வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

மாலை (46) புத்தாண்டுப் பிறப்பு மகர மாதமே !


தமிழ்ப் பணி மன்ற நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் ! இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளில் அல்லவோ தொடங்குகிறது; அப்படி இருக்கையில் தை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பது எங்ஙனம் என்ற ஐயம் சில நண்பர்களுக்கும் தோன்றலாம் !  இந்த ஐயத்தை போக்க வேண்டியது என் கடமை !

 

இக்காலத்தில், நேரத்தைக் காண்பிக்கக் கடிகாரம்  இருக்கிறது;  நாளையும் (தேதி) கிழமையையும் காண்பிக்க  நாட்காட்டி இருக்கிறது.  இன்று ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அந்தக் குழந்தைப் பிறப்பைத் துல்லியமாகப் பதிவு செய்ய  கடிகாரம், நாட்காட்டி போன்ற அனைத்து வசதிகளும் இருக்கின்றன !

 

முற்காலத்தில் இந்த வசதிகள் இல்லை.  ஒரு மன்னர் முடி சூட்டிக் கொள்வார்; ஒரு ஊரில் போர் நடக்கும், ஆழிப் பேரலை ஒரு நாட்டைத் தாக்கி அழிக்கும்.  இது போன்ற முகாமையான  நிகழ்வுகள் எப்பொழுது நடந்தன என்பதைத் துல்லியமாகச் செப்பேட்டிலோ, கல்வெட்டிலோ பதிவு  செய்வதற்கு அக்கால மக்களுக்கு ஏதாவதொரு காலம் காட்டும் கருவி  தேவைப்பட்டது !

 

வானத்தில் இருக்கும் விண்மீன்கள்  இடம் பெயர்வதில்லை என்பதையும், திங்கள், செவ்வாய், புதன், போன்ற கோள்கள் தான் இடம்பெயர்கின்றன என்பதையும் முற்கால மனிதர்கள் அறிந்திருந்தனர். சூரியனும் இடம்பெயரும் கோள்களில் ஒன்று என அவர்கள் நம்பினர் !

 

சூரியன் வான மண்டலத்தில் ஒரு புள்ளியிலிருந்து புறப்பட்டு  ஒரு முழுச் சுற்று சுற்றி மீண்டும் அதே புள்ளிக்குத் திரும்பி வர   365 பகல்களும்  365 இரவுகளும் ஆகின்றன என்பதைக் கண்டறிந்தனர் !

 

பூமியில் ஒரு தொடக்கப் புள்ளியை  அடையாளப் படுத்த முடியும். வானமண்டலத்தில்  தொடக்கப் புள்ளியை எவ்வாறு அடையாளப் படுத்துவது ?  அதற்குத்தான் அவர்கள் இடப் பெயர்ச்சி அடையாமல் நிலையாக அதே இடத்தில் இருக்கும்  விண்மீன்களைப் பயன்படுத்திக் கொண்டனர் !

 

கோள்களையும் அவை எந்தக் காலப் பகுதியில்  எந்த இடத்தில் இருந்தன இருக்கின்றன - என்பதையும்   நினைவில் வைத்துக் கொள்ள வசதியாக பூமியை மையமாக வைத்து வானமண்டலத்தை  12 பகுதிகளாகப் பகுத்தனர்.  அவற்றுக்கு மேழம் (மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம் (கடகம்), மடங்கல் (சிம்மம்),  கன்னி (கன்னி), துலை (துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம் (கும்பம்), மீனம் (மீனம்) எனப் பெயரிட்டனர்.

 

27 விண்மீன்களையும் வானத்தில் அடையாளம் கண்டு ஒவ்வொரு மண்டிலத்துக்கும் (இராசி)  2-1/4 விண்மீன் என்ற கணக்கில்  பகிர்வு செய்தனர்.  மேழ (மேஷம்) மண்டிலத்தில் இருக்கும் விண் மீன் கூட்டத்தில்  புரவி (அசுவதி), அடுப்பு (பரணி) மற்றும் ஆரல் (கிருத்திகை) மீன் கூட்டத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4)  இருப்பதாக அடையாளம் கண்டனர்.

 

அதுபோல், விடை (ரிஷபம்) மண்டிலத்தில் ஆரல் (கிருத்திகை) மீன் கூட்டத்தின் நான்கில் மூன்று  (3/4) பகுதியும்,  சகடு (உரோகிணி), மற்றும் மான் தலை (மிருகசீரிடம்)  கூட்டத்தின் சரிபாதியும் (1/2) இருப்பதைக் கண்டனர் !

 

இவ்வாறே 12 மண்டிலங்களிலும் இருக்கும் விண்மீன் கூட்டங்களை அடையாளம் கண்டறிந்தனர்.  மண்டிலங்களும் அவற்றில் இருக்கும் விண்மீன் கூட்டங்களும் அன்றிலிருந்து இன்று வரை மாற்றமின்றி அதே நிலையில் தொடர்கின்றன !

 

இந்த அடிப்படையை வைத்துத் தான் எந்தக் காலப் பகுதியில் எந்தக் கோள் எந்த மண்டிலத்தில் இருக்கும் என்பதை அன்றும் கணித்தனர்; இன்றும் கணிக்கின்றனர் !

 

புறநானூற்றில் 229 –ஆம் பாடலில்ஆடு இயல் அழல் குட்டத்து ,  ஆர் இருள் அரை இரவில், முடப் பனையத்து வேர் முதலாக்  கடைக்குளத்து கயம் காய....” என்னும் வரிகள் வருகின்றன.  இதில் வரும் சில சொற்களுக்கான பொருள் வருமாறு:- ஆடு = மேழம் (மேஷ இராசி) ; அழல் = கிருத்திகை மீன்; முடப் பனை = அனுஷ மீன்; கடைக்குளம் = உத்திராடம் மீன் !

 

சங்கக் காலத்திலேயே தமிழர்கள் வானியல் அறிஞர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக் காட்டு இது ! கோள்கள் ஒரு மண்டிலத்திலிருந்து இன்னொரு மண்டிலத்திற்கு இடம் பெயர்வது இயல்பாக நிகழும் ஒன்று. இதைத் தான் இக்காலத்தில்குருப்பெயர்ச்சி”, “சனிப்பெயர்ச்சிஎன்று வேறு கோணத்தில் பொருள் கற்பித்து அறிமுகப் படுத்துகிறார்கள் !

 

விண்மீன்களும், அவை இருக்கும் மண்டிலங்களும் அதில் உலா வரும் கோள்களும்  முற்காலத்தில் நாட்காட்டியின் பணியைச் செய்து வந்தன. ஒரு மன்னன் முடி சூட்டிக் கொள்கிறான் என்றால் அந்த நிகழ்வைச்  செப்பேட்டிலோ, கல்வெட்டிலோ துல்லியமாகக் காலம் குறிப்பிட்டுப் பதிவு செய்வதற்கு  இவை பயன்பட்டன. !

 

எடுத்துக் காட்டாக, சோழ மன்னன், மேழ மண்டிலத்தில் சூரியனும், துலை மண்டிலத்தில்  நிலாவும், சிலை மண்டிலத்தில் வெள்ளியும், மீன மண்டிலத்தில் வியாழனும்  வீற்றிருந்த நந்நாளில்  அரியணை ஏறினான் என்பதாகப் பதிவு செய்ய, மண்டிலங்களும் கோள்களும் பயன்பட்டன.   முற்காலத்தில் நாட்காட்டி  இல்லாத குறையை இவை தீர்த்து வைத்தன !

 

ஆனால் பண்டைத் தமிழர்கள் வரலாற்றை முழுவதுமாக நாம் அறிந்து கொள்ள முடியாதபடி, பல கடல்கோள்கள் (ஆழிப் பேரலை)  தோன்றி செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் அழித்துச் சென்றுவிட்டன !

 

சூரியன் மீன மண்டலத்திலிருந்து மேழ மண்டலத்திற்கு இடம் பெயரும் நாளை (சித்திரை முதல் நாள்)  பண்டைய இந்தியாவின் வடபகுதியினர் புத்தாண்டாகக் கொண்டாடினர். ஏன் இந்த நாளை (சித்திரை முதல் நாள்) புத்தாண்டுப் பிறப்பாகக்  கொண்டாடினர் என்பதற்கும் சூரியன் வேறொரு மண்டிலத்தில் நுழையும் நாளைப் புத்தாண்டாக ஏன் கொண்டாடக் கூடாது  என்பதற்கும்  யாரும்  விளக்கம்  சொல்வதில்லை !

 

 

ஆனால் முற்காலத் தமிழர்களில், மிகப் பெரும்பான்மையினர் வேளாண் தொழில் செய்பவர்களாக இருந்தமையால்.  சுறவ (தை) மாதத்தின் முதல் நாளை அறுவடைத் திருநாளாகப் பொங்கல் வைத்துக் கொண்டாடி வந்தனர் !

 

அறுவடைத் திருநாளின் புதிய வடிவமே இரண்டு நூற்றாண்டுகளாகபொங்கல்என்னும் பெயரில் தமிழ் நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.  அறுவடைத் திருநாள் என்பது வேளாண் பெருமக்களின் வாழ்வில் ஒரு பொன்னாள் என்பதால் அதுவே புத்தாண்டின் தொடக்கமாகவும் இருந்து வந்திருக்கிறது. !

 

நூற்று ஐம்பதுக்கும்  மேற்பட்ட தமிழறிஞர்கள் 1935 –ஆம் ஆண்டு  சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி,  பல்வேறு இலக்கியச் சான்றுகளையும்  வரலாற்றுச் சான்றுகளையும் காட்டி நம் தமிழ்த் தாத்தா திருவள்ளுவர் கி.மு. 31–ஆம் ஆண்டில் பிறந்தவர் என்பதை  நிறுவினர்.  சுறவத் திங்கள் (தை)  2-ஆம் நாள்  திருவள்ளுவர் நாளாக அரசினால் அறிவிக்கப் பெற்று நடைமுறையில் இருந்து வருகிறது !

 

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் அதாவது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை மாதம் முதல் தேதி என்று திரு.மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 2008- ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப் பட்டது !

 

இந்த அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு சுறவத் திங்கள் முதல் நாளில், அதாவது பொங்கல் நாளிலேயே தொடங்குவதாக தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. அரசு நாட்காட்டியிலும் அச்சிட்டு வழங்கப்படுகிறது. ஆகையால், தமிழ்மறை தந்த ஆசான் திருவள்ளுவர் பெயரால் நிகழும்  ஆண்டுப் பிறப்பே தமிழர்களுக்குப் புத்தாண்டுப் பிறப்பாகும் !

 

அறுவடைத் திருநாளாகிய பொங்கல் திருநாள், திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு இரண்டும் ஒருங்கிணைந்து வரும் சுறவத் திங்கள் (தை) முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாளாகும் !  இப்புத்தாண்டு நாளில் தமிழர்கள் அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் !

------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2052, சுறவம் (தை),01]

{14-01-2021}

------------------------------------------------------------------------------



 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக