வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

சனி, 22 ஜூன், 2024

மாலை (60) பழமொழிக் கதைகள் - பூசையைக் காப்பிடுதல் புன் மீன் தலை !

 

பழமொழி நானூறு ! (பாடல்.128) பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை !


மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார், அவ்வூரில் நெடு நாள்களாகத் தங்கியிருக்கும் ஒரு முனிவர். ஊராருக்கு நல்வழி காட்டி நல்வாக்குச் சொல்லிவரும் ஞானி அவர் !

 

முனிவரை அணுகிய பெண்ணொருத்தி, ”ஐயா ! இன்று நான் வெளியூர் செல்கிறேன் ! திரும்பிவர நான்கு நாள்களாகும். ஆனால் ஈரம் காயும் முன் வயலில் நெல் விதைத்தாக வேண்டும். எனக்கு வேறு துணையில்லை. பக்கத்துத் தெரு பகலவன் எனக்கு அறிமுகம் ஆனவர் தான். ஆனால் நேர்மையானவர் என்று சொல்வதற்கில்லை !

 

அவரிடம் நெல் விதைப்புப் பணியை ஒப்படைத்துச் செல்லலாமா ? தாங்கள் எனக்கு நல்வழி காட்டுங்கள்” என்று பணிவுடன் கேட்டாள். அதற்குத் துறவி சொல்லும் மறுமொழியைப் பாருங்கள் !

 

மாவடு போன்ற கண்களும் மயில் போன்ற சாயலையும் உடைய பெண்ணே ! உனக்கு ஒன்று தெரியுமா ? ”

 

கீழ்மைக் குணம் படைத்த எந்த மனிதனும் நம்பத் தகுந்தவன் அன்று ! நேரம் வரும் போது நம்மைக் காட்டிக் கொடுக்க அவன் தயங்க மாட்டான் ! அப்படிப்பட்டக் கயமைக் குணம் படைத்த கீழ்மகனை நம்பி, தான் செய்ய வேண்டிய பணிகளை ஒப்படைக்கும் எவனும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது ! ”

 

மீன்கள் உலர்கின்ற களத்தில் அதற்குப் பூனையைக் காவலாக வைக்க எந்த அறிவுள்ள மனிதனும் துணியமாட்டான் !

 

கீழ்மகனை நம்பித் தனது பணிகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அவன் செப்பமாகச் செய்து முடிப்பான் என்று நம்பி வாளாவிருக்கும் எவனும் மீனுக்குப் பூனையைக் காவலாக வைக்கும் தவற்றைச் செய்தவன் ஆவான் !”

 

இத்தகைய கருத்துடைய பாடலை எழுதிய புலவர் பெயர் முன்றுறை அரையனார். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறில் இடம் பெற்றுள்ள இப்பாடல் ”பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை” என்னும் பழமொழியை உள்ளடக்கி அமைந்துள்ளது. இதோ அந்த பாடல்:-

---------------------------------------------------------------------------

பழமொழி நானூறு பாடல் (128)

----------------------------------------------------------------------------

காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர்

ஆக்குவர் ஆற்றஎமக் கென்றே அமர்ந்திருத்தல்

மாப்புரை நோக்கின் மயிலன்னாய் ! பூசையைக்

காப்பிடுதல் புன்மீன் தலை !

----------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------------------------------------------------------

 

(மா + புரை) மாப்புரை = மாவடு போன்ற; நோக்கின் = கண் உடைய; மயிலன்னாய் = மயில்போன்ற அழகுடைய பெண்ணே ! எமக்கு என்றே = எமக்காக; ஆற்ற = முழுமையாக (திறம்பட); கருமம் ஆக்குவர் = பணியாற்றுவார்; கயவர் மேல் காட்டி வைத்தவர் = கீழ்மக்கள் மீது நம்பிக்கை வைத்தவர்; பூசையை = பூனையை; தலை = அதிகாரம் கொடுத்து ; காப்பிடுதல் = காவலுக்கு வைத்தல்; புன்மீன் = மீன் உலர் களம்.

--------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------------------------------------------------------------

தான் செய்ய வேண்டிய பணியை நம்பத் தகாத வேறொரு ஆளிடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுப்பவன், மீன்கள் உலரும் களத்திற்குப் ஒரு பூனையைக் காவலுக்கு வைத்தவனுக்கு ஒப்பாவான் !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்மாலை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு:2055: ஆடவை (ஆனி) 08]

{22-06-2024}

----------------------------------------------------------------------------------------


 

மாலை (59) பழமொழிக் கதைகள் - நாய் பெற்ற தெங்கம் பழம் !

பழமொழி நானூறு (151) நாய் பெற்ற தெங்கம் பழம் !!


வண்டியில் சென்ற ஒருவரின் பையிலிருந்து தவறி விழுந்த முழுத் தேங்காய் ஒன்று தெருவில் ஓரமாகக் கிடந்தது ! அந்தப் பக்கமாக வந்த நாய் அதைக் கவ்விக் கொண்டு குப்பைத் தொட்டி அருகில் சென்று படுத்துக் கொண்டது !

 

தேங்காய்ப் பருப்பின் சுவை அறிந்த அந்நாய், ஓட்டுக்குள் இருக்கும் பருப்பைத் தின்ன வழி தெரியாது விழித்துக் கொண்டிருந்தது! நாயையும் தேங்காயையும் பார்த்த சிலர், தேங்காயை எடுக்க முயன்றனர் !

 

அவர்கள் முயற்சியைத் தன் உறுமல் மூலம் அந்த நாய் தகர்த்தெறிந்தது. வேறு சிலர் ஒரு குச்சியை எடுத்து நாயை விரட்டிவிட்டுத் தேங்காயை எடுக்கத் துணிந்தனர். நாய் அவர்களை தேங்காயை எடுக்கவிடாமல், மீண்டும் மீண்டும் உறுமியது !

 

நாயும் தேங்காயைத் தின்ன முடியவில்லை; தேங்காயை எடுக்க வந்தவர்களையும் அது அண்ட விடவில்லை ! இந்த நாயைப் போல் தான் உலகத்திலும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் !

 

காரணமே சொல்ல முடியாத வகையில், சிலரிடம் பணம் குவிந்து விடுகிறது. அந்தச் செல்வத்தைத் துய்க்க (அனுபவிக்க) மனமில்லாமல் கருமியாக அவர்கள் விளங்குகிறார்கள் !

 

தானும் அந்தச் செல்வத்தைத் துய்ப்பதில்லை; வறுமையில் வாடுபவர்களுக்கும் அந்தச் செல்வத்தைக் கொடுத்து உதவுவதில்லை ! தேங்காயைத் தானும் தின்னாமல், அதை எடுக்கத் துணிந்தவர்களுக்கும் கொடுக்க மனல்லாமல் குப்பைத் தொட்டியருகில் காவல் காக்கும் நாயைப் போன்ற இழிந்த கருமிகளும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள் !

 

இந்தக் கருத்தை ஒரு பாடல் மூலம் விளக்குகிறார் பண்டைப் புலவர் முன்றுறை அரையனார் !

-----------------------------------------------------------------------

பழமொழி நானூறு பாடல்: (151)

-------------------------------------------------------------------------

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப ! – அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்.

-----------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------

வழங்கலும் = வறியோர்க்குக் கொடுத்து உதவுதலும் ; துய்த்தலும் = செல்வத்தைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்ளுதலும் ; தேற்றா = அறிவிலார்; முழங்கு முரசுடைச் செல்வம் = வெற்றி முரசு கொட்டும் மான்னர்களுக்கு இணையான பெருஞ் செல்வம்; தழங்கு = முழங்கு; வேய்= மூங்கில்; முத்து உதிரும் = அரிசியை உதிர்க்கும்; வெற்ப = மலைகளுக்கு உரியவனே ! ; தெங்கம் பழம் = தேங்காய்.

------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------------------------------------------------------

அருவிகளில் வீழும் நீரினால் எழும் முழக்கமும், முற்றிய மூங்கில்களில் விளையும் அரிசியும் (முத்துக்கள்) நிறைந்த மலைவளம் மிக்க குறிஞ்சி நிலத் தலைவனே ! உனக்கு ஒன்று சொல்கிறேன் ! கேள் !

 

வெற்றி முரசு கொட்டும் மாமன்னர்களுக்கு இணையாகச் செல்வம் வைத்திருக்கும் சில மனிதர்கள், அந்தச் செல்வத்தைத் தாமும் துய்க்காமல், வறியவர்களுக்கும் கொடுத்து உதவாமல் கருமிக் குணம் கொண்டர்வளாக இருக்கிறார்கள் !

 

இது எப்படி இருக்கிறதென்றால், தானும் தின்னமுடியாமல், தின்பவர்களையும் எடுக்கவிடாமல் தேங்காயை நாய் காவல் காப்பது போன்றல்லவோ உளது !

 

நாய் பெற்ற தெங்கம் பழம்” என்னும் பழமொழியை வைத்து முன்றுறை அரையனார் படைத்திருக்கும் இப்பாடல், உலகத்தாரைப் பார்த்து, “உங்களிடமுள்ள மிகுதியான செல்வத்தை, இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள், அது தான் மனிதப் பிறவி எடுத்ததற்கான பயன்” என்று தெள்ளத் தெளிவாக எடுத்து உரைக்கிறது !

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்மாலை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2055,ஆடவை (ஆனி) 08]

{22-06-2024}

---------------------------------------------------------------------------------------

 

 

மாலை (58) பழமொழிக் கதைகள் - புலி முகத்து உண்ணி பறித்து விடல் !

 பழமொழி நானூறு (74) புலி முகத்து உண்ணி பறித்துவிடல் !


கிருட்டினகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள தேன்கனிக் கோட்டை என்னும் ஊர் குன்றுகளும் காடுகளும் நிறைந்துள்ள வனப்பகுதி. மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சியாக இவ்வூர் அமைந்துள்ளது !

 

இவ்வூரைச் சேர்ந்தவன் பாலையா. சிறு சிறு திருட்டுகளை நடத்தி வாழ்க்கை நடத்தி வந்த இவன், அடுத்து வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடலானான். காவல் துறையில் சிக்காமல் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்துவதில் வல்லவனாகத் திகழ்ந்தான்! தனது குற்றச் செயல்களைத் தான் வாழுமூரில் செய்யாமல், தொலைவிலுள்ள காட்டுப் பகுதிகளிலேயே செய்து வந்தான் !

 

திருமணமாகி மனைவியும் இரு குழந்தைகளும் இருந்த நிலையில் வாழ்க்கைச் செலவுக்கு வேறு நல்ல வழிகளைத் தேடிக்கொள்ள அவனுக்கு ஏனோ விருப்பமில்லாமற் போயிற்று !

 

ஒருநாள் தேன்கனிக் கோட்டைக்குத் தெற்கேயுள்ள அஞ்சட்டி வனப்பகுதியில் வழிப் போக்கர்களின் வருகைக்காகக் காத்திருந்தான். அப்போது அவன் எதிர்பாராத வகையில் சிறுத்தையொன்று அவனைத் தாக்கியது !

 

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பாலையா தனது உடல் வலுவையெல்லாம் ஒன்றுதிரட்டி, தன்னிடமிருந்த குத்துவாளினால் சிறுத்தையைச் தாக்கினால். குத்துப்பட்ட சிறுத்தை, வலி தாங்காமல் அவனைவிட்டு விலகி ஓடிப் போயிற்று !

 

சிறுத்தையுடன் போராடி, உடலெல்லாம் காயங்களுடன் தப்பித்த பாலையா, மிகுந்த களைப்பினால் சோர்ந்து விழுந்தான். வெகுநேரம் கழித்து நாலைந்து கல்லூரி மாணவர்கள் அவ்வழியாக வந்தனர். இயற்கைக் காட்சிகளைச் சுவைக்கும் நோக்கில் ஒற்றையடிப் பாதை வழியாக கையில் பதிகையுடன் (Camera) பாலையா இருக்குமிடம் வந்து சேர்ந்தனர் !

 

ஒரு மரத்தடியில், காயங்களுடன் படுத்திருக்கும் பாலையாவைக் கண்டு, அவனுக்கு உதவி செய்யும் நோக்கில் அவனருகில் வந்து, தம்மிடமிருந்த மருத்துவ முதலுதவிப் பொருள்களைக் கொண்டு அவனது காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டுப் போடலானான், மாணவர் குழுத் தலைவன் நாவரசு !

 

அப்போது அம்மாணவர்களில் ஒருவனான நாவலர் நம்பிக்கு, செய்தித் தாள் ஒன்றில் சில மாதம் முன்பு வெளியாகியிருந்த பாலையாவின் நிழற்படமும் அவனைப் பற்றிய செய்திகளும் ஞாபகத்திற்கு வந்தன. அவன் ஒரு வழிப்பறிக் கொள்ளையன் என்பதையும், பணத்திற்காகக் கொலை செய்யக் கூட அஞ்சாதவன் என்பதையும் நாவலர் நம்பி புரிந்துகொண்டான் !

 

நாவலர் நம்பி, பிற மாணவர்களிடம் தானறிந்துள்ள செய்திகளை மெல்லிய குரலில் எடுத்துச் சொல்லி, அவனுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினான்! ஆனால் துன்பத்தில் இருப்பவனுக்கு உதவி செய்வது மனிதக் கடமை என்று அறம் பேசிவிட்டு, பாலையாவுக்கு தான் கொண்டுவந்திருந்த உணவுப் பண்டங்களையும் குடிநீரையும் கொடுத்து அவனது களைப்பு நீங்கச் செய்தான் நாவரசு!

 

உடலில் தெம்பு வந்ததும், மாணவர்களுக்கு நன்றி கூறி அவர்களது உதவியைப் பாராட்டினான் பாலையா. ஆனால் சற்று நேரம் கடந்ததும், அவனுக்குள் ஒளிந்து கிடந்த ”வழிப்பறிக் கொள்ளையுணர்வு” அவனை ஆட்டி வைக்கத் தொடங்கியது. மாணவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கைக் கடகம் போன்றவையும், விலையுயர்ந்த கடிகாரம் போன்றவையும் அவன் அறிவைக் கலங்கச் செய்தன !

 

மாணவர்களை வழிப்பறி வெறியுடன் பார்க்கலானான். அவன் பார்வையில் காணப்பட்ட மாற்றங்களைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். அவ்வளவு தான் ! பாலையா தன்னிடமிருந்த குத்துவாளை எடுத்து, அவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்த உடைமைகளைப் பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டிவிட்டான் !

 

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெகுதொலைவு ஓடிச் சென்ற மாணவர்கள் இரண்டொரு வீடுகள் தென்பட்ட ஊர் வந்து சேர்ந்ததும் அங்கு ஓரிடத்தில் அமர்ந்து இளைபாறிக் கொண்டே பேசலானார்கள் !

 

பாலையாவுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று விழிப்புரை (எச்சரிக்கை) நல்கிய நாவலர் நம்பி மெல்ல நாவரசிடம் பேசலானான். “நாவரசு ! பிறருக்கு உதவி செய்வது மனிதக் கடமைதான் ! ஆனால், மனிதத் தன்மையிலிருந்து விலகி விலங்கின் குணத்தை அடைந்துவிட்ட மனிதர்கள், உருவத்தில் மனிதனானாலும் உள்ளத்தால் விலங்குகள் !

 

அதுவும் கொடுமைக் குணம் நிறைந்த விலங்குகளுக்கு நாம் உதவி செய்யக் கூடாது. அறம் என்று நினைத்துக்கொண்டு உதவி செய்தால் என்னவாகும் தெரியுமா ? நம் முன்னோரான முன்றுரை அரையனார் என்பவர் பழமொழி நானூறு” என்னும் நூல் வாயிலாக சொல்லிச்சென்ற ஒரு அறிவுரைப் பாடலை இப்போது சொல்கிறேன், கேள் !

-------------------------------------------------------------

பழமொழி நானூறு (74)

-------------------------------------------------------------

கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைம்மிக

நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,

எண்ணி இடர்வரும் என்னார் புலிமுகத்து

உண்ணி பறித்து விடல்.

---------------------------------------------------------------

(சந்தி பிரித்து எழுதிய பாடல்)

---------------------------------------------------------------

கண் இல் கயவர் கருத்து உணர்ந்து கை மிக

நண்ணி அவர்க்கு நலன் உடைய செய்பவேல்

எண்ணி இடர் வரும் என்னார் புலி முகத்து

உண்ணி பறித்துவிடல்.

----------------------------------------------------------------

புலியின் முகத்தைப் பாதுகாப்பாகப் பற்றிக் கொண்டு அதன் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் உண்ணிப் பூச்சிகளை, புலியின் மீது இரக்கம் கொண்டு, எடுத்து விடும் செயல் அறத்தின்பாற் பட்டதன்று. உண்ணியை எடுத்துவிட்டதும், புலி நம்மையே அடித்துத் தின்றுவிடும். தீயவர்களுக்கு நன்மை செய்வதும், நமக்குக் கேடு தருவதாகவே அமைந்துவிடும் !

 

புலி முகத்தில் உண்ணி பறிப்பவர் எவ்வாறு துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வருமோ அவ்வாறே தீயவர்களுக்கு உதவி செய்பவரும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது இப்பாடலின் கருத்து ! தகாதவர்களுக்கு இனி உதவி செய்ய நினைக்காதே ! இன்று நாம் அனைவரும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறோம் ! அது நம்மை என்றென்றும் வழிநடத்திச் செல்லும்!

வாருங்கள் செல்வோம் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்.

”தமிழ்மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2055, ஆடவை (ஆனி) 08]

{22-06-2024)

----------------------------------------------------------------------------------


 

மாலை (57) பழமொழிக் கதைகள் - திங்களை நாய் குறைத்தற்று !

 

பழமொழி நானூறு (பாடல் 149) திங்களை நாய் குறைத்தற்று!


வண்டியில் சென்ற ஒருவரின் பையிலிருந்து தவறி விழுந்த முழுத் தேங்காய் ஒன்று தெருவில் ஓரமாகக் கிடந்தது ! அந்தப் பக்கமாக வந்த  நாய்    அதைக் கவ்விக் கொண்டு குப்பைத் தொட்டி அருகில் சென்று படுத்துக் கொண்டது !

 

கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் அந்தப் பள்ளிக்கு முன்னறிவிப்பு இன்று வருகை தந்து, தலைமையாசிரியருடன், புகழேந்தியின் வகுப்பறைக்குள் நுழைந்தார் !

 

மேனாட்டு உடையில் காணப்பட்ட அந்த அதிகாரி. எளிமையான வேட்டி சட்டை அணிந்திருந்த புகழேந்தியைக் கண்டதும் அவர் மீது இளக்காரப் பார்வையை வீசினார். ஆசிரியருக்கு உரிய வீறுமிக்க உடையணியாமல் இருப்பதாகக் கருதிய அந்த அதிகாரி மாணவர்கள் முன்னிலையில் புகழேந்தியைக் கடிந்து கொண்டார் !

 

இப்படியெல்லாம் உடையணிந்து வந்தால், மாணவர்கள் உம்மை எப்படி மதிப்பார்கள் ? பாடமாவது ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கிறீரா அல்லது அதிலும் அரைகுறை தானா? ஒழுங்கான உடைகளைக் கூட வாங்காமல், உமது சம்பளத்தை என்ன செய்கிறீர்? உம்மைப் பார்த்தாலே தெரிகிறதே, நீர் என்ன அழகாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பீர் என்று! “

 

வந்திருந்த கல்வி அதிகாரி, புகழேந்தியின் உடையைப் பார்த்தாரே தவிர அவரது கற்பிக்கும் திறன் பற்றித் தெரிந்து கொள்ள முயலவில்லை. கல்வி அதிகாரியின் பண்பற்ற நடவடிக்கையைப் பார்த்துத் தலைமை ஆசிரியர் கவலையில் நெளிந்தாரேயன்றி வேறொன்றும் சொல்ல முடியவில்லை !

 

மாணவர்கள் முன்னிலையில் அதிகாரிக்குத் தலைக்குனிவு ஏற்பட்டு விடக் கூடாது என்று எண்ணிய புகழேந்தி, மறுமொழி சொல்லாமல் அமைதி காத்தார் ! மாணவர்களோ கல்வி அதிகாரியின் செயலால் கொதிப்படைந்தாலும் அமைதி காத்தனர் !

 

கல்வி அதிகாரி, மாணவர்களில் ஒருவரைப் பார்த்து, ”எங்கே ஒரு வெண்பா சொல் பார்க்கலாம்” என்றார். மணிமாறன் என்னும் அம்மாணவர் எழுந்து “பின்வரும் வெண்பாவைக் கூறினார் !

---------------------------------------------------

பழமொழி நானூறு (பாடல் 149)

----------------------------------------------------

நெறியால் உணராது, நீர்மையும் இன்றி,

சிறியார், ‘எளியரால்!” என்று, பெரியாரைத்

தங்கள் நேர்வைத்துத் தகவல்ல கூறுதல்,

திங்களை நாய்குரைத் தற்று.

-------------------------------------------------

பாடலின் கருத்துரை:

-------------------------------------------------

உலக நெறிமுறைகளை அறிந்து கொள்ளாத, அறிவற்ற சிறியோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் எளிமையாகத் தோற்றமளிக்கும் அறிவார்ந்த பெரியோரைத் தங்களை விடத் தாழ்வானவர் எனக் கருதிக்கொள்வதும் உண்டு. தங்கள் முன் அவர்களை நிறுத்தி, தகுதியற்ற சொற்களைக் கூறுவதும் நிகழவே செய்கிறது. இத்தகைய செயல்கள் எப்படிப்பட்டவை என்றால், தண்ணொளி வீசும் இனிய நிலவைப் பார்த்து நாயானது இளக்காரமாக நினைத்து அதனை நோக்கிக் குரைப்பதைப் போன்றது ஆகும் !

-------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------=------

நெறியால் உணராது = உலக நெறிமுறைகளை அறிந்து கொள்ளாது; நீர்மையும் இன்றி = தகுதியும் இல்லாது; சிறியார் = சிறுமதியாளர்; எளியரால் = இவர் மிகத் தாழ்வானவர் ; பெரியாரை = அறிவிற் சிறந்த பெரியவர்களை; தங்கள் நேர் வைத்து = தமக்கு முன் நிற்க வைத்து ; தகவு அல்ல கூறுதல்= சொல்லக் கூடாத சொற்களை உரைத்தல் ; திங்களை = நிலவை; குரைத்து அற்று = பார்த்துக் குரைப்பது போன்றது.

-------------------------------------------------

கல்வி அதிகாரி தன் தவறை உணர்ந்திருப்பாரா ?

--------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் +இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”தமிழ்மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 20545ஆடவை(ஆனி) 22]

(22-06-2024)

----------------------------------------------------------------------------------------------


 

மாலை (56)பழமொழிக் கதைகள் - பனியால் குளம் நிறைதல் இல் !

 

பழமொழி நானூறு (பாடல்.236) பனியால் குளம் நிறைதல் இல் !


தஞ்சை மாவட்டம் உரத்தநாடு அருகிலுள்ள பாப்பாநாடு என்னும் ஊரைச் சேர்ந்தவன், திருமாவளவன்.  ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் விடாமுயற்சியால் இளங்கலைப் பட்டப்படிப்பு வரைப் படித்து, ஊராரிடம் நல்லபிள்ளை என்று பெயரெடுத்திருந்தான் ! இளம் அகவையிலேயே தந்தையை இழந்துவிட்ட அவன், தாயாரின் அரவணைப்பில் நல்லொழுக்கமுள்ள பிள்ளையாக வளர்ந்து, நேர்மையின் மறுவடிவாக வாழ்ந்து வந்தான் !

 

வேளாண் நிலம் ஏதுமில்லாத விளிம்பு நிலைக் குடும்பம். தாயார் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்துவந்தார்.. தாயும் மகனும் பனை ஓலை வேய்ந்த கூரைவீட்டில் உனக்கு நான், எனக்கு நீ என்று ஒருவர்க்கொருவர் துணையாக வாழ்ந்து வந்தனர். தாயார் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு பக்கத்திலேயே மகனுக்குச் சிறு கடை ஒன்று வைத்துக் கொடுத்திருந்தார் !

 

இயற்கையாகவே தமிழில் ஈடுபாடு கொண்டிருந்த திருமாவளவன், பிறருடன் உரையாடுகையில் பிறமொழிச் சொற்கள் கலவாமல் பேசுவதில் வல்லமை பெற்றவனாகத் திகழ்ந்தான். அவனிடமிருந்த தமிழார்வம் காரணமாக பாப்பாநாடு ஆ.மதிவாணன், கா.தெற்கூர் தமிழ்த்தென்றல் போன்ற தமிழன்பர்களின் நல்லாதரவைப் பெற்றிருந்தான் !

 

ஒருநாள் அவன் கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கலைக் கல்லூரி முதல்வரைச் சந்திக்கச் சென்றிருந்த போது, அவனது ஓலைக் கூரை வேய்ந்த கடையில் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து போய்விட்டது. கடையில் வைத்திருந்த பொருள்களெல்லாம் தீக்கிரையாகி திருமாவளவனை பெரும் இழப்புக்கு ஆளாக்கிவிட்டது !

 

மாலையில் வீடு திரும்பிய திருமாவளவனும் அவன் தாயாரும் சாம்பலாகிக் கிடந்த கடையைப் பார்த்துக் கலங்கிப் போய்விட்டனர். அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தை தடுமாறிக்கொண்டிருந்த போது, தமிழன்பர் ஆ.மதிவாணன் செய்தி கேள்விப் பட்டு அங்கு வந்து சேர்ந்தார். பட்டுக்கோட்டை சென்றுவிட்டு உரத்தநாடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ்த் தென்றலும், பேருந்திலிருந்து இறங்கி திருமாவளவனைக் காணச் சென்றார் !

 

அருகிலிருந்த ஆலமரத்தடி மேடையில், ஊர்மக்களெல்லாம் ஒன்று கூடி தமிழன்பர் மதிவாணன், தமிழ்த்தென்றல் இருவருடனும் கலந்துரையாடி திருமாவளவனுக்கு எந்தவகையில் உதவி செய்யலாம் என்று ஒருவர்க்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். பாப்பாநாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் உருபா 100 வீதம் பணவுதவி செய்தால் கடைக்கான சிறு கட்டடத்தை எழுப்பி அதில் மீண்டும் கடையை வைத்து, தன் பிழைப்புக்கான ஆதாரத்தை திருமாவளவன் கட்டியெழுப்பிக்கொள்ள முடியும் என்று திரு மதிவாணன் தன் கருத்தைச் சொன்னார் !

 

கூட்டத்தில் கலந்துகொண்ட காவி வேட்டிக்காரர் ஒருவர், வீட்டுக்கு வீடு நன்கொடை கேட்பது தவறான எடுத்துக்காட்டு ஆகிவிடும், அதை நான் ஏற்கமாட்டேன் என்று உரத்துச் சொன்னார். அவரது கருத்து கலகத்திற்கு வித்திட்டது. அதன் விளைவாக இருவேறு கருத்துகள் நிலவியதால் பத்துப் பேரைத் தவிர ஏனையோர் கலைந்து சென்றனர் !

 

பத்துப் பேரில் ஒருவர், நாம் ஆளுக்கு 500 உருபா பணவுதவி செய்யலாம் என்று கூறினார். அவரது கூற்றைக் கேட்ட திரு. மதிவாணன் இதுவே நமது முடிவென்றால் உருபா 5000 திரளும். இதை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்யமுடியும். மழை பெய்தால் தான் குளம் நிரம்பும்; பனி பெய்வதால் குளம் நிரம்பிவிடாது. உருபா 500 என்பது பனித்துளி போன்றது. நமது மூதாதையான புலவர் முன்றுரை அரையனார் தனது நூலான பழமொழி நானூற்றில் சொல்வதைக் கேளுங்கள் !

 

-----------------------------------------------------------------------

பழமொழி நானூறு (பாடல்.236)

-----------------------------------------------------------------------

இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்

முனியார் செயினும் மொழியால் முடியா

துனியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப !

பனியால் குளம் நிறைதல் இல் !

-----------------------------------------------------------------------

 

நம்மில் யாரேனும் ஒருவர் துன்புறுவாராயின் அவர் துன்பத்தைப் போக்க நாம் முழுமுயற்சியுடன் முயல வேண்டும். அவரது மன வருத்தமும் துன்பமும் நீங்க அவருக்கு ஆறுதல் மொழிகள் மட்டும் போதாது, போதுமான அளவுக்கு உதவிகளையும் கட்டாயம் செய்ய வேண்டும். பொழியும் பனியால் குளம் நிரம்பிவிடுமா ? நிரம்பாதல்லவா? அதுபோலத்தான் நண்பரின் துயர் துடைத்திடும் முயற்சி வெறும் பனித்துளிகளாக மட்டும் இல்லாமல் அடர்ந்த மழைத் துளிகளாகவும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான அன்பு !

 

நான், என் சார்பில் உருபா ஐந்தாயிரம் நன்கொடையாகவும், இன்னொரு ஐந்தாயிரம் கடனாகவும் தருகிறேன். இயன்றபோது கடனைத் திருப்பித்தரட்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

 

அங்கு அமர்ந்திருந்த எஞ்சிய ஒன்பது பேரும் திரு.மதிவாணன் அவர்களின் கருத்தினை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டனர் ! அப்புறம் என்ன ? மறுநாள் உருபா நூறாயிரம் (ஒரு இலட்சம்) திருமாவளவன் கைகளில் தவழ்ந்தது. ஒரு ஏணாளுக்குள் (வாரத்திற்குள்) கடை மீண்டும் முளைத்தது; அதை திரு. தமிழ்த் தென்றல் அவர்கள் தலைமையில் திரு.மதிவாணன் அவர்களே திறந்துவைத்து வாழ்த்துரையும் வழங்கினார் !

 

”பனியால் குளம் நிறைதல் இல்” என்னும் முன்றுரை அரையனாரின் சொற்களுக்குத் தான் எத்துணை வலிமை !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்,

[திருவள்ளுவராண்டு: 2055 ஆடவை, 08]

{22-06-2024}

------------------------------------------------------------------------------------------