பழங்களைத் திரும்ப எடுத்துக் கொள்வதைப் போல !
மக்கள், வாழ்வின் துன்பங்களைப் போக்க, மன்னர் வாழ்வைத் துறந்தார் சித்தார்த்தர்; ஒரு அரச மரத்தடியில் (போதிமரம் =
அரசமரம்) பல நாள்கள் உண்ணா நோன்பிருந்து – சிந்தனையை
ஒருமுகப்படுத்தி ஓகமியற்றி – பேரொளி பெற்றார்; புத்தரானார் !
”ஆசையே துன்பத்திற்குக் காரணம்; ஆசையை விட்டொழியுங்கள்” என்று அவர்
ஊர்தோறும் சென்று உரையாற்றி வந்தார். சிலர் புத்தரது உரையில் இருந்த உண்மையை
ஏற்றுக் கொண்டனர். வேறு சிலர் அவரைத்
தாக்கிப் பேசி வெறுத்தனர் !
ஒரு முறை ஒரு மனிதன் புத்தரைக் கண்டான்; இழிவான மொழிகளால் புத்தரை ஏசினான்; இல்லாததையும் பொல்லாததையும்
சொல்லி அவரை இழிவு படுத்தினான் !
அவனது ஏச்சையும் பேச்சையும் பொறுத்துக் கொண்டார் புத்தர். அந்த
இழிதகையோன் பேசிப் பேசி அலுத்து ஓய்ந்தான் !
பின்னர் புத்தரை நோக்கிய அவன், “பரதேசியே ! நான் இவ்வளவு இழித்தும் பழித்தும் உம்மைத் தூற்றுகிறேனே,
உமக்கு மானம், வெட்கம் என்பது ஒன்றும் இல்லையா ?” என்றான் !
அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்த புத்தர், “நண்பா ! அருகில் வா“ என்று அழைத்தார். அவன், அவர் அருகில் சென்றான். “நண்பனே இப்படி
உட்கார் !” என்றார்.; அவனும் உட்கார்ந்தான் !
”நண்பனே ! நீ யாரையாவது காணச் செல்லும்போது, கையில் ஏதாவது எடுத்துச் செல்வது உண்டா ?” என்று கேட்டார் !
“ஆம் ! பழங்கள் எடுத்துச் செல்வேன் !” என்று அந்த மனிதன் மறுமொழி பகன்றான் !
“நீ கொடுக்கும் பழங்களை, நீ காணச்
சென்றவர் ஏற்க மறுத்தால், பிறகு நீ அப்பழங்களை என்ன செய்வாய் ?”
என்று கேட்டார் புத்தர் !
ஏசின மனிதனோ “திரும்ப அப்பழங்களை எடுத்துக் கொண்டு
வீடு திரும்புவேன் !” என்றான் !
“அதைப் போலவே நீ ஏசின ஏச்சு மொழிகளை அப்பொழுது நான் ஏற்றுக்
கொள்ளவில்லை; பழங்களைத் திரும்ப எடுத்துக் கொள்வதைப்
போல ஏச்சுக்களையும் நீயே எடுத்துக் கொள்.” என்று கூறி
புன்னகை காட்டினார் புத்தர் பெருமான் !
பொறுமையின் சிகரமான புத்தரின் பொறுமைக்குத் தான் எல்லை ஏது? அந்தப் பொறுமை கடலினும் பெரிதாயிற்றே !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் மாலை”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053: விடை (வைகாசி)
27]
{10-06-2022}
-----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக