வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

செவ்வாய், 8 நவம்பர், 2022

மாலை (48) ”சகோதரன்”, ”சகோதரி”’ ”சகோ” வேண்டாமே !

 

நண்பர்களே ! சகோதரன், சகோதரி என்பவை தமிழ்ச் சொற்கள் அல்ல. சக + உதரன் = சகோதரன். (ஸக = உடன்; உதரம் = வயிறு) அதாவது ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் என்று பொருள் !

 

தமிழில் உடன்பிறப்புஎன்னும் சொல் இருக்கையில் நமக்கு சகோதரன்”, “சகோதரிஎன்னும் வடமொழிச் சொற்கள் எதற்கு?

 

ஆங்கிலத்தில் சொற்கள் சுருங்குவதைப் போல இப்போது தமிழில் புழங்கும் சொற்களான :சகோதன்”, “சகோதரிஆகியவை சுருங்கி சகோஆகிவிட்டது !


சகோ என்பது சகோதரரே ! சகோதரியே ! என்னும் விளிச் சொற்களின் குன்றிய வடிவம். நமக்கு சகோதரன்”,”சகோதரி” “சகோஎவையும் வேண்டாம் !


தமிழில் விளிச்சொற்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடவில்லை!

 

ஆடவரில் நம்மைவிட மூத்தவராயின் ஐயா”, ”ஐயனே”, ”அண்ணா”, ”அண்ணலே”, “ஏந்தலே”, “செம்மலே” ”பெரியீர்”, ”பெருந்தகையே” “பூமானே” “தவமுனியே” ”தலைவரேஎன்றெல்லாம் விளிக்க முடியும் !

 

இளையவராயின் தம்பீ”, “இளவலே”, ”பின்னனே”, “பின்னவனே”, ”பின்முகையே”, ”செல்வனே”, ”சிற்றரசே”, ”இளவரசே”, ”இளஞ்சுடரே”, ”தமிழ்ச் செல்வாஎன்றெல்லாம் விளிக்கலாம் !

 

மகளிரில் நம்மைவிட மூத்தவராயின் அம்மா”, ”அம்மையே”, ”அன்னையே”, “அருட்செல்வீ”, ”ஐயை” “தாயே”, ”தமிழ்ச்சுடரே”, ” நிறைமதியே”, என்று நாம் விரும்பியபடி விளிக்கலாம் !

 

இளையவராயின் தங்கையே”, “தங்காய்”, இளங்கிளியே”, ”இளங்கிளையே”, ”பின்னியே”, “செல்வீ”, ”இளமதியே”. “இளம்பிறையே”, என்றெல்லாம் விளிக்கலாம் !

 

சுருக்கமாக எழுதுவதில் சுவை கண்டுவிட்டீர்களா ? தாழ்வில்லை! சகோவைக் கைவிடுங்கள்; “உடன்பிறப்பேஉங்கள் விரல்களுடன் உறவாடட்டும் !

 

தமிழில் வளமான சொற்களெல்லாம் வண்டி வண்டியாய்க் குவிந்திருக்க, வடமொழிச் சொற்களை ஏன் வலிந்து உரைக்கவேண்டும் ?

 

சகோதரன்”,சகோதரி”, “சகோஎன்னும் சொற்களுக்கு விடை கொடுத்து விந்தியமலைக்கு வடக்கே விரைந்து அனுப்பி வைப்போம் !

 

தமிழன்பர்களே ! கவிஞர்களே ! இளவல்களே ! உங்கள் நாவில் தமிழ் தவழட்டும் ! உங்கள் கைவிரல்கள் கனித்தமிழை எழுதட்டும் !

 --------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ் மாலை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2053, துலை (ஐப்பசி) 15]

{01-11-2022}

-----------------------------------------------------------------------------------------------


உமா & இராசரெத்தினம் இணையர்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக