அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் வரலாறு கூறப் பட்டுள்ளது !
தாருகாசுரன்
என்பவன்,
இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான் !
உயிருக்கு
இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை
வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத்
தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான்.
பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது
அவனது எண்ணம் !
பல
அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன்
விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை
உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது.
"காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, "காளி’ என பெயர் சூட்டினாள் !
காளிதேவி கடும்
கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்,
அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு
பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும்,
அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் !
அப்போது அவரது
உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, "பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன்,
எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில்
அடக்கிய அந்தக் குழந்தை, "காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, "காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர் !
தெய்வங்களுக்கு
காளை,
சிங்கம், யானை, மயில்
போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம்
தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட்
கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். ஆனால் பைரவர் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள நாயைக் கண்டு வழிபடுவர் !
கடவுளின் பெயரால் எப்படியெல்லாம் கதைகட்டி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் மாலை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 01]
{16-12-2022}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக