனிதனானாலும் உள்ளத்தால் விலங்குகள் !

 

அதுவும் கொடுமைக் குணம் நிறைந்த விலங்குகளுக்கு நாம் உதவி செய்யக் கூடாது. அறம் என்று நினைத்துக்கொண்டு உதவி செய்தால் என்னவாகும் தெரியுமா ? நம் முன்னோரான முன்றுரை அரையனார் என்பவர் பழமொழி நானூறு” என்னும் நூல் வாயிலாக சொல்லிச்சென்ற ஒரு அறிவுரைப் பாடலை இப்போது சொல்கிறேன், கேள் !

-------------------------------------------------------------

பழமொழி நானூறு (74)

-------------------------------------------------------------

கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைம்மிக

நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,

எண்ணி இடர்வரும் என்னார் புலிமுகத்து

உண்ணி பறித்து விடல்.

---------------------------------------------------------------

(சந்தி பிரித்து எழுதிய பாடல்)

---------------------------------------------------------------

கண் இல் கயவர் கருத்து உணர்ந்து கை மிக

நண்ணி அவர்க்கு நலன் உடைய செய்பவேல்

எண்ணி இடர் வரும் என்னார் புலி முகத்து

உண்ணி பறித்துவிடல்.

----------------------------------------------------------------

புலியின் முகத்தைப் பாதுகாப்பாகப் பற்றிக் கொண்டு அதன் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் உண்ணிப் பூச்சிகளை, புலியின் மீது இரக்கம் கொண்டு, எடுத்து விடும் செயல் அறத்தின்பாற் பட்டதன்று. உண்ணியை எடுத்துவிட்டதும், புலி நம்மையே அடித்துத் தின்றுவிடும். தீயவர்களுக்கு நன்மை செய்வதும், நமக்குக் கேடு தருவதாகவே அமைந்துவிடும் !

 

புலி முகத்தில் உண்ணி பறிப்பவர் எவ்வாறு துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வருமோ அவ்வாறே தீயவர்களுக்கு உதவி செய்பவரும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது இப்பாடலின் கருத்து ! தகாதவர்களுக்கு இனி உதவி செய்ய நினைக்காதே ! இன்று நாம் அனைவரும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறோம் ! அது நம்மை என்றென்றும் வழிநடத்திச் செல்லும்!

வாருங்கள் செல்வோம் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்.

”தமிழ்மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2055, ஆடவை (ஆனி) 08]

{22-06-2024)

----------------------------------------------------------------------------------


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக