வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

வியாழன், 8 டிசம்பர், 2022

மாலை (49) கசாலை என்றால் என்ன ?

கசாலை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைத் தமிழ்ப் பணி மன்றம்” முகநூலில் நண்பர்களின் ஆய்வுக்கு விட்டிருந்தோம். சிலர் தங்கள் கருத்துகளை முன் வைத்திருக்கின்றனர் !



கசாலை என்பது வீட்டின் ஒரு பகுதிதான் ! இதைப் பற்றி விவரமாகப் பார்க்கும் முன், ஊரகங்களில் (VILLAGES) உள்ள பழங்கால ஓட்டு வீட்டின் அமைப்பினை மனக் கண் முன் கொண்டு வாருங்கள் !


தெருவின் ஓரத்தில் ஒரு சதுரமான அல்லது செவ்வக வடிவமைப்பில் ஒரு ஓட்டு வீடு. வீட்டின் முன்புறம் நெல் முதலிய தானியங்களைக் காய வைக்க வசதியாக சுற்றடைப்புக்குள் (ENCLOSURE) அமைந்த சமதளமான கூரையில்லாத் திறந்த வெளி. சுற்றடைப்பானது, மதில் சுவராகவும் இருக்கலாம் அல்லது தென்னங்கீற்று அல்லது பனையோலை நிரைச்சலாகவும் (FENCING SCREEN) இருக்கலாம். சுற்றடைப்புக்கு உட்பட்ட கூரையில்லாத் திறந்தவெளிப் பகுதிக்கு முற்றம் (COURT YARD) என்று பெயர் !

 

இக்காலத்தில் கட்டப்படும் மச்சு வீடுகளில், வீட்டின் முன்புறத்தில் திறந்த வெளி முற்றம் இருப்பதில்லை. இதற்குப் பதிலாக, சுற்றடைப்பைத் தவிர்த்து, நான்கு தூண்கள் எழுப்பி அதன் மேல் கூரை அமைத்து சீருந்து (CAR) போன்ற ஊர்திகள் நிறுத்தும் ஒலிமுக வாயில் (PORTICO) அமைக்கின்றனர் !

 

அக்கால ஓட்டு வீட்டை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள் ! முற்றத்தினை அடுத்து நிலையோ கதவோ இல்லாத தலைவாயில் (MAIN ENTRANCE) தொடங்கும். தலைவாயிலில் நுழைந்தவுடன் இருபுறமும் ஏறத்தாழ ஆறு அடி அகலத்தில் நீளவாக்கில் தாழ்வாரம் (VERANDAH) இருக்கும். இதற்கு ஆளோடி என்றும் பெயர் உண்டு !

 

ஆளோடியை அடுத்து உள்நோக்கிச் செல்லும் நடைவழி அமைந்திருக்கும். நடைவழியின் இரு புறமும் நான்கு அல்லது நான்கரை அடி உயரத்தில், திண்ணைகள் (PIAL) இருக்கும். இத்திண்ணைகள் உயரமாக அமைந்திருப்பதால், விருந்தினர்கள் அமர நாற்காலிகள் தேவையில்லை. திண்ணை ஓரங்களில் கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு வசதியாக அமரலாம். இக்காலக் கட்டுமானங்களில் திண்ணைகள் மறைந்து வரவேற்பறைகள் (DRAWING HALL) இடம் பிடித்து விட்டன !

 

திண்ணைகளை அடுத்து சதுரம் அல்லது செவ்வக வடிலான கூடம் (CENTRAL HALL) அமைந்திருக்கும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் எனப் பல்லோர், பண்டிகை, திருமணம் போன்ற நாள்களில் கூடி அமர வசதியான நீண்டு அகன்ற பெரிய அறை என்பதால் இதற்குக் கூடம் (CENTRAL HALL) என்று பெயர் !


இந்தக் கூடத்தின் இருபுறமும் அதாவது வலப் புறமும் இடப் புறமும் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு அறைகள் இருக்கும். இந்த அறைகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் இருக்கும். வீட்டின் அல்லது கூடத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செவ்வக வடிவிலான அறையைத் தவிர்த்து பிற அறைகள் துயிலறையாகவோ (BED ROOM), தானிய சேமிப்பு அறையாகவோ (GRANARY ROOM) பொருளறையாகவோ (STORE ROOM) பயன்படுத்தப்படும் !

 

தென்கிழக்கு அறையானது சமையற்கூடமாக (KITCHEN) பயன்படுத்தபடும். இவ்வறையை சமையலறை, சமையற்கட்டு, அடுக்களை, அடுப்பங்கரை, என்றெல்லாம் அழைப்பதுண்டு. இவ்வறைக்கு இன்னொரு பெயரும் உண்டு. அப்பெயர்தான் கசாலை. கசாலையத் தவிர்த்து எஞ்சியுள்ள அறைகளுக்கு ஆரல் (ROOM) என்று பெயர். ஊரகங்களில், வீட்டின் அமைப்பைப் பொறுத்து இந்த ஆரல்களை வடக்காரல், தெற்காரல், கிழக்காரல், மேற்காரல் என்று சொல்வார்கள். கூடத்தை அடுத்து, வீட்டின் பின் வாசல் அமைந்திருக்கும் !

 

இவ்வாசலின் இருபுறமும் சரிந்த கூரையும், தாழ்வான தளமும் உள்ள நீண்ட தாழ்வாரம் போன்ற பகுதி இருக்கும். இதற்கு சார்ப்பு (PENTHOUSE) என்று பெயர் !


நண்பர்களே ! ஊரகப்பகுதியில் பல்லாண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்ற ஒரு ஓட்டு வீட்டின் அமைப்பையும் அதன் பகுதிகளையும் அவற்றின் பெயர்களையும் பார்த்தோம். நம் தமிழகத்தில் முன்பு புழக்கத்தில் இருந்து வந்த முற்றம், நிரைச்சல், ஆளோடி, தாழ்வாரம், திண்ணை, கூடம், கசாலை, ஆரல், சார்ப்பு போன்ற சொற்கள் எல்லாம் எங்கு போயின ?

 

யாரும் இச்சொற்களைக் கொள்ளை கொண்டு போய் விடவில்லை. நமது முனைப்புக் குறைவால் நாம் தான் அவற்றை வழக்கற்றுப் போகச் செய்து விட்டோம். ஆயிரமாயிரம் தமிழ்ச் சொற்கள் இவ்வாறு வழக்கற்று மறைந்து விட்டன. நமது முனைப்புக் குறைவால் இன்னும் பல சொற்களை எதிர்காலத்தில் இழக்கத்தான் போகிறோம் !

 

அடுத்த நூற்றாண்டில் அப்பா, அம்மா ஆகிய சொற்கள் மறைந்து போகும். டாடி, மம்மி தான் தமிழன் வாயில் தவழப் போகிறது. ஒரு பக்கம் ஆங்கிலத்தின் நெருக்குதல், இன்னொரு பக்கம் இந்தியின் கடை விரிப்பு, இவற்றுக்கிடையே தன்னிலை மறந்த தமிழன் காட்சிகள் கவலைக்கு உரியனவாகத்தான் காணப்படுகின்றன !

 

இன்றைய தமிழனுக்கு இன உணர்வும் இல்லை ! மொழி உணர்வும் இல்லை ! இராமன் ஆண்டால் என்ன ? இராவணன் ஆண்டால் என்ன ? எனக்குச் சோறு கிடைத்தால் போதும், என் பெண்டு பிள்ளைகள் வாழ்ந்தால் போதும் என்று தன்னல உணர்வில் மூழ்கிக் கிடக்கும் தமிழக மாந்தனுக்குத் தமிழ் உணர்வும் வாராது ! தமிழன் என்ற இன உணர்வும் வாராது !

 

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற சொல் கேட்டு வெகுண்டானே பாரதி !. அவன் இப்போது இருந்திருந்தால், மெல்லத் தமிழ் சாகும் என்பதை ஏற்காமல், தன்னலத் தமிழக மாந்தர்களைக் கண்டு வெட்கி மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டிருப்பான் !

 --------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ் மாலை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2053,  சிலை (கார்த்திகை) 22]

{08-12-2022}

-----------------------------------------------------------------------------------------------


ஊரகத்து வீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக