பகுத்தறிவற்ற பண்டிதர்கள் !
-------------------------------------------------------------------------------------
இந்தியாவில் கொரோனா பெருந் தொற்று இரண்டாவது அலை மிக
விரைவாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் திண்டாடி
வருகின்றனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது !
உயிர்காக்கும் அருமருந்தான உயிர்வளி (OXYGEN) கிடைக்காமல் பெருந்தொற்று
நோயாளிகள் கொத்துக்கொத்தாகச் செத்து விழுகின்றனர். தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு
ஏற்பட்டு, செய்வதறியாமல் மக்கள் திகைத்துப்போய்
இருக்கிறார்கள் !
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை பேயாட்டம்
ஆடி மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்துப் போட்டுவிட்டது. நாட்டின் பொருளாதாரமும்
வீழ்ச்சியடைந்து விட்டது. இதிலிருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டிய அரசுகள், விழித்துக் கொண்டனவா ? அறிவார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனவா என்பதை ஆய்வு செய்வோம் !
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை முற்றிலும் ஓய்ந்து மக்கள்
இயல்பு நிலைக்குத் திரும்பி வர போதிய கால இடைவெளி தந்திருக்க வேண்டும் . இதற்கு
மாறாக அடங்கிப் போயிருந்த கொரோனா பெருந்தொற்று மீண்டும் வீரியத்துடன் உயிர்த்து
எழுவதற்கு மைய அரசும் மாநில அரசுகளும் இடம் தந்து விட்டன !
உத்தரப்பிரதேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் கங்கை
ஆற்றில் மூழ்கி எழுகின்ற “ கும்பமேளா” என்னும் கூத்தினை அம்மாநில அரசு நடத்திக்
காட்டியது. கும்பல் கூடும் இடத்தில் கொரோனா நோய்மிக்கு (VIRUS) கொண்டாட்டம் என்பது அம்மாநில
அரசுக்கு ஏன் தெரியாமல் போனது ?
“கும்பமேளா” கூத்தில் கலந்துகொண்ட
கோடிக்கணக்கான சாமியார்களும் மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கும் மக்களும் நோய்மிகளை
(VIRUS) நாடு எங்கும் கொண்டு போய் சேர்க்கும் முகவர்களாக
மாறிப் போயினர். மதத்தையும் இறை நம்பிக்கையையும் கையில் எடுத்துக்கொண்டு அரசியல்
செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசினர் மக்களைக் கொரோனாவுக்குப் பலிகொடுக்கும்
பூசாரிகளாக மாறிப் போயினர் !
மைய அரசின் எடுபிடிகளாக மாறிவிட்ட இந்தியத் தேர்தல்
ஆணையம் தங்களை மாமேதைகள் ஆகக் கருதிக்கொண்டு ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத்
தேர்தலை அறிவித்தது பகுத்தறிவற்ற செயல் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை !
தேர்தல் பரப்புரை என்ற பெயரில் மக்களைக் கூட்டங்கூட்டமாகப் பல்லாயிரக்கணக்கில் ஒரே இடத்தில் கூடிநின்று அரசியல் தலைவர்களின் பேச்சினை கேட்க வாய்ப்பளித்தது தேர்தல் ஆணையம் செய்த மாபெரும் தவறு. மக்களை பெரும் தொற்றிலிருந்து காக்க வேண்டும் என்னும் அறிவில்லாமல் சட்டத்தின் தேவையை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு சட்டமன்றத் தேர்தல்களை 5 மாநிலங்களில் அறிவித்தது எந்த வகையில் ஞாயம் ?
மக்களின் உயிர், தேர்தல்
ஆணையத்திற்குக் கிள்ளுக்கீரையாகத் தெரிகிறது போலும் ! கொரோனா பெரும் தொற்றினால்
மக்கள் மடிந்தாலும் கவலை இல்லை; தேர்தலை நடத்தியே தீருவோம்
என்று முடிவு எடுத்து செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்கு” பாரத ரத்னா’ விருது
கொடுத்து பெருமைப்படுத்தக் கூடச் செய்வார்கள் !
நாட்டின் நலனையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொள்ளவேண்டிய பாரதிய
சனதா அரசின் நடுவண் அரசு அமைச்சர்கள் தமிழ்நாட்டிலும் தேர்தல் நடைபெற்ற மேற்கு
வங்காளம், புதுவை, அசாம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் பல்லாயிரக் கணக்கில் மக்களைத் திரட்டி,
தேர்தல் பரப்புரை செய்தார்கள். அவர்களது பரப்புரைக் கூட்டத்திலும்
யாரும் முகக் கவசம் அணியவில்லை; தனிமனித இடைவெளியைப்
பின்பற்றப்படவில்லை; கொரோனா தவிர்ப்புக்கான எந்த
முயற்சியையும் எடுக்கவில்லை !
இன்று, கொரோனா பெரும் தொற்றின் இரண்டாவது அலை முழுவீச்சில் பரவிக்
கொண்டிருப்பதற்கு முழுமுதற் காரணம் மைய அரசும், தேர்தல்
ஆணையமும், அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆகும். இந்திய
நாட்டின் தலைமை அமைச்சர் (பிரதமர்) உரையாற்றிய தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும்,
கொரோனா தவிர்ப்பு நடவடிக்கை பின்பற்றப்படவில்லை. மாநில முதலமைச்சர்
உரையாற்றிய தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும் கொரோனா தவிர்ப்பு நடவடிக்கை
முற்றிலுமாகக் கைவிடப்பட்டது !
மக்களைப்பற்றிக் கவலைப்படாமல் தன் கட்சியே மீண்டும்
ஆட்சிக்கு வரவேண்டும் என்பதிலேயே மீண்டும் குறியாக இருந்து முனைப்பாகத் தேர்தல்
பரப்புரை செய்த இந்த பெரிய மனிதர்களின் செயலை என்ன சொல்லிப் பாராட்டுவது ?
கொரோனா பெருந்தொற்றால் தான் தாக்கப்படக் கூடும் என்ற
அறிவோ, தன் மூலம்
பிறருக்கும் பரவக் கூடும் என்னும் சிந்தனையோ இல்லாமல், திரைப்பட
அரங்குகளுக்கும், அரசின் மதுக் கடைகளுக்கும், இறைச்சிக் கடைகளுக்கும், கோயில்களுக்கும் சென்ற
மேதாவிகளை எதைக்கொண்டு அடிப்பது ?
கோயில் திருவிழா என்பது மக்களின் மன மகிழ்ச்சிக்காக
ஏற்படுத்தப்பட்ட ஒரு சடங்கு; ஆனால் மக்கள் நலன் நொறுங்கிப் போனாலும் தாழ்வில்லை, கோயில்களில்
குறிப்பிட்ட திருவிழாக்களை நடத்தியே தீரவேண்டும் என்று கருதிச் செயல்பட்ட
அதிமேதாவிகள், பெருந்தொற்று இரண்டாவது அலையின் கதிப்பான
வீச்சுக்குக் காரணமாக அமைகின்றனர் !
கோயில் தேரோட்டம், குடமுழுக்கு, திருமேனி ஊர்வலம் எல்லாம்
மக்களின் மனமகிழ்ச்சியுடன் தொடர்புடையவை. மக்கள் நலனைப் பலிகொடுத்துவிட்டு இவற்றை
நடத்தியே தீரவேண்டும் என்று கருதி அவற்றை நடத்திக் காட்டிய பகுத்தறிவற்ற
பண்டிதர்களும், பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்குக் காரணமாக
இருக்கின்றனர் !
தான் மட்டுமே அறிவாளி, தனக்கு எல்லாம் தெரியும், என்று
எண்ணும் மேதாவிகள் ஆட்சியில் அமர நேரிட்டால், இத்தகைய
துன்பங்களை மக்கள் எதிர்கொண்டுதானே தீர வேண்டும். மக்களுக்கு மதம் என்னும் மயக்க
மருந்தைப் புகட்டிப் புகட்டி, அவர்களைச் சிந்திக்கவிடாமல்
செயலிழக்கச் செய்யும் விரகினை (தந்திரம்) செய்வோர் ஆட்சியில் அமர்ந்துவிட்டால்,,
பகுத்தறிவுச் சிந்தனையாளர்களின் பேச்சுகளுக்கு மதிப்பு ஏது ?
மதத்துக்காக வாக்களித்தல், சாதிக்காக வாக்களித்தல், இறை நம்பிக்கைக்காக வாக்களித்தல், சாராயத்துக்காக
வாக்களித்தல், இலவயங்களுக்காக வாக்களித்தல், பணத்துக்காக வாக்களித்தல், பசப்பு உரைகளுக்காக
வாக்களித்தல், கவர்ச்சிக்காக வாக்களித்தல், நடிகருக்காக வாக்களித்தல், என நீளும் பட்டியலில்,
நல்ல அரசுக்காக வாக்களித்தல் என்னும் உணர்வில்லாத மக்கள் இருக்கும்
வரை, கொரோனா பெருந்தொற்றுச் சாவுகளைத் தவிர்க்க முடியாது !
===============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.பி.2052, மேழம்
(சித்திரை)15 ]
{28-04-2021}
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக